கடந்த வாரம்: தலைநகரில் தேர்தல்!

By டி. கார்த்திக்

டெல்லி மாநிலச் சட்டப்பேரவைக்கான தேர்தல் சூடுபிடித்திருக்கிறது. நாட்டின் தலைநகரை அடுத்து யார் ஆளப் போகிறார்கள் என்ற பரபரப்பு அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டிருக்கிறது. டெல்லி மாநிலத்தை ஆள வேண்டும் என்பது தேசியக் கட்சிகளின் கவுரவமாகப் பார்க்கப்படுகிறது. பல பெருமைகளைக் கொண்ட தலைநகரத்துச் சட்டப்பேரவையின் பின்னணியை அலசுவோம்.

நகரம் உருவான வரலாறு

இப்போது உள்ள புது டெல்லியை உருவாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள். முன்பு இந்தியாவின் தலைநகராக கல்கத்தா இருந்தது. 1911-ம் ஆண்டில் தலைநகரை டெல்லிக்கு மாற்றினார்கள் ஆங்கிலேயர்கள். இப்போது பழைய டெல்லி என்று சொல்லப்படும் பகுதிக்குத் தெற்கே தற்போதைய டெல்லி உருவாக்கப்பட்டது. அது புது டெல்லி என்று இப்போது வழங்கப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு டெல்லியே தேசியத் தலைநகராகத் தொடர்ந்தது. 1952-ம் ஆண்டில் டெல்லியில் அரசாங்கமும் சட்டப்பேரவையும் அமைக்கப்பட்டன. பேரவைக்கு 48 பேர் உறுப்பினர்கள். முதல்வர் பதவியும் உருவாக்கப்பட்டது. பேரவை ஆலோசகராகத் தலைமை ஆணையர் (இப்போது துணை நிலை ஆளுநர்) நியமிக்கப்பட்டார். முதலமைச்சராக சவுத்ரி பிரெம் பிரகாஷ் இருந்தார்.

நகரம் முதல் மாநிலம் வரை

1956-ம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது டெல்லி ஒன்றியப் பகுதியாக (யூனியன் பிரதேசம்) அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவையும் முதலமைச்சர் பதவியும் ஒழிக்கப்பட்டன. டெல்லியின் நிர்வாகம் குடியரசுத் தலைவரின் நேரடிக் கண்காணிப்புக்குச் சென்றது. அதாவது, மத்திய அரசின் கண்காணிப்புக்குச் சென்றது. தலைமை ஆணையருக்குப் பதிலாகத் துணை நிலை ஆளுநர் டெல்லி நிர்வாகத்தைக் கவனித்தார். டெல்லி நிர்வாக வசதிக்காக மாநகராட்சி உருவாக்கப்பட்டது. சட்டப்பேரவைக்குரிய எந்த அதிகாரமும் இதற்குக் கிடையாது. 1966-ல் இது பெருநகரமாகவும் மாறியது. 1990-ம் ஆண்டு வரை பெருநகர நிர்வாகமாக இது செயல்பட்டது.

டெல்லிக்கு மாநில அந்தஸ்து

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி, 1991-ம் ஆண்டில் டெல்லி ஒன்றிய ஆட்சிப் பகுதியைத் தேசியத் தலைநகரப் பகுதியாக மத்திய அரசு அறிவித்தது. இதன்படி வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய 70 பேர் கொண்ட சட்டசபை ஒன்றும் டெல்லியில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் மாநில அந்தஸ்து உள்ள தேசியத் தலைநகர் பகுதியாக டெல்லி மாறியது. டெல்லியைப் போலவே புதுச்சேரியும் மாநில அந்தஸ்து உள்ள ஒன்றியப் பகுதிதான். மற்ற ஒன்றியப் பகுதிகள் நேரடியாகக் குடியரசுத் தலைவரால் நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால், டெல்லியிலும் புதுச்சேரியிலும் மட்டும் தேர்தல் மூலம் அரசுகள் அமைக்கப்படுகின்றன.

டெல்லியின் முதலமைச்சர்கள்

டெல்லி மாநில அந்தஸ்து பெற்ற பிறகு 1993-ம் ஆண்டில் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. மாநில அந்தஸ்து பெற்ற டெல்லியின் முதல் முதலமைச்சராக மதன்லால் குரானா பதவியேற்றார். பின்னர் சாகிப் சிங் வர்மா, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் அடுத்தடுத்து முதலமைச்சர்களாகப் பதவியேற்றார்கள். முதல் சட்டப்பேரவையிலேயே மூன்று முதல்வர்களை டெல்லி மாநிலம் பார்த்தது.

பின்னர் 1998-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு இறுதி வரை காங்கிரஸின் ஷீலா தீட்சித் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கெஜ்ரிவால் முதலமைச்சரானார். அவருக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து தந்த ஆதரவால் அவர் அரசு அமைக்க முடிந்தது. ஆனால், 49 நாட்களில் அவர் பதவியை ராஜினாமா செய்ததால் இப்போது மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது.

தலைநகரில் ஆதிக்கம்

மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சிகள், மாநகராட்சிகள், நகராட்சிகள் தங்கள் வசம் இருக்க வேண்டும் என்று நினைப்பதைப் போல மத்தியில் ஆளும் கட்சிகள் டெல்லி தங்கள் வசம் இருக்க வேண்டும் என்று நினைப்பது வாடிக்கை. 1993-ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துகொண்டிருந்தபோது டெல்லியை பாரதிய ஜனதா வென்றது. 1998-ம் ஆண்டில் மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது டெல்லி காங்கிரஸ் வசமானது.

மீண்டும் 2003-ம் ஆண்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இருந்தபோது காங்கிரஸே வெற்றி பெற்றது. 2008-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இருந்தபோது டெல்லியில் காங்கிரஸே வெற்றி பெற்றது. மத்தியில் ஆட்சி செய்த கட்சியே டெல்லியிலும் வெற்றி பெற்றது அதுதான் முதல்முறை. 2013-ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் அக்கட்சியின் உதவியுடன் ஆம் ஆத்மி ஆட்சியில் உட்கார்ந்தது.

அதிகாரம் யாருக்கு?

டெல்லியில் உள்ள பெரும் பிரச்சினை என்றால், அது அதிகாரங்கள்தான். மற்ற மாநிலங்களில் இருப்பதுபோல டெல்லிக்கு அதிகாரங்கள் கிடையாது. காவல் துறைகூட டெல்லி மாநில அரசின் கட்டுப்பாட்டில் கிடையாது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ்தான் காவல்துறை செயல்படுகிறது. அதேபோல எந்த முக்கிய முடிவாக இருந்தாலும் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். மத்திய அரசின் ஆட்சி மையம் கொண்டுள்ள பகுதியாக டெல்லி இருப்பதால் மாநில அந்தஸ்துக்குரிய முழு அதிகாரங்கள் இங்கு வழங்கப்படவில்லை.

இந்தியாவின் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் செயல்படுகிறார்கள். அவர்களுக்குப் பல அதிகாரங்கள் உள்ளன. ஆனால், மாநிலங்களின் தலைநகர்கள் அமைந்துள்ள மாவட்டங்களில் பொதுவாகக் காவல்துறைக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.

சில அரசியல் காரணங்களால் மற்ற மாவட்டங்களின் ஆட்சித்தலைவர்கள் அளவுக்குத் தலைநகர்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்த முடிவதில்லை. மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அதிகாரம் இருந்தும் பயன்படுத்த முடியவில்லை. அதுபோலவே டெல்லி முதலமைச்சருக்கு அதிகாரமே இல்லாததால் மற்ற மாநில முதல்வர்களைப் போல செயல்பட முடிவதில்லை.

தேசியக் கட்சிகள் டெல்லியில் ஆட்சியில் உட்கார்ந்தபோது அதிகாரங்கள் பற்றி எந்தப் பிரச்சினையும் எழவில்லை. ஆனால், பாரதிய ஜனதா, காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி பதவியேற்றபோது அதிகாரங்கள் பற்றிய பிரச்சினை வெடித்தது. பணியைச் சரியாகச் செய்யவில்லை என்று கூறி நான்கு காவலர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சராக இருந்த அர்விந்த் கேஜ்ரிவால் கோரினார். அந்தக் கோரிக்கை ஏற்கப்படாததால் அதற்காக அவரே இரண்டு நாட்கள் போராட்டம் நடத்தினார்.

மற்ற மாநிலங்களுக்கு உள்ளதுபோல டெல்லிக்கும் மாநில அதிகாரங்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் அங்குத் தொடர்ந்து எழுப்பப்பட்டுவருகின்றன.

களத்தில் பா.ஜ.க.வும் ஆம் ஆத்மியும் கடுமையாகப் போராடுகின்றன. காங்கிரஸ் மூன்றாம் இடத்தில் உள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மத்தியில் ஆட்சிசெய்யும் கட்சி, பிரதமர் நரேந்திர மோடியின் வசீகரம், பிரச்சார வலிமை ஆகியவை பா.ஜ.க.வின் பலம். அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் அர்விந்த் கேஜ்ரிவாலோடு இணைந்து நின்று,பிறகு ஆம் ஆத்மி கட்சியின் எதிர்ப்பாளராக மாறி பா.ஜ.க.வில் சேர்ந்த கிரண் பேடியைத் தங்கள் முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மியோ தூய்மையான அரசியல் என்னும் கோஷத்தையும், எளிமையான பிரச்சாரத்தையும் கேஜ்ரிவாலின் நற்பெயரையும் நம்பிக் களத்தில் நிற்கிறது.

பெண்கள் பிடியில் தலைநகர்

1993-ம் ஆண்டின் தேர்தலைத் தவிர்த்து மற்ற தேர்தல்களில் ஒரு ஒற்றுமையுண்டு. முதலமைச்சர் பதவிக்கு முக்கியக் கட்சிகளில் ஒன்று பெண்ணை வேட்பாளராக முன்னிறுத்துவதுதான் அது. 1998-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஷீலா தீட்சித் முதல்வர் பதவிக்குக் களமிறக்கப்பட்டார்.

அப்போது நடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவின் முதலமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜைத் தோற்கடித்து ஷீலா தீட்சித் முதல்வரானார். 2003, 2008, 2013-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் தேர்தலைச் சந்தித்தது .

இப்போது நடைபெற உள்ள தேர்தலில் முதல்வர் பதவிக்குப் பெண் வேட்பாளர்கள் இருக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி அறிவிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்