எல்லோரும் எடுக்கலாம் நூற்றுக்கு நூறு

By சு.சுபாஷ் லெனின்

கணக்கு என்றாலே மாணவர்கள் வாங்கிக் குவிக்கும் செண்டம்தான் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வரும். உண்மையில் இதர பாடங்களைவிட மதிப்பெண்களை வாரி குவிப்பது மட்டுமல்ல, கவனக்குறைவால் காலை வாரி விடுவதும் கணக்குதான். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தினரால் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கப்படும் ‘எலைட்’ சிறப்பு பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளரும், முதுகலை கணித ஆசிரியருமான சே. நவநீதகிருஷ்ணன் உதவியுடன் கணிதத் தேர்வுக்கான தயாரிப்பை எளிமையாக்கும் குறிப்புகளை இங்கே பார்க்கலாம். செண்டம் மட்டுமல்லாது, குறைந்தது 180 மற்றும் 100 மதிப்பெண்கள் பெறும் முறைகளாகப் பல தரப்பினருக்கும் பலனளிக்கும் வகையில் அவற்றைப் பார்ப்போம்.

100/100 எளிது!

கணிதப் பாடத்தில் செண்டம் எடுக்க விரும்புபவர்கள் அதிகம் கவனம் கொள்ள வேண்டியது 1 மதிப்பெண் கேள்விகள். நன்றாகப் படிப்பவர்கள்கூடக் கோட்டை விடுவது இங்கேதான். 1 மதிப்பெண் வினாக்கள் 40-ல், பாடப்புத்தகக் கடைசி பக்கப் பயிற்சிகளின் 1 மதிப்பெண் வினாத் தொகுப்பிலிருந்து 30 வினாக்களை எதிர்பார்க்கலாம். எஞ்சிய 10 மதிப்பெண்களையும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தயாரிப்பான வினா வங்கியில் இருந்து பெற்றுவிடலாம்.

ஒரு வினாவுக்கு விடை எழுத ஒரு நிமிடம் என்ற கணக்கில் இதற்குப் பயிற்சி பெற வேண்டும். மனப்பாடம் செய்யாமல், மதிப்பெண் எழுதப் பயிற்சி பெற வேண்டும். 1 மதிப்பெண் அள்ளுவதற்கான துல்லியம், விரைவு ஆகியவை பயிற்சியால் மட்டுமே சாத்தியமாகும். அப்ஜெக்டிவ் டைப் கேள்விக்கான சரியான பதிலைக் கொடுக்கப்பட்டிருக்கும் 4 வாய்ப்புகளில் தேடாது, பதிலைக் கண்டுபிடித்துப் பிறகு அதைக் கொடுக்கப்பட்ட விடைகளில் உறுதி செய்துகொள்வது குழப்பத்தைத் தவிர்க்கும்.

கலங்கத் தேவையில்லை

கட்டாய வினா என்ற பெயரில், 6 மற்றும் 10 மதிப்பெண் கேள்விகளில் இடம்பெறும் கேள்விகள் பலரையும் பீதிக்குள்ளாக்கும். பாட நூலின் 10 பாடங்களில் எதிலிருந்தும் கட்டாய வினா வரலாம் என்பதாலும், இந்தப் பதை பதைப்பு கூடிவிடும். ஒருவர் செண்டம் மதிப்பெண் பெறுவதை உறுதி செய்வதற்கானதுதான் கட்டாய வினா. தவறுகள் வர வாய்ப்புள்ள வினாவே, அதிகமாகக் கட்டாய வினாவாக இடம்பெறும். அதேநேரம், திட்டமிட்டால் கட்டாய வினாவையும் தெளிவாக எதிர்கொள்ளலாம்.

செண்டம் எடுக்க விரும்புவர்கள் எல்லாப் பாடங்களையும் நன்றாகப் படித்தாக வேண்டுமென்பதால், அவர்கள் கட்டாய வினா குறித்துக் கலங்கத் தேவையில்லை. பொதுத்தேர்வுகளில் இதுவரை கேட்கப்படாத வினாக்களே கட்டாய வினாவில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், ஆசிரியர் உதவியுடன் அவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி பெற வேண்டும்.

ஒவ்வொரு மாணவரும் தன்னுடைய வழக்கமான தவறுகள் குறித்து அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதுவரையிலான தேர்வுத்தாள்களில் அடிக்கடி ஒருவர் செய்யும் தவறே, பொதுத்தேர்வில் செண்டம் எடுப்பதைப் பாதிக்கும். எனவே, ஆசிரியர் உதவியுடன் வழக்கமான தனது தவறுகளைக் கவனித்து, அடுத்த தேர்வுகளில் அவற்றைக் களைய ஒவ்வொரு முறையும் முயல வேண்டும்.

கவனம் தேவை

கட்டாய வினாவை விட்டால், மிச்சமிருக்கும் 14-ல் 9 வினாக்களைத் தெரிவு செய்து விடையளிக்க வேண்டியிருக்கும். பார்வைக்கு எளிதானது என்றோ, அளவில் சிறிதானது என்றோ சாய்சில் கேள்விகளைத் தேர்வு செய்யக் கூடாது. தொடர்ச்சியான தேர்வு மற்றும் திருப்புதல் அனுபவ அறிவைப் பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களைத் தரக்கூடிய வினாக்களுக்குப் பதில் தரவேண்டும்.

நிறுவுக, சரிபார் மற்றும் பாதி படி நிலையிலேயே விடையைச் சரி பார்க்க முடிந்த கேள்விகளைத் தெரிவு செய்து பதில் தரலாம். சில கேள்விகளுக்கான பதிலைச் சரியா, தவறா எனக் கணிக்க முடியாது. முடிந்தால் அவற்றைத் தவிர்க்கலாம். அல்லது தேர்வின் நிறைவில் தனியாக நேரம் ஒதுக்கி ஒரு முறைக்கு 2 முறை சரிபார்த்துவிட வேண்டும்.

கேள்வியைப் படித்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தரவுகளை எடுத்து எழுதும்போதே, அவசரத்தில் சிறு தவறுகளைச் செய்வார்கள். கணித அடிப்படை குறிகளைத் தவறாகக் குறிப்பது, இதற்கு உதாரணம். எனவே, எழுதியதைச் சரிபார்த்த பிறகே கணக்கைத் தீர்க்கச் செல்ல வேண்டும்.

செண்டத்துக்கு அருகே

மதிப்பெண்களில் 180க்கு மேல் என்றால், அதில் செண்டமும் அடக்கம்தான்! கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் குறைந்தது 180 மதிப்பெண் நிச்சயம். செண்டமும் சாத்தியமாக்கலாம்.

வினாத் தாளின் கேள்விகளில் 60% எளிதானதாகவும், 30% மத்திய வகையிலும், 10% மட்டுமே சற்றுக் கடினமானதாகவும் வினாக்கள் அமைந்திருக்க வேண்டும். சாய்ஸ் வினாக்களையும் கணக்கிட்டால் வினாத்தாளில் 296 மதிப்பெண்ணுக்கான வினாக்கள் இருக்கும். இதில் 60% எனும்போது சுமார் 178 மார்க் எளிதாகச் சேர்ந்துவிடும். அதாவது எதைப் பற்றியும் கவலைப்படாது தெளிவாகத் திட்டமிட்டுப் படித்தால் சுலபமாக 180 மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம். அதற்கு மேல் பெறுவதில்தான், தனித்திறனை நிரூபிக்கும் சாமர்த்தியம் இருக்கிறது. அது எப்படி என்று பார்ப்போம்:

2, 3, 4, 6, 9 ஆகிய பாடங்களை முழுமையாகவும் பாடம் 5-ல் 5.1, 5.2, 5.10, 5.11 மற்றும் 7.5, 8.5 எனப் பாடங்களின் உபதலைப்புகளின் 10 மதிப்பெண் கேள்விகளில் நன்கு பயிற்சி பெற வேண்டும். இதேபோல 6 மதிப்பெண் கேள்விகளுக்கு 1, 2, 3, 9, 10 ஆகிய பாடங்களின் அனைத்து 6 மதிப்பெண் வினாக்களிலும் பயிற்சி பெறவேண்டும். 10, 6 மதிப்பெண் பெறுவதில் மேற்படி பாடங்கள் தவிர்த்து, இதர பாடங்களில் இருந்தும் எளிமையான வினாக்கள் மற்றும் ஏற்கெனவே படித்த வினாக்களைக் குறித்துவைத்துக்கொண்டு அவற்றையே திரும்பத்திரும்பப் பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

பாஸாவது சுலபம்!

கணிதத்தில் பாஸ் ஆவேனா என்ற ஐயத்தில் இருப்பவர்கள்கூட இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, குறைந்தது 100 மதிப்பெண்களை நிச்சயம் பெறலாம். 2, 3, 4, 9 ஆகிய 4 பாடங்களின் 10 மதிப்பெண் வினாக்களைப் படித்தால் போதும் சுலபமாக அவற்றில் 7-க்கு விடையளிக்க முடியும். 6 மதிப்பெண்ணைப் பொறுத்தவரை 1 மற்றும் 9 பாடங்களின் 6 மதிப்பெண் அனைத்தையும் படித்துச் சென்றால், ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் தலா 2 கேள்விகளை இந்த வகையில் எதிர்பார்க்கலாம்.

1 மதிப்பெண்ணைப் பொறுத்தவரை, பாடநூலின் கடைசியில் உள்ள பயிற்சிகளில் தேறுவதன் மூலம் 30 மதிப்பெண்ணை உங்கள் சாமர்த்தியத்தைக் காட்டலாம். இங்கே தரப்பட்டவை தவிர்த்து, இதர பாடங்களின் எளிமையான மற்றும் ஏற்கெனவே படித்த பாடங்களை மீண்டும் திருப்பிப் பார்ப்பது கூடுதல் மதிப்பெண்ணைத் தரும்.

தேர்வறையில் படித்த வினாக்கள் மட்டுமல்ல, பகுதியளவு தெரிந்த வினாக்களுக்கும் பதில் தரவேண்டும். படிநிலைகளுக்கும் மதிப்பெண் உண்டென்பதால், முழுமையாகத் தெரியாத வினாவுக்குத் தெரிந்த 3 படிநிலைகளை எழுதுவதாக வைத்துக்கொண்டால், 3 மதிப்பெண்கள் பெறலாம்.

கூடுதல் கவனம்

அதிக மதிப்பெண் எடுக்க வாய்ப்புள்ள கணிதத் தேர்வில், சிறுசிறு தவறுகள் மூலம் ஒன்றிரண்டு எனச் சுலபமாக மதிப்பெண்ணை இழப்பதும் நேரும். உதாரணத்துக்கு நன்றாகக் கணக்கு படிநிலைகளை எழுதிய திருப்தியில், படம் வரைந்தாக வேண்டிய அவற்றை மறந்துவிடுவது இயல்புதான். கட்டாய வினாவை மறந்துவிட்டு 10 வினாக்களையும் எழுதிவிட்டேன் என்று நினைப்பார்கள். வினா எண்ணை எழுதுவதில் சொதப்புவார்கள். இவையெல்லாம் சிறு கவனக்குறைவால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை.

1 மதிப்பெண் விடைகளை எழுதுகையில், வரிசை எண்ணை அவற்றின் வரிசையிலேயே எழுதுவது நல்லது. அடித்தல் திருத்தல் கூடாது. முதல் 2 அல்லது 3 பக்கங்களுக்கு எந்தத் தவறுக்கும் வாய்ப்பில்லாத வகையில் நன்றாகத் தெரிந்த, முழு மதிப்பெண்ணுக்கு வாய்ப்புள்ள பதில்களை எழுதலாம். இவை தாள் திருத்துபவரின் கவனக்குறைவால் மதிப்பெண் இடுவதில் இடறுவதைத் தவிர்ப்பதுடன், சிறப்பான முதல் அபிப்பிராயத்துக்கும் வழி செய்யும். அத்துடன் திருத்துபவருக்குப் புரியும் வண்ணம் எழுதுவது நல்லது. எடுத்துக்காட்டாக, 2 மற்றும் 7, 7 மற்றும் 9 ஆகிய எண்களை எழுதுவதில் காட்டும் அலட்சியம் இவற்றில் சேர்ந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்