பெங்களூருவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது சித்ரதுர்க்கா மாவட்டம். அதன் தலைநகரும் சித்ரதுர்க்காதான். அங்கே 1,200 ஆண்டுகால வரலாற்றைப் பேசியபடி நிற்கிறது சித்ரதுர்க்கா கோட்டை.
மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமான சித்ரதுர்க்காவுக்கு மேலும் புகழைச் சேர்த்துவிட்டார் ஜோதிராஜ் என்ற தமிழ் இளைஞர். முப்பது வயதே நிறைந்த இவரது சாகஸங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்து விடுகிறார்கள்.
சித்ரதுர்க்கா கோட்டையின் செங்குத்தான சுவர்களில் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல், விறுவிறுவென ஏறியும், தலைகீழாக இறங்கியும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். 300 அடி உயரம் வரையிலான செங்குத்தான கோட்டைச் சுவரில் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் கைகளை ஊன்றி, சிலந்தி போல் மேலும், கீழும் ஏறி இறங்கி அனைவரது புருவத்தையும் உயரச்செய்கிறார். இவரது சாகஸத்துக்கு அங்குவரும் சுற்றுலா பயணிகள் கொடுக்கும் பரிசுகளும், அன்பளிப்புகளும் ஏராளம். அவைதான் அவருக்கு ஊக்க மருந்து.
இவரது திறமையைக் கண்ட பெங்களூர் மாநகரவாசிகள் தங்களது அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்து அடுக்ககங்களில் அவரை ஏறச்சொல்லி அதைப் பார்த்து ரசிக்கிறார்கள். இவர் நாயகனாக நடித்து ஒரு திரைப்படமும் வெளியாகி வெற்றியும் பெற்றுவிட்டது.
ஆனால் அடுத்த வாய்ப்புகள் வராததால் மீண்டும் சித்ரதுர்க்கா கோட்டையில் ஜோதிராஜ் தன் ஸ்பைடர்மேன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்வதோடு பள்ளி மாணவர்களுக்கு மலையேற்றம் சொல்லித் தருகிறார். இந்த அசாத்திய தமிழ் இளைஞனைப் பெரும்பாலான கன்னடர்கள் அறிந்துவைத்துள்ளனர். அப்படிப்பட்டவர் ஸ்பைடர் மேன் ஆனதன் பின்னணியில் அதிர்ச்சி தரும் ஒரு ப்ளாஷ் பேக் ஒளிந்திருக்கிறது. அது அவரது தற்கொலை முயற்சி.
விரட்டிய வறுமை
ஜோதிராஜின் சொந்த ஊர் சென்னையை அடுத்த விழுப்புரம். ஆனால் அவரது பெற்றோர் கட்டடத் தொழிலாளிகள். வேலைதேடி கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் குடியேறியவர்கள். ஜோதிராஜ் பிறந்து வளர்ந்தது எல்லாம் சித்ரதுர்காவில்தான். சிறுவயது முதலே வேகமாக ஓடுவான். ஆனால் அவனை உடற்கல்வி ஆசிரியர் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை.
நன்றாகக் கபடி விளையாடுவான். ஆனாலும் கன்னட ஆசிரியர் அவனைக் கண்டுகொள்ளவில்லை. இதைவிடக் கொடுமை, அவனுக்கு வீட்டில் காலை உணவு இல்லை. பட்டினியோடு பள்ளி வரும் அவன் பள்ளியில் போடப்படும் இலவச மதிய உணவுவை எண்ணியபடி வகுப்பறையில் பசியுடன் அமர்ந்திருப்பான். இதனால் படிப்பும் ஏறவில்லை. எட்டாம் வகுப்பில் தோல்வியுற்றதால், அவனைப் பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் செல்லும்படி தலைமயாசிரியர் கூறிவிட்டார்.
குரங்குகளே குரு
ஏழைப் பெற்றோர் என்பதால் எதையும் எதிர்த்துக் கூற முடியவில்லை. படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டார் அப்பா. பிறகு அப்பா, அம்மாவுடன் சேர்ந்து கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது மன உளைச்சலுக்கு ஆளான ஜோதிராஜ், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, தனது வீட்டருகே இருந்த பழைய கோட்டைக்குப் போனார். அங்கிருந்த மலையில் ஏறிக் கீழே குதித்தார்.
ஆனால் அப்போது அடித்த எதிர்க் காற்று அவரை அதல பாதாளத்தில் தள்ளாமல் அருகில் இருந்த பாறை இடுக்கில் தள்ளிவிட்டது. உடல் முழுதும் அடி. மண்டை உடைந்தது ரத்தம் வழிந்தது. மயங்கிப்போனார். மயக்கம் தெளிந்து எழுந்தபோது அவர் அருகில் சில குரங்குகள் நின்று கொண்டிருந்தன.
மிகப் பலவீனமான உடலுடன், அங்கிருந்து எப்படி இறங்கி உயிர்பிழைப்பது என்று யோசித்தபோது குரங்குகள் பாறைகளைப் பிடித்தபடி கவனமாக ஏறிச்செல்வதைக் கண்டார். ஒரு குரங்கைப் போலவே முயன்ற ராஜ், முப்பது அடி உயரத்தை மெல்ல மெல்ல ஏறி உயிர் தப்பினார். தான் உயிர் பிழைத்தற்குக் கடவுளும் குரங்குகளுமே காரணம் என்று நினைத்த அவர், தனது தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.
சித்ரதுர்கா கோட்டையைச் சுற்றிபார்க்க வரும் சுற்றுலா பயணிகளிடம் தண்ணீர் பாட்டில் விற்று வருவாய் ஈட்டி வந்த ராஜ், தனது வருவாயின் ஒரு பகுதியை அங்கு வாழும் குரங்குகளுக்குப் பொறி, பாப்கார்ன், வாழைப்பழம் வாங்கிக் கொடுத்துத் தனது நன்றியைக் காட்டினார்.
பிறகு அங்கு வரும் பள்ளி மாணவர்களைச் சந்தோஷப்படுத்து வதற்காகத் தனது 20 வயதில் பத்தடி உயரம் வரை கோட்டைச் சுவரில் ஏறிக்காட்டுவார். ஒரு கட்டத்தில், அங்கு வாழும் குரங்குகள் மிக வேகமாகக் கோட்டையின் எல்லாப் பகுதிகளுக்கும் ஏறிச் செல்வதைப் பார்த்த அவர், ஏன் அவற்றைப் போல நாமும் ஏறக் கூடாது என்று முயல ஆரம்பித்தார். இதுதான் ஜோதிராஜ் கர்நாடகத்தின் ஸ்பைடர் மேன் ஆன கதை.
லட்சியம்
தன் வெற்றியின் ரகசியம் பற்றிக் கேட்டால் “4 ஆண்டுகளுக்கு முன்பு நான் சாதாரண மனிதன். அப்போது நான் சுவரில் ஏறப் பயிற்சி எடுத்தபோது ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.
அவர்கள் நான் சுவர் ஏறுவதைப் பார்த்ததும், இன்னொரு முறை ஏறுங்கள் என்று சொல்லி கை தட்டி என்னை உற்சாகப்படுத்துவார்கள். அந்த ஊக்கமும், கைதட்டலுமே வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தன” என்கிறார்.
எதிர்கால லட்சியம் குறித்து கேட்டால், “ உலக அளவில் சிறந்த ஸ்பைடர் மேனாக உருவாக வேண்டும் என்பதே லட்சியம். அமெரிக்காவின் எம்பயர் பில்டிங் கட்டிடத்தில் ஏறி கின்னஸ் சாதனை படைக்க வேண்டும்” எனும் இவர் தற்போது கன்னட சினிமா ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கத்தில் உறுபினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
உள்ளூர் மாணவர்களுக்கு டைவடிக்கவும், உயரமான மலைகளில் ஏறவும் பயிற்சி அளிக்கிறார். இதற்காக இவர் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை என்பதுதான் இன்னும் ஆச்சரியம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago