நியுயார்க் ரன்வே ஃபேஷன் ஷோவில் கரேன் க்ரெஸ்போ நடந்து வந்தபோது, பார்வையாளர்கள் அனைவரும் மெய்சிலிர்த்தனர். எழுந்து நின்று நீண்ட நேரம் கைகளைத் தட்டிக்கொண்டிருந்தனர். ஃபேஷன் உலகில் புதிய வரலாறு படைத்திருந்தார் கரேன். இரண்டு செயற்கைக் கைகளுடனும் இரண்டு செயற்கைக் கால்களுடனும் அவர் கேட் வாக் செய்திருந்தார்!
அழகான நீண்ட கை, கால்களுடன் 27 வயது வரை துள்ளித் திரிந்தார் கரேன். பிறருக்கு உதவ வேண்டும் என்ற விருப்பத்தில் நர்சிங் படித்து, பிரபல லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் பணிபுரியப் பதிவு செய்திருந்தார்.
2011-ம் ஆண்டு தண்டு மூளைச் சவ்வு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் கரேன். வேகமாக அவரது கைகளும் கால்களும் சுருங்கிப் போயின. மூக்கு முற்றிலும் அழிந்து போனது. காதுகள் பாதிப்படைந்தன. மேல் உதடு காணாமல் போனது. முடி உதிர்ந்து போனது. கேட்கும் சக்தியை இழந்தார். மூளையில் ரத்தம் உறைந்து போனது. சிறுநீரகம் வேலை செய்ய மறுத்தது. சுவாச மண்டலமும் பாதிக்கப்பட்டது.
இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது. பிழைக்கக்கூடிய வாய்ப்பு 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். 15 நாட்கள் கோமாவில் இருந்தார். 5 மாதங்கள் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டார்.
மருத்துவர்களின் கவனிப்பு, பெற்றோரின் அரவணைப்பு, நண்பர்களின் அக்கறையால் கண் திறந்தார் கரேன். கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பியது. ஏஞ்சல் என்று கொண்டாடப்பட்ட தான், தனக்கே அடையாளம் தெரியாதபடி மாறிப் போனதில் நிலைகுலைந்து போனார். பெற்றோரும் மருத்துவர்களும் அவர் பிழைத்த அதிசயத்தை எடுத்துச் சொல்லி, நம்பிக்கையூட்டினர். புத்திசாலியான கரேன் விரைவில் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, தன்னைத் தயார் செய்துகொண்டார்.
காது, உதடு என்று பாதிக்கப்பட்ட ஒவ்வோர் உறுப்புக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. உருவத்திலும் உள்ளத்திலும் புதிய பெண்ணாக உருவெடுத்தார் கரேன். நோய்க்கு முன்பு அவர் இதயம் முழுவதும் அழகான கனவுகள் நிறைந்திருந்தன. இப்பொழுதோ இதயம் முழுவதும் தைரியம் ஆக்கிரமித்திருந்தது. மகளுக்காக வேலையை ராஜிநாமா செய்துவிட்டு, கவனித்துக்கொண்டார் கரேனின் அம்மா. அறுவைச் சிகிச்சைகளுக்கும் சக்கர நாற்காலிக்கும் ஏராளமாகச் செலவானது. சுமார் 50 லட்சம் செலவில் செயற்கைக் கை, கால்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் வரும் வழியில் செயற்கைக் கைகள் களவு போய்விட்டன.
மீண்டும் செயற்கைக் கைகள் வாங்கக்கூடிய அளவுக்குப் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. வருத்தத்தில் இருந்த கரேனின் கவனத்தை ஈர்த்தது தொலைக்காட்சியில் நடந்துகொண்டிருந்த ஃபேஷன் ஷோ. சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, டாக்டர் டேனியல் ஷேபக் வலம் வந்தார். உடனே கரேனுக்கும் ஃபேஷன் ஷோவில் பங்கேற்கும் எண்ணம் வந்தது. டிசைனர் கெர்ரி ஹாம்மருக்கு ஒரு மெயில் அனுப்பினார். ‘எந்த வடிவத்திலும் எந்த அளவிலும் அழகு வரலாம். எதையும் சரி என்று சொல்வதற்கோ, தவறு என்று சொல்வதற்கோ முடியாது. விரைவில் தொடர்புகொள்கிறேன்’ என்று பதில் வந்தது.
நீண்ட காலத்துக்குப் பிறகு கரேனின் முகத்தில் மகிழ்ச்சி! இரண்டு நாட்களில் இருவரும் ஸ்கைப் மூலம் பேசினர். கரேனின் அபாரமான தன்னம்பிக்கையும் நேர்மறையான சிந்தனைகளும் தனக்கு மிகவும் திருப்தியளிப்பதாகக் கூறினார் ஹாம்மர்.
விரைவில் இருவரும் நேரில் சந்தித்தனர். கரேனுக்கு ஃபேஷன் ஷோவுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆடைகள் தயாராயின. தலை, முக அலங்காரங்கள் செய்து பார்க்கப்பட்டன. தனக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, ஒரு சிறிய தவறால் கூடத் தோல்வியடைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் கரேன். ஃபேஷன் ஷோவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கரேனுக்கு செயற்கைக் கைகளைப் பரிசாக வழங்கினார் ஹாம்மர். ஆனந்த அதிர்ச்சியில் மூழ்கினார் கரேன். ஹாம்மருக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருந்தார்.
புகழ்பெற்ற ரன்வே ஃபேஷன் ஷோ ஆரம்பித்தது. திரைக்குப் பின்னால் இருந்த கரேனின் கைகள் சரியாகப் பொருந்தவில்லை. எல்லோருக்கும் பதற்றமானது. சட்டென்று தானே சரி செய்துகொண்டு, மேடைக்கு வந்தார் கரேன். சிவப்பு ஆடையில் முகம் முழுவதும் புன்னகையைப் படரவிட்டபடி, கேட் வாக் செய்தார். மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது.
‘ஒரு செவிலியராகச் சராசரி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்திருப்பேன். ரன்வே ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்பது எத்தனையோ லட்சக்கணக்கானவர்களின் கனவு. அந்த வாய்ப்பை வழங்கிய என் நோய்க்கும் டிசைனர் ஹாம்மருக்கும் என் நன்றிகள். உடல் முழுவதும் குறைபாடுகளுடன் சாவின் நுனி வரை சென்று மீண்ட நான், இன்று உலகின் கவனத்தைப் பெற்றிருக்கிறேன். எந்தத் துன்பத்தையும் நம் முயற்சி, தன்னம்பிக்கையால் துரத்தியடிக்க முடியும். வாழ்க்கை மிகவும் குறுகியது. எதற்காகவும் தேங்கிவிடாமல் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்’ என்கிறார் கரேன் க்ரெஸ்போ.
விரைவில் செவிலியராகப் பொறுப்பேற்க இருக்கும் கரேன், தன்னைப் போலப் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதியும் சேகரித்து அளிக்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago