உங்களிடம் ஒரு கேள்வி கேட்டால் அதற்குப் பதில் தெரிந்திருந்தும் சட்டெனப் பதில் சொல்ல முடியாமல் வார்த்தைகளைத் தேடுவீர்களா?
# நேர நிர்வாகத்தில் பின்தங்கியுள்ளீர்களா?
# நீங்கள் பார்த்தவை நினைவில் நிற்கும்போது, கேட்டவை மறந்து போகின்றனவா?
# நீங்கள் ஒழுங்கற்று இருப்பதாக அடிக்கடி திட்டு வாங்குவதுண்டா?
# எழுத்துப் பிழைகள் அதிகம் வருமா?
மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உங்களிடம் ’ஆம்’ என்ற பதில் இருந்தால், ஐகியூ குறைவானர், படிப்பில் மந்தமானவர் போன்ற பேச்சுகளுக்கு ஆளாகியிருக்கக்கூடும். ஆனால் சோர்வடையத் தேவையில்லை. அடுத்து வரும் கேள்விகளுக்கு உற்சாகமாக ஆம் அல்லது இல்லை எனச் சொல்லுங்கள்.
# இசை, நடனம், ஓவியம் போன்ற கலைகள் உங்களுக்குக் கைவந்த கலையா?
# வார்த்தைகளாகச் சிந்திக்காமல் ஒரு கதை போலச் சிந்திப்பீர்களா?
# ஒரு புதிருக்கு எல்லோரும் ஒரு விதமான தீர்வைச் சொல்லும்போது நீங்கள் மட்டும் வித்தியாசமான தீர்வைச் சொல்லியதுண்டா?
# ஒரே தடவைதான் ஒரு இடத்திற்குப் பயணித்திருந்தாலும் அடுத்த முறை அவ்விடத்துக்குச் செல்லும் வழியைத் துல்லியமாகச் சொல்ல முடிகிறதா?
# புதிய கருவியைக் கண்டதும், பிரித்துப் போட்டு அதை ஆராய்ந்ததுண்டா?
இங்குள்ள அனேக கேள்விகளுக்கு ‘ஆம்’ எனச் சொல்லியிருந்தால் நீங்கள் காட்சி ரீதியான அறிவு படைத்தவர் என்று அர்த்தம். படிப்பு வராமல் காட்சி ரீதியான அறிவு இருந்து என்ன பிரயோஜனம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உளவியல் நிபுணர் கார்டனரின் ஆய்வுகள் அறிவு வெளியில் அபூர்வமான திறப்புகளுக்கு வழிகோலுகின்றன.
1970-களில் பிராஜக்ட் சீரோ என்ற திட்டத்தில் இணைந்த கார்டனர் மனித மனத்தில் ஆற்றலைக் கண்டறியும் சோதனைகள் செய்யத் தொடங்கினார். இதில் அறிஞர்கள், விஞ்ஞானிகள், முட்டாள் என முத்திரை குத்தப்பட்டவர்கள், மன நலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள் எனப் பலவிதமான மனிதர்களின் மனத்தை ஆராய்ந்துவந்தார்.
தனி மனிதரின் உளவியல் செயல்பாடுகள், நடத்தை, குணங்களை ஆராயும் சைக்கோமெட்ரிக் தேர்வு முறையைப் பின்பற்றியபோது சில ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்தார். அவற்றில் குறிப்பிடத்தக்கது ஆடிசம், டிஸ்லெக்சியா போன்ற மனநலக் குறைபாடு உடையவர்களுக்குக் காட்சி ரீதியான அறிவுத்திறன் அபாரமாக இருக்கும் என்பது.
உலகை மாற்றும் மாற்றுத் திறனாளிகள்
உளவியல் தளத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள்தான் கார்டனரை முதன் முதலில் கல்வி அமைப்பை நோக்கி நகர்த்தின. அதிலும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ந்த போதுதான் பன்முக அறிவுத்திறன் என்ற கோட்பாடே கார்டனருக்கு உதித்தது. குறிப்பாகக் காட்சி ரீதியான அறிவுத்திறன் என்ற ஒன்று பிற அறிவுகளைச் சாராமல் தனித்து இயங்கக்கூடியது என்று அவர் கண்டறிந்தது ஆட்டிசம் உடையவர்களை ஆராய்ந்த பின்புதான். ஆட்டிசம் உடையவர்களின் காட்சி ரீதியான அறிவுத்திறனுக்கு இதோ ஓர் வாழும் உதாரணம்.
கேமரா மனிதர்
பல்லாயிரம் அடி உயரத்தில் வானில் பறக்கும் ஹெலிகாப்டருக்குள் உட்கார்ந்துகொண்டு மேலிருந்து கீழே ஊரை உற்றுப்பார்க்கிறார். நதி, மலை, மரங்கள், கட்டிடங்கள் என அத்தனையும் எறும்புகள் போலத் தெரிகின்றன. சில நிமிடங்கள் ஹெலிகாப்டரில் இருந்தே பார்க்கிறார். வீடு திரும்பியதும் அவர் மனதில் பதிந்த காட்சியைத் தன் கருப்பு மை கொண்ட பேனாவால் சரசரவென வரையத் தொடங்குகிறார். சில மணித் துளிகளில் வெள்ளைப் பலகையில் நியூயார்க் நகரம் கருப்புக் கோடுகளில் எழும்புகிறது.
மீண்டும் அதே இடத்திற்குச் சென்று அவர் வரைந்த ஓவியத்தோடு ஒப்பிட்டால் ஒரு புகைப்படம் போலத் தத்ரூபமாக அத்தனை அம்சங்களையும் வரைந்திருக்கிறார். டோக்கியோ, ரோம், ஹாங்காங், துபாய், லண்டன், சிட்னி எனப் பல்வேறு பிரசித்தி பெற்ற நகரங்களை வானில் பறக்கும் பறவை போலப் பார்த்துவிட்டு சித்திரமாக வரைந்துள்ளார். மனிதக் கேமரா எனக் கொண்டாடப்படும் இவர் பெயர் ஸ்டீபன் வில்ஷ்ரைன்.
ஸ்டீபன் வில்ஷ்ரைன் கலை உலகத்துக்கு ஆற்றிய தொண்டினைப் பாராட்டி 2006-ல் பிரிட்டன் அரசு எம்பிஇ பட்டம் வழங்கியது. மூன்று வயதுவரை பேசாத ஸ்டீபன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கண்டறியப்பட்ட பின்னர் சிறப்புப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பேச்சு, எழுத்துத் திறன் இல்லை என்றாலும் ஸ்டீபன் ஓவிய நாட்டமுடையவர் என்பதைப் புரிந்து கொண்ட அவர் பள்ளி ஆசிரியர் அவரைப் பேசவைக்க ஒன்று செய்தார்.
ஸ்டீபனின் ஓவியப் பொருள்களை ஒளித்து வைத்துவிட்டார். எப்படியாவது ஓவியம் வரைய வேண்டும் என்ற பதைபதைப்பில் ஸ்டீபன் முதன்முதலில் பேசிய சொல், “பேப்பர்”. அப்பொழுது அவருக்கு ஒன்பது வயது. அதன் பின் அவருடைய பேச்சுத் திறனும் ஓவியத்தோடே வளர்ந்தது.
வாசித்தல், எழுதுதல், மற்றும் கணித அறிவு இவை கைவரப் பெற்றவர்கள் கல்விக் கூடங்களில் சிறந்த மாணவர்களாகக் கொண்டாடப்படலாம். ஆனால் உலகம் இயங்க இவர்கள் மட்டும் போதாது. அறிவியல், கலை எதுவானாலும் புதிய கண்டுபிடிப்புகள், புதிய படைப்புகள் அபரிமிதமாக வரவேண்டும் என்றால் காட்சி ரீதியான அறிவுத்திறன் போன்ற பல்வேறு திறன்கள் போற்றி வளர்க்கப்பட வேண்டும்.
ஸ்டீபனின் மாயாஜால ஓவியத்திறனை காண >>https://www.youtube.com/watch?v=bsJbApZ5GF0
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago