எதிர்காலத்தில் என்ன படிப்பு படிக்கப் போகிறோம் என்பதற்கான அச்சாரம் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெறும் மதிப்பெண்ணைப் பொறுத்தே பெருமளவு முடிவு செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் இந்த பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாலே, வாய்ப்புகள் திறந்து கிடக்கும் உயர்கல்வியில் காலடி எடுத்து வைக்க முடியும். முக்கியத்துவம் வாய்ந்த 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான வழிகாட்டுதல் இந்த வாரம் முதல் தொடங்குகிறது.
பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் அதிக அளவு மதிப்பெண் பெறவும், தேர்ச்சி பெறவும் வழிகாட்டுகிறார் தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி, பட்டதாரி தமிழ் ஆசிரியர் இரா.தாமோதரன்.
தமிழ் முதல் தாள் - ஒரு மதிப்பெண்
தமிழ் முதல் தாளைப் பொறுத்தவரை வினா எண் 1 முதல் 20 வரை ஒரு மதிப்பெண் வினாக்கள். பிரிவு 1. உரிய விடை தேர்ந்தெடுத்தல் (6), கோடிட்ட இடம் (6), பொருத்துதல் (4), வினாவாக மாற்றுதல் (4) பகுதிகள் அடங்கியது. உரிய விடையும் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதியும் புத்தகத்தில் உள்ளிருந்தும் கேட்கப்படும். முந்தைய பொதுத் தேர்வு வினாக்களில் இருந்தும் கேட்கப்படும். பொருத்துக பகுதியில் புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களில் இருந்துவரும். வினாவாக மாற்றுக பகுதியில் புத்தகத்தில் உள்ளதும் பொதுவாகவும் கேட்கப்படும்.
2 மதிப்பெண்கள்
2 மதிப்பெண் பகுதியில் (பிரிவு 2) செய்யுளுக்கும், உரைநடைக்கும் தனித்தனியே வினாக்கள் அமையும். செய்யுள் பகுதிக்கு 3, 5, 6, 7, 9 இயல்களில் உள்ள வினாக்களை வாசித்தால் போதுமானது. இவற்றில் 10 மதிப்பெண்களை முழுமையாகப் பெறலாம். இதேபோன்று உரைநடை குறு வினாப் பகுதிக்கு 1,5,6,7,9 இயல்களை வாசித்தால் போதுமானது. முழு மதிப்பெண்ணான 10-யை எடுத்துவிடலாம். இவ்விரண்டுக்கும் முந்தைய பொதுத் தேர்வு வினாப் பகுதிகளை மீண்டும் எழுதிப் பாருங்கள்.
4 மதிப்பெண்கள்
இரண்டு மதிப்பெண்கள் பகுதியைப் போன்றே 4 மதிப்பெண்கள் பகுதியில் (பிரிவு 3) செய்யுளும் உரைநடையும் தனித்தனியாகக் கேட்கப்படும். ஒவ்வொரு பகுதியிலும் 5 வினாக்கள் கேட்கப்படும். 3 வினாக்களுக்கு விடைகள் எழுத வேண்டும். எனவே, செய்யுள் சிறு வினாப் பகுதிக்காகக் கம்பராமாயணம், சீறாப்புராணம், நிற்க நேரமில்லை பகுதிகளை வாசித்தால், முழு மதிப்பெண் 12-யைப் பெற்றுவிடலாம். உரைநடை சிறு வினாப் பகுதிக்காக அண்ணல் அம்பேத்கர், பேச்சுக்கலை, தொன்மைத் தமிழகம் பாடங்களை வாசித்தால் போதும். இந்த மூன்று இயல்களில் இருந்து மூன்று வினாக்கள் வரும் என்பதால் முழுமையாக 12 மதிப்பெண்ணைப் பெற்றுவிடலாம்.
5 மதிப்பெண்கள்
பாடல் தனியாகவும் உரைநடை தனியாகவும் (பிரிவு 4) கொடுக்கப்படும். அவற்றின் கீழ் ஐந்து வினாக்கள் தரப்படும். பாடலைப் படித்து விடை எழுதுதல் பகுதிக்காக நற்றிணை, புறநானூறு, தமிழ்விடு தூது, கலித்தொகை, நந்திக் கலம்பகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், நிற்க நேரமில்லை பகுதிகளை வாசிக்க வேண்டும். உரைநடையில் எப்பகுதியும் கேட்கப்படலாம் என்றாலும், அது எளியதுதான். முந்தைய பொதுத் தேர்வு வினாக்களை வாசிப்பதும் பயிற்சி பெறுவதும் நலம் தரும்.
8 மதிப்பெண்கள்
இதை நெடு வினாப் பகுதி எனலாம். செய்யுள் பகுதியில் இரண்டு வினாக்கள் தரப்படும். ஒன்றுக்கு விடை எழுதவேண்டும். அதேபோல் உரைநடைக்கு இரண்டு வினாக்கள் தரப்படும். ஒன்றுக்கு விடை எழுத வேண்டும். செய்யுள், உரைநடை முதல் வினா 1 முதல் 5 இயலிலும், இரண்டாவது வினா 6 முதல் பத்து இயலிலும் கேட்கப்படும். தவிரவும் நெடு வினாவைப் பொறுத்தவரை முதல் 5 இயல்கள் அல்லது கடைசி 5 இயல்களைப் படித்தால் போதுமானது.
பொதுத் தேர்வைப் பொறுத்தவரை செய்யுள் பகுதியில் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம், திருக்குறள் (7வது இயல்), கலித்தொகை அதிகம் கேட்கப்பட்டுள்ளது. அதிலும், திருக்குறள் 7-வது இயல் பகுதி, கலித்தொகை நெடு வினாக்கள் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டுள்ளன. உரைநடைப் பகுதியைப் பொறுத்தவரை உயர்தனி செம்மொழி, அண்ணல் அம்பேத்கர், பேச்சுக்கலை, தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள், பல்துறை வேலைவாய்ப்புகள் போன்ற பகுதிகளில் அதிகம் கேட்கப்பட்டவை. அதிலும் தமிழ் மொழியில் அறிவியல் சிந்தனைகள், பல்துறை வேலைவாய்ப்புகள் பாடத்தில் உள்ள வினாக்களை எழுதிப் பார்ப்பது பயன்தரும்.
10 மதிப்பெண்கள்
கடைசியாக அமைவது மனப்பாடப் பகுதி. நெடு வினாவும் மனப்பாடப் பகுதியும் பிரிவு 5-ல் அமைகிறது. இரண்டு திருக்குறள் (தோன்றும், முடியும்) பொது மனப்பாடப் பகுதி ஒன்று அல்லது இரண்டு கேட்கப்படும். திருக்குறள்களுக்கு 4 மதிப்பெண். ஒரு பொது மனப்பாடப் பகுதி கேட்டால் 6 மதிப்பெண் என்றும், இரண்டு கேட்டால் 3 + 3 மதிப்பெண்கள் என அமையும். மனப்பாடப் பகுதியைப் பொறுத்தவரை கம்பராமாயணம், பெரிய புராணம், சீறாப்புராணம் பகுதிகளில் அதிகப் பயிற்சி செய்யவும்.
தமிழ் இரண்டாம் தாள்: ஒரு மதிப்பெண்
முதல் 20 கேள்விகள் 1 மதிப்பெண் (பிரிவு 1) தருபவை. சரியான விடை தேர்க, கோடிட்ட இடம், சுருக்கமாக விடையளித்தல் (மொழிப் பயிற்சி) பகுதியை வாசிக்கவேண்டும். புத்தகத்தின் புறவய வினாப் பகுதியிலும் உட்பகுதியிலிருந்தும் கேட்கப்படும் என்பதால் அதிகக் கவனம் தேவை. சில வேளை கோடிட்ட இடத்திலிருந்து சரியான விடை தேர்கவிலும், சரியான விடை தேர்க பகுதியிலிருந்து கோடிட்ட இடமும் கேட்கப்படும். சுருக்கமாக விடையளித்தல் பகுதிக்குப் புத்தகத்தில் உள்ள பயிற்சிகளே போதும். அரிதாகப் பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட சில வினாக்களும் வரும்.
2 மதிப்பெண்கள்
வினா எண் 21-27 வரை (பிரிவு 2) உள்ளவை இலக்கண வினா-விடை பகுதி. ஏழு வினாக்களில் ஐந்துக்கு விடையளிக்க வேண்டும். இதற்கு எழுத்து, வினா வகை விடை வகை, பொருள் இலக்கணம், புறப்பொருள், புணர்ச்சிப் பகுதிகளை மட்டும் வாசித்தால் போதும்.
5 மதிப்பெண்கள்
வினா எண் 28-39 வரை உள்ள இப்பகுதிக்கான கேள்விகள் பிரிவு 3-ல் அமையும். 7 பகுதிகளாகக் கேட்கப்படும். பகுதி 1-ல் பா வகை, அணி, அலகிடுதல் அமைகின்றன. பகுதி 2-ல் துணைப் பாடப் பகுதிக்கு 3 வினாக்கள் கேட்கப்பட்டு ஒரு வினா எழுதப்படும். பகுதி 3-ல் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம், அரபு எண் மாற்றுதல் அமையும். பகுதி 4-ல் ஆங்கில உரைப் பத்தியை, பழமொழியைத் தமிழாக்கம் செய்தல் அமையும். பகுதி 5-ல் கதையை நிறைவு செய்தல் அல்லது கவிதை எழுதுதல் கேட்கப்படும். பா நயம் பாராட்டுதல் பகுதி 5-ல் அமையும். படிவம் நிரப்புதல் பகுதி 6-ல் கேட்கப்படும். பகுதி 7-ல் சூழலுக்கு ஏற்ற விடை எழுதுதல் அமையும். இவ்வினாக்கள் அனைத்தும் புத்தகத்தில் இருந்தே கேட்கப்படுகின்றன.
10 மதிப்பெண்கள்
இப்பகுதியில் கடிதமும் கட்டுரையும் அமையும். இரண்டு தலைப்பிட்ட கடிதங்களில் ஒன்று எழுதவேண்டும். பொதுக் கட்டுரைகள் இரண்டு கேள்விகளில் ஒன்றுக்கு எழுதவேண்டும். விண்ணப்பக் கடிதங்களிலும், பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட கட்டுரைகளையும் திரும்ப எழுதிப் பார்த்தால் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புண்டு.
தமிழில் 100 பெற
எவ்வளவுதான் விழுந்து விழுந்து படித்தாலும் தமிழில்100-யை நெருங்க முடியவில்லை என்பவர்களுக்குச் சில வார்த்தைகள்:
கருத்து அடிப்படையில் (பாயிண்ட்) எளிமையாக, தெளிவாக, குறித்த அளவில் விடை எழுதுங்கள். விடைப் பகுதிகளுக்கு மையத் தலைப்பு, உட் தலைப்பு இடுங்கள். விடையில் உள்ள முக்கியமான வார்த்தைகளைக் கருப்பு மையில் எழுதுங்கள். அடித்தல், திருத்தல் இல்லாமல் தெளிவாக எழுதுங்கள். தவறான வார்த்தையை, எழுத்தைப் பென்சிலால் சிறிய கோடிட்டுவிட்டுத் திரும்ப மையினால் எழுதுங்கள். முக்கியமாக சந்திப்பிழை இல்லாமல் எழுதுங்கள். ஒரு விடைக்கும் இன்னொரு விடைக்கும் இடையே சீராக இடைவெளியை விடுங்கள். விடைகளைப் பக்கம் பக்கமாக எழுதுவது மதிப்பெண் தராது. தெளிவான விடைதான் மதிப்பெண் தரும்.
அரசு வெளியிட்டிருக்கும் பொதுத் தேர்வு விடைக் குறிப்புகள் போதுமானவை. பொதுத் தேர்வுக்காக அரசு தேர்வு இயக்ககம் வெளியிடும் அரசு விடைத்தாள் குறிப்பேட்டின்படிதான் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே, 100 மதிப்பெண் பெற எளிய வழி புத்தகத்தைப் பின்பற்றுவதுதான். எளிய வடிவில், தெளிவாக, குறித்த அளவில் எழுதப்படும் விடைக்கே, முழு மதிப்பெண் கிடைக்கும்.
தேர்ச்சி அடைய
தமிழ் முதல் தாளில் ஒரு மதிப்பெண் வினா-விடை, 2 மதிப்பெண்ணுக்குப் பொதுத் தேர்வு வினாக்கள், 4 மதிப்பெண்ணுக்குச் சீறாப்புராணம், சாதனைப் பூக்கள், அண்ணல் அம்பேத்கர், தொன்மைத் தமிழகம் பகுதிகள் போதும். இவற்றில் மட்டும் பயிற்சி செய்தாலே (1 மதிப்பெண்ணில் 20, 2 மதிப்பெண்ணில் 10, 4 மதிப்பெண்ணில் 16 . பத்தி வினா விடையில் 5 என) ஏறத்தாழ 50 மதிப்பெண் வந்துவிடும்.
தமிழ் இரண்டாம் தாளில் ஒரு மதிப்பெண் 20, அலகிடுதல் 5, மொழியாக்கம் 10, கவிதை 5, படிவம் நிரப்புதல் 5, சூழல் வினா விடை 5, கடிதம் 10 எனப் பயிற்சி பெற்றால் 60 மதிப்பெண் கிடைத்துவிடும். இனி என்ன? மாணவர்கள் நினைத்து முடியாதது ஒன்று உண்டா?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago