ஆடிட்டர், நிர்வாக மேலாண்மை போன்ற மேற்படிப்புகளுக்கும், அரசின் அமைச்சு பணி முதல் பன்னாட்டு நிறுவனங்களின் பணியிடங்கள்வரை வேலை வாய்ப்புக்கும் அடித்தளமிடும் பாடங்களில் முக்கியமானது கணக்குப்பதிவியல்.
பத்தாம் வகுப்பில் சுமாரான மதிப்பெண்கள் கிடைத்த குறையைச் சரி செய்ய, மேல்நிலைக் கல்வியில் இந்தப் பாடத்தைத் தேர்வு செய்பவர்கள் அதிகம். அதற்கேற்ற வகையில் தேர்வுத் தயாரிப்புக் குறிப்புகளை வழங்குகிறார், காஞ்சிபுரம் மாவட்டம் கருங்குழி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் (கணக்குப் பதிவியல்) சா.உதயகுமார்:
தியரி பாதி, கணக்கு மீதி
ஏழு பாடத் தலைப்புகளை உள்ளடக்கிய கணக்குப் பதிவியல் பாடத்தின் தேர்வு வினாத்தாள், சரி பாதிக்குத் தியரி மற்றும் கணக்குக் கேள்விகளை உள்ளடக்கியது. இரண்டும் முக்கியம் என்ற போதும், சாய்ஸ் தேர்வில் அதிக மதிப்பெண் அள்ளித்தரும் என்று தியரியைவிட கணக்குக் கேள்விகளைச் சிலர் தேர்ந்தெடுப்பார்கள்.
ஆனால், சரியான பாயிண்ட்களை முன்வைத்து எழுதும் தியரி வினாக்களே முழு மதிப்பெண்களைத் தருவதாகவும், கணக்குக் கேள்விகளில் வரும் கவனக்குறைவு பிழைகளால் மதிப்பெண் சரியவும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கு மாறாகக் கணக்குக் கேள்விகளை மையமாகக் கொண்டு தயாரிப்பைத் தொடங்கிவிட்டவர்கள், அடிப்படைக் கணிதத்தில் தேர்ச்சியும், அவற்றை அடிக்கடி தீர்ப்பதில் பயிற்சியும் பெறுவது நல்லது.
திருப்புதல் வினா தேர்ச்சி
தொடக்கத்திலிருந்து படிப்பவர்களானாலும், தற்போதுதான் படிக்க ஆரம்பிப்பவர்களானாலும், முந்தைய 5 ஆண்டுகளின் வினாத்தாள்களுக்கு விடையளித்துப் பயிற்சி பெறுவது நல்லது. மதிப்பெண் குவிப்பவர்கள், ஜஸ்ட் பாஸ் இலக்கில் இருப்பவர்கள் எனப் பல தரப்பினருக்கும் இந்த பழைய வினாத்தாள்களே போதும். புத்தகக் கேள்விகளைப் படித்தவர்களும்கூட, மீதமுள்ள நாளின் திருப்புதலுக்கு இம்முறையையே பின்பற்றலாம்.
சோதிக்கும் ஒரு மதிப்பெண் பகுதி
பிரிவு ‘அ’வின் 1 மதிப்பெண் கேள்விகள் 30-ல் முதல் 15 வினாக்கள் கோடிட்ட இடத்தை நிரப்புவதாகவும், ஏனையவை பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுப்பதாகவும் இருக்கும். இதில் முதல் பாதியை நினைவிலிருந்து மீட்டாக வேண்டும் என்பதால், சற்று கவனமாக எதிர்கொள்ள வேண்டும். 30-ல் 28 கேள்விகள் முந்தைய 5 ஆண்டு வினாத்தாள்களிலிருந்தே பெற்றுவிடலாம். 2 கேள்விகள் மட்டும் பாடங்களின் உள்ளிருந்து கேட்கப்படும். செண்டம் இலக்கு மாணவர்கள் பெரும்பாலும் இடறுவது ஒரு மதிப்பெண் பகுதியில்தான். அவர்கள் விடைகளைப் பலமுறை சரிபார்த்து எழுதவேண்டும்.
கட்டாய வினாக்கள்
பிரிவு ‘ஆ’வில் கட்டாய வினா கிடையாது. தலா 5 மதிப்பெண்கள் என 10 வினாக்களுக்குப் பதிலளிப்பதாக இருக்கும். சாய்ஸ் உடன் கேட்கப்பட்டிருக்கும் 14-ல் தலா 7 தியரி மற்றும் தலா 7 கணக்கு வினாக்களாக அமைந்திருக்கும்.
12 மதிப்பெண்கள் வினாவான பிரிவு ‘இ’ மற்றும், 20 மதிப்பெண்கள் வினாவான பிரிவு ‘ஈ’ இரண்டிலும் கட்டாய வினாக்கள் உண்டு. 8-ல் 5 சாய்ஸ் வினாக்கள் தலா 12 மதிப்பெண்களாகப் பிரிவு ‘இ’ல் கேட்கப்படுகிறது. இதில் கேள்வி
எண் 45 கட்டாய வினா. அதே போலப் பிரிவு ‘ஈ’ல் 5-ல் 3 சாய்ஸ் வினாக்கள், தலா 20 மதிப்பெண்களுடன் இடம்பெறும். இதில் கேள்வி எண் 53 கட்டாய வினா. இந்த 12 மதிப்பெண்கள், 20 மதிப்பெண்களுக்கான, கட்டாய வினாக்கள் ‘அல்லது’ வகையில் இருக்கும். ஏதேனும் ஒன்றை எடுத்து எழுதுவதற்குப் பதிலாக 2 ‘அல்லது’ வினாக்களையும் பதிலளித்துவிட்டு, ஏனைய வினாக்களில் ஒன்றை விட்டுவிடும் தவறு அதிகளவில் நடக்கிறது. இவ்வாறு தேர்வறை பரபரப்பிலும் பதற்றத்திலும் மதிப்பெண்களைப் பறிகொடுப்பதைத் தவிர்க்க, இந்தப் பிரச்சினையை உள்வாங்கிக் கொண்டாலே விழிப்புணர்வு வந்துவிடும்.
நேர மேலாண்மை
நன்றாகப் படிக்கும் மாணவர்கள் 30 நிமிடங்கள் முன்பாகவே தேர்வை முடித்துவிடுவார்கள். கணக்குக் கேள்வியில் எங்கேனும் சிக்கிக்கொண்டவர்களுக்கு நேரம் இழுத்துவிடும். இதைத் தவிர்க்க நேர மேலாண்மைப் பயிற்சியைத் திருப்புதல் தேர்வுகளில் மேற்கொள்ளலாம்.
1 மதிப்பெண் கேள்விகள் 30-க்கும் 20 நிமிடங்கள்; 5 மதிப்பெண் பிரிவுக்கு, தலா 4 நிமிடம் என 10 கேள்விகளுக்குமாக 40 நிமிடங்கள்; 12 மதிப்பெண்கள் பிரிவுக்குத் தலா 10 நிமிடம் என 5 கேள்விகளுக்கும் 50 நிமிடங்கள்; 20 மதிப்பெண்கள் பிரிவில் தலா 20 நிமிடம் என 3 கேள்விகளுக்கும் 60 நிமிடங்கள்; மிச்சமிருக்கும் 10 நிமிடம் திருப்புதலுக்கு.
உயர் மதிப்பெண் உத்தரவாதம்
பாடநூலின் மொத்த வினாக் களையும் கடைசி 5 வருட வினாத்தாள்களின் சுருக்கப் பார்வையாகத் தந்திருப்பதையும் படித்தால் செண்டம் சாத்தியமாகும். உயர் மதிப்பெண்களை உத்தரவாதமாகப் பெறலாம். 5 மதிப்பெண்கள் பிரிவில் தலா 7 தியரி மற்றும் கணிதக் கேள்விகள் என மொத்தம் 14 கேள்விகள் வரும். இப் பிரிவில் 8 கேள்விகள் எளிதானதாகவே இடம்பெறும்.
பாடத்துக்கு ஒன்று என்ற வகையில் 7 தியரி வினாக்கள் உண்டு. ஏனைய கணக்குக் கேள்விகள் கேள்வி எண் 38 முதல் 44 வரையிலானவற்றுக்கு பின்வரும் தயாரிப்பு முறையைப் பின்பற்றலாம். பாட எண் 1-ல் ‘சரிக்கட்டுதல்’ தொடர்பான கணக்குகள்.
பாட எண் 2-ல் ‘விடுபட்ட தகவல் அல்லது லாப நட்டம் காணல்’. இது போலவே 3-ல் ‘தேய்மான விகிதம் காணல், 4-ல் ‘விகிதம் கணக்கிடல், 5-ல் ‘ஒரு மாத ரொக்க இருப்பைக் காணுதல்’, 6-ல் ‘நற்பெயர்/எடுப்பு மீது வட்டி’, 7-ல் ‘பங்கு வெளியிடலில் முனைமம்/தள்ளுபடி’ தொடர்பான கணக்குகள்.
இதேபோல 12 மதிப்பெண்கள் பிரிவின் 8 கேள்விகளில் 3 தியரி யாகவும், 5 கணக்காகவும் கேட்கப் படும். இங்கு 8-ல் 5 கேள்விகள் சாய்ஸில் பதிலளித்தாக வேண்டும். கேள்வி எண் 45 கட்டாய வினா. கேள்வி எண் 46, 47, 48 தியரி என்பதால் அவற்றைத் தேர்ந்தெடுத்து, திட்டவட்டமான பாயிண்ட்களாக விடையளித்து முழு மதிப்பெண்களைப் பெறலாம். இந்த 4 வினாக்கள் போக ஏனைய கேள்விகளுக்கு, கணக்குக் கேள்வியாகக் கேள்வி எண் 52-ஐத் தெரிவு செய்து அதற்காகப் பாடஎண் 7-ன் கணக்குகளில் பயிற்சி பெறலாம்.
இனி 20 மதிப்பெண்கள் பிரிவைப் பார்ப்போம். கட்டாயக் கேள்வியான கேள்வி எண் 53 கணக்கு கேள்வியாக அமையும். 5-ல் 3 என்றளவில் சாய்ஸ் கேள்விகளை எழுத வேண்டு மென்பதால், ஏனைய 2 கேள்விகளாகக் கேள்வி எண்கள் 54, 56 ஆகியவற்றைத் தேர்வு செய்து பதிலளிக்கலாம். கேள்வி எண் 54-க்கு பாட எண் 1-லிருந்து ’இறுதிக் கணக்கு (5 சரி கட்டுதல் மட்டும்)’ மற்றும் கேள்வி எண் 56-க்கு பாட எண் 5-லிருந்து ‘3 மாத இருப்பைக் காணுதல்’ ஆகிய கணக்குகளில் பயிற்சி மேற்கொள்ளலாம்.
இரண்டுமே தலா 10 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் என்பதோடு சுளையாக முழு மதிப்பெண்களைத் தரும் என்பதால் இந்தப் பரிந்துரை. இதிலும் கேள்வி எண் 54-யை கடினமாக உணர்பவர்கள், மாற்று ஏற்பாடாகக் கேள்வி எண் 55-க்காக பாட எண் 4-ன் ’விகித ஆய்வு (4 விகிதம் மட்டும்)’ தலைப்பிலிருந்து உரியப் பயிற்சிகளைப் பெறலாம்.
எளிதில் 76 மார்க்
இனிமேல்தான் படிக்க வேண்டும் என்பவர்களுக்கும், எப்படியாவது பாஸானால் போதும் என்ற நிலையில் தவிப்பவர்களுக்குமான பரிந்துரை இது. பாட எண் 2-ல் ’தேய்மானக் கணக்கு’, பாட எண் 5-ல் ’ரொக்கத் திட்டப் பட்டியல்’, பாட எண் 6-ல் ‘கூட்டாண்மை’ ஆகிய தலைப்புகளில் தலா ஒரு 5 மற்றும் 12 மதிப்பெண்கள் வினாக்கள் என மொத்தம் 51 மதிப்பெண்கள் எளிதில் பெறலாம். இவற்றோடு ஒரு மதிப்பெண் பகுதியை மட்டுமே கவனத்தில் கொண்டு அவற்றில் 25 மதிப்பெண்கள் பெறுவதன் மூலம் 76 மதிப்பெண்களுடன் தோல்வியைத் துரத்திவிடலாம்.
தேர்வறை கவனம்
தேர்வுத்தாளில் வினா எண்களைச் சரியாகக் குறிப்பது, முறையான படிவம் தயாரித்து அதில் கணக்குகளைத் தீர்ப்பது, இலக்கங்களைப் பிழையின்றியும் அடித்தல் திருத்தல் இன்றியும் எழுதுவது ஆகியவற்றில் கவனம் வேண்டும்.
வரைவிலக்கணக் கேள்விகளுக்குச் சொந்த வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டுப் பாட நூலில் உள்ளபடியே பதிலளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் கைப்பற்றலாம் கணக்குப் பதிவியல் மதிப்பெண்களையும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago