நீங்களும் இசைப்புயல் ஆகலாம்

By ம.சுசித்ரா

நான் அந்த காலத்துல டி.எம்.எஸ். மாதிரியே பாடுவேன். என் குரல் அப்படியே பி.சுசீலா குரல் மாதிரியே இருக்கும். ஆனால் எங்களை ஊக்குவிக்க அந்தக் காலத்தில் யாருமில்லை. அதனால்தான் இசைத் துறையில் சாதிக்க முடியவில்லை. இப்படிச் சொல்லும் பல தாத்தா-பாட்டிகளை, அப்பா-அம்மாக்களைப் பார்த்திருப்போம்.

இன்று நம் இளைஞர்களின் இசைத் திறனைப் பாராட்டி வளர்த்து விடுகிற சூழல் வளர்ந்திருக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் கலைப் போட்டிகள் தொடங்கி, தொலைக்காட்சிகளின் பாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள்வரை புகுந்து விளையாடுகிறார்கள் இளைய தலைமுறையினர். அதைப் பெற்றோர்களும் வரவேற்கிறார்கள்.

விரிந்த இசை உலகம்

இந்தத் தருணத்தில் தன்னிடம் உள்ள இசைத் திறனை மெருகேற்ற ஒரு இளைஞர் இசை பயில வேண்டும், தொடர்ந்து சாதகம் செய்ய வேண்டும் என்பது போன்ற அடிப்படைகளை யாரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் இசைத் திறனில் பாடும் திறனுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படும் போக்கைப் பொழுதுபோக்கு ஊடகங்களில் பார்த்துவருகிறோம். வாய்ப்பாட்டில் மட்டுமின்றி மேலும் பல விதமான இசைத் துறைகளிலும் நீங்கள் பிரகாசிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இசைப் பயிற்சியாளர், இசை அமைப்பாளர், வீணை, வயலின், பியானோ போன்ற இசைக் கருவிகளை இசைக்கும் வித்வானாக மட்டுமல்லாமல் விளம்பரப் படங்களுக்கு ஜிங்கிள்ஸ் இசையமைப்பாளர், டிஜே, குரல் பயிற்சியாளர், ஒலிப் பொறியாளர், ஒலிக் கலவைப் பொறியாளர், ஒலி வடிவமைப்பாளர், இசை விமர்சகர் என நீங்கள் பல அவதாரங்கள் எடுக்கலாம். அதற்கு முதல் படியாக என்ன செய்ய வேண்டும்? “இசைதான் உங்கள் வாழ்க்கை என முடிவெடுக்க வேண்டும்” என்கிறார் ஒருவர்.

படமா, பாடமா?

“இன்று இந்த இளைஞர்கள் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டார்கள். சில பாடல்களைக் கேட்கும்போது, அட! நான் இசை அமைத்த பாடல்கள்தானா இவை என அதிசயித்தேன். மிக நேர்த்தியாக, நுணுக்கமாக அதே நேரம் பல வண்ணங்கள் தந்து புதுவிதமாகப் பாடியதை நான் மிகவும் ரசித்தேன்” என அவர் பேசத் தொடங்கியதும் அரங்கம் கைத்தட்டலில் அதிர்கிறது.

“குட்டிக் கதை ஒன்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். சிறு வயதில் நான் ஒரு இசைப் போராளியாகத் திரிந்தேன். இந்திய இசை எனக்குப் பிடித்தாலும் ஜாஸ், லத்தின், மெட்டல் போன்ற பலவிதமான மேற்கத்திய இசையின் பாணிகளையும் பரீட்சார்த்தமாகக் கற்றுக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் உலகப் புகழ் பெற்ற பெர்க்ளீ இசைக் கல்லூரியில் இசை பயிலலாம் என முடிவெடுத்தேன். அப்போது இயக்குநர் மணி ரத்னம் ரோஜா பட இசை வாய்ப்போடு என்னை வந்து சந்தித்தார். பெர்க்ளீயில் படிப்பதா அல்லது ரோஜா பட வாய்ப்பை ஏற்பதா எனத் திகைத்துப் போய் நின்றேன். ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தருணம் அது. இறுதியில் என் முதல் பட வாய்ப்பு ரோஜாவைத் தேர்ந்தெடுத்தேன்.

ஆனால் பெர்க்ளீயில் இசை கற்கும் வாய்ப்பை இழந்தேன்… ஆனால் அதே பெர்க்ளீ கல்லூரி இன்று என்னைக் கவுரவித்திருக்கிறது. யூகிக்க முடியாத பல ஆச்சரியங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. இன்று வேண்டுமானாலும் பெர்க்ளீ இசை வகுப்பில் நான் சேரலாம் எனக் கல்லூரிப் பேராசிரியர்கள் அனுமதி அளித்துள்ளார்கள். கூடிய விரைவில் வந்து படிப்பேன்….” சிரிப்பொலியும், பலத்த கைதட்டலும் திக்கெட்டும் ஒலிக்கின்றன.

இந்த வார்த்தைகளை யார் பேசியிருப்பார் என இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆம்! ரோஜா இசையின் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான்தான். கடந்த வாரம் அமெரிக்காவின் பெர்க்ளீ பல்கலைக்கழகம் ஏ.ஆர். ரஹ்மானுக்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அந்த மேடையில் பெர்க்ளீ இசைக் கல்லூரி மாணவர்கள் ரஹ்மான் பாடல்களைத் தங்கள் பாணியில் அரங்கேற்றியபோது, அவர்களிடம் ரஹ்மான் பேசியது இது.

கவுரவ டாக்டர் பட்டத்தைக் காட்டிலும் மிக உயர்ந்த மற்றொரு மரியாதையும் ரஹ்மானுக்கு பெர்க்ளீ அளித்திருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் இந்த இசைக் கல்லூரியில் இனி படிக்கப்போகும் இந்திய மாணவர்களுக்கு ‘ஏ.ஆர். ரஹ்மான் ஸ்காலர்ஷிப்’ என்ற பெயரில் உதவித்தொகை வழங்கும் தீர்மானத்தையும் அறிவித்திருக்கிறது. புது வெள்ளை மழையாகப் பொழியத் தொடங்கிய ரஹ்மானின் இசை 22 ஆண்டுகள் கடந்தும் ‘ஐ களின் ஐ அவள் தானா’ என இன்றும் உலக இசை ரசிகர்களைக் கட்டிப் போடக் காரணம் என்ன?

இதற்கான விடை தேடும் முயற்சியில் இசைத் திறனை எப்படி வளர்த்துக்கொள்ளலாம் என்பதையும் என கண்டறிவோம் வாருங்கள்.

இசைப் புயல் ரகசியம்

முதலில், இசை மீது காதல். இசை என்று சொல்லும்போது, ஒரு வகை இசையைக் கற்றுக்கொள்வதோடு அவரது தேடல் முடிந்துவிடவில்லை. பல விதமான இசை வடிவங்களைத் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறார். கற்றுக்கொள்ளும் துடிப்பும், ஆர்வமும் கொண்ட மாணவன் இன்றும் அவருக்குள் உற்சாகமாக இருக்கிறான்.

அடுத்து, இசையில் புதுமைகளைக் கொண்டாடும் மனோபாவம். ஒரு படைப்பாளியின் மிக முக்கிய அடையாளம், மாற்றங்களை வரவேற்கும் இயல்புதானே! தன் இசைப் படைப்புகளில் புதுமைகளைப் புகுத்தும்போதே பிறர் தன் இசைக்கு மாற்று வடிவம் தரும்போது அதையும் ரசிக்கும் மனநிலை அவரிடம் இருக்கிறது.

புதுமைகளில் நாட்டம்

எலக்ட்ரானிக் இசையைத் தமிழ்த் திரையிசை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ரஹ்மான். ஒலிக்கலவை, ஒலி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட தளங்களில் கணினி இசையைக் கொண்டு வந்தபோதும் பாரம்பரிய இசை அம்சங்களை ஒருபோதும் விட்டுத்தரவில்லை அவர். பழமையின் செழுமையைத் தக்கவைத்துக் கொண்டே புதுமையின் அழகையும் முன்னிறுத்தினார்.

இசைதான் தன் வாழ்க்கை என முடிவெடுத்தார். பெர்க்ளீயா, ரோஜாவா என்ற நிலையில்கூட அவரிடம் இருந்த இரண்டு தேர்வும் இசைதான். அன்று இசையை அவர் தேர்ந்தெடுத்தார். இன்று விருதுகள் அவரைத் தேர்ந்தெடுக்கின்றன. நீங்களும் இசையின் வாழ்நாள் மாணவரானால், ஒரு நாள் இசைப் புயலாக மாறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்