மாநிலங்களை அறிவோம்: மத்தியப் பிரதேசம்- இந்தியாவின் இதயம்

By பா.அசோக்

மத்தியப் பிரதேசத்தின் இடவமைவை நர்மதை மற்றும் சோன் பள்ளத்தாக்குகள் வரையறுக்கின்றன. பழைய, மத்திய, புதிய கற்காலம் மற்றும் இரும்பு காலங்கள் முதல் மத்தியப்பிரதேச வரலாறு தொடங்குகிறது. பிம்பேத்திகாவில் உள்ள 600 குகைகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கும் சுமார் 500 குகைகளில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் அவர்களின் வாழ்க்கை முறையையும் பதிவு செய்கின்றன.

ஆண்ட பரம்பரைகள்

இந்தியாவின் மத்தியப் பகுதியைச் சாகர்களும் குஷானர்களும் மத்தியப் பிரதேசத்தை உள்ளடக்கிப் பெரும் ராஜ்ஜியமாக மவுரியர்களும் ஆண்டனர். வடக்குப் பகுதியில் சாதவாகனர்களும், மற்றப் பகுதிகளைச் சத்திரபதிகளும் பின்னர் தென்னிந்திய மன்னர் கவுதமிபுத்திர சதாகாரணி ஆதிக்கம் செலுத்தினர்.

அவருக்குப்பிறகு குப்தர்கள், ஹூனர்கள், யசோதர்மன், ஹர்ஷர், ராஷ்ட்டிரகூடர்கள், பராமார்கள், பண்டல்கண்ட் சாண்டெலாக்கள், கோண்டு ராஜ்ஜியம், டெல்லி, துருக்கி, குஜராத் சுல்தான்கள், மொகலாயர்கள், மராட்டியர்கள், ஹோல்கர்கள், மஹாகோசர்கள், சிந்திக்கள், போபாலை ஆண்ட ஆப்கானிஸ்தான் அரசர் தோஸ் மொமது கான் என ஆண்ட பரம்பரையின் பட்டியல் நீளமானது.

பிரிட்டிஸாரின் சி.ஐ.ஏ.

இந்தச் சூழலில்தான் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர். வங்கம் முதல் பாம்பே, மெட்ராஸ் வரை தங்கள் எல்லையை விரிவாக்கினர். இதற்காக மராட்டியர்களை விரட்டியடித்துப் பெரும்பாலான மத்தியப்பிரதேசப் பகுதிகளைக் கைப்பற்றினர். அவற்றில் சில பகுதிகளைச் சென்ட்ரல் இந்தியா ஏஜென்சி (சி.ஐ.ஏ.) என்ற அமைப்பை ஏற்படுத்திக் கண்காணித்து வந்தனர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களில் ம.பி.யின் பங்கு மகத்தானது. முதல் சுதந்திரப் போரில் வீரமரணம் அடைந்த ராணி லட்சுமி பாய் மற்றும் சந்திரசேகர் உள்ளிட்ட விடுதலை வீரர்களைத் தந்த மாநிலம். ஜபல்பூர் கொடி சத்தியாகிரகம், பழங்குடியினர் நடத்திய உப்பு சத்தியாகிரகம் ஆங்கிலேயரை மிரளச்செய்தன.

பிரம்மாண்ட உதயம்

1947-ல் நாட்டின் விடுதலைக்குப்பிறகு மத்தியப் பாரதம், விந்திய பிரதேசம் மற்றும் போபால் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 1956-ல் மாநிலங்கள் மறு சீரமைப்பு சட்டத்தின் கீழ் இவற்றை ஒன்றிணைத்து இந்தியாவின் முதல் பெரிய மாநிலமாக உருவெடுத்தது மத்தியப்பிரதேசம். போபால் தலைநகரானது.

கடந்த 2000 நவம்பர் 1-ல் சில பகுதிகளைப் பிரித்துப் புதிதாகச் சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் முதல் பெரிய மாநிலம் என்ற பெருமையில் இருந்து ஒருபடி இறங்கி, ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்துக்கு வந்தது.

எல்லைகள்

மேற்கே குஜராத், வடமேற்கே ராஜஸ்தான், வடகிழக்கே உத்தரப்பிரதேசம், கிழக்கே சத்தீஸ்கர், தெற்கே மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நடுவே ம.பி. அமைந்துள்ளது. வட மற்றும் தென்னிந்தியாவின் எல்லையாக நர்மதை ஆறு விளங்குகிறது.

மாநில மக்கள் தொகை 7.26 கோடி. 75 சதவீதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். 20 சதவீதம்பேர் மலைவாழ் மக்கள். டிராவிட், சஹாரியா, பாரியா, படால்கோட் பாரியா, பீல், சாண்டியா, கோலர்கள், பாணிக்கா, தானுக், சவுர் கோண்ட் முக்கியப் பழங்குடிகளாகும்.

மாநிலத்தின் முதல் மொழி ஹிந்தி. ஆங்கிலம் இரண்டாவது மொழி. மராத்தி, உருது, மால்வி, பண்டேலி, பாஹேலி, நிமாடி, தெலுகு, பிலோடி, கோதி, கொர்கு, கால்டோ, நிகாலி ஆகிய மொழிகளும் புழக்கத்தில் உள்ளன.

முதன்மை தொழில்

விவசாயமே முதன்மை தொழில். 23,233 ஹெக்டேரில் சாகுபடி நடக்கிறது. கோதுமை, சோயா, சோளம், பூண்டு முக்கிய விளைபொருள்கள். இவை தவிர, நிலக்கடலை, பருத்தி, கரும்பு, எண்ணை வித்துகள், சிறு தானியங்கள், பருப்பு வகைகளின் சாகுபடியும் நடக்கிறது. ஓபியம் உற்பத்தியில் ம.பி.யே முதலிடம்.

நர்மதா, சம்பல், தபதி, பேட்வா, சோன், ஷிப்ரா, காளிசிந் மற்றும் தாவா நதிகளும் கென், சோனார், பார்னா மற்றும் டான் ஆறுகளும் வளம் சேர்க்கின்றன.

கனிம வளத்தில் 2-வது பணக்கார மாநிலம். வைரம், சுண்ணாம்புக்கல், இரும்பு, மாங்கனீசு, பாக்சைட், செப்பு, பாஸ்பேட், டோலமைட் மற்றும் நிலக்கரி தாதுகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. மொத்த நிலப்பரப்பில் 30 சதவீதம் வனம். சிமெண்ட் தயாரிப்பில் 3-வது இடம்.

படிப்பறிவு 70.6 சதவீதம். பாலின விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு 930 பெண்கள். இந்துக்கள் 91.15 சதவீதம். இஸ்லாமியர்கள் 6.37 சதவீதம். கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமண மதத்தினர் 2 சதவீதம் வசிக்கின்றனர்.

உலகப்புகழ் பெற்ற திருவிழா

பெரும்பாலான பண்டிகைகள் விவசாயிகளின் வேலை நாட்களைப் பொருத்தே கொண்டாடப்பட்டு வருகின்றன. சிம்ஹாஸ்தா, சிவராத்திரி, ராமநவமி, ஹிரா பூமியா, பிர்புதான், நாகாஜி, டேடாஜி, மகாமிருத்துயன்ஜெய் பண்டிகைகளும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பாபா ஷகாபுதீன் அவுலியா மற்றும் 3 நாள் திருவிழாவான ஆலாமி தாபிலீகி இஸ்திமா பண்டிகை பிரசித்திபெற்றது. இதில் பங்கேற்க உலகம் முழுவதுமிருந்து இஸ்லாமியர்கள் வருகின்றனர்.

கஜூராஹோ

ஆதி முதலே கலை இலக்கியத்தில் கோலோச்சி வந்துள்ளது மத்தியப் பிரதேசம். பராமரா மன்னன் போஜ் பல்துறைகளில் படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர். சாண்டெலா வம்சத்தினர் உலகப் புகழ்பெற்ற கஜூராகோ கோயில் நகரத்தை இங்குதான் உருவாக்கினர்.

மேலும் இசை மற்றும் நாட்டிய விழாக்களும் அரங்கேறி வருகின்றன. இதன்படி லோக்ரங் மற்றும் லோக்ரன்ஜன், தான்சேன் இசைவிழா, கான்கவுர், பாதை, பாரெடி, நவுராதா, அகிராய், பகோரியா உஸ்தா அலாவுதீன்கான் இசைவிழா, காளிதாஸ் சமரோ, உஜ்ஜியினி மற்றும் கஜூராஹோவில் நடைபெறும் நாட்டிய விழாக்கள் முக்கியமானவை.

இவைத் தவிர தியாகம், வீரம், காதல், கடமை மற்றும் தீரச்செயல்களைக் கதைகளாகக் கூறும் வகையிலான நாட்டுப்புறப் பாடல்கள் பிரபலமானவை. ஓவியங்கள் தீட்டுவதில் இம்மாநில மக்கள் வல்லவர்கள். பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசையை வளர்த்தெடுத்ததில் முக்கியப் பங்கு இந்த மாநிலத்துக்குண்டு.

மகுடங்கள்

சான்ச்சியில் அசோகர் கட்டிய சான்சி ஸ்தூபிகள், போஜ்பூரில் கட்டிமுடிக்கப்படாத அழகிய சிவன் கோயில், பச்மாரியின் சாந்தமான அழகு, ஒளிரும் பளிங்குப் பாறைகள், பென்ச், பண்ணா, சாத்புரா, கண்ஹா மற்றும் பந்தவ்கார்ஹ் புலிகள் சரணாலயங்கள், மாதவ், பாசில், வான் விஹார் தேசியப் பூங்காக்கள், ஆதி மனிதர்களின் குகை வாழ்விடங்கள், தனித்த புகழுடைய கஜுராஹோ கோயில் ஆகியவை மத்தியப் பிரதேசத்தின் மகுடங்கள்.

நாட்டின் நடுவே அமைந்ததால் மட்டுமல்ல, செறிவான கலை கலாச்சாரங்களின் குறியீடாகத் திகழும் மத்தியப்பிரதேசம், இந்தியாவின் இதயம் என அழைக்கப்படுவது பொருத்தமானதுதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்