தொழில் தொடங்கலாம் வாங்க 27: என் வேலை இல்லையா?

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

வா

டிக்கையாளர் மனதை அறிவது என்பது சுலபமானது அல்ல. ஹோட்டலில் ஆர்டர் எடுப்பதுபோல எல்லா இடங்களிலும் சுலபமாக இருக்காது. தவிர, காலப்போக்கிலும் அது மாறிக்கொண்டே இருக்கும். நகர்கின்ற இலக்கைச் சுடுவதுபோலத்தான் இதுவும். நாற்பது வருடமாய்ப் பார்த்துக்கொண்டிருந்த வாடிக்கையாளர், போட்டியாளர் தயவில் நாலே நாளில் புதிய கோரிக்கை வைக்கிறார். அல்லது அடுத்த தலைமுறை வந்ததால் எதிர்பார்ப்புகள் மாறிவிடுகின்றன.

தொழில்நுட்பம் தரும் வசதியால் சாத்தியமில்லாததெல்லாம் சாத்தியமாகிறது. “அவர்கள் செய்யும்போது உங்களால் முடியாதா?” என்று கேட்கின்றனர். சில நேரங்களில் நினைப்பது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கும். அதனால்தான் எல்லா முன்னணி நிறுவனங்களும் வாடிக்கையாளர் தேவையைப் புரிந்துகொள்ளத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்கின்றன.

என்ன ஆனார்கள்?

மாறும் தொழில்நுட்பம் பல தொழில்களை அழிக்கும். பல தொழில்களை உருவாக்கும். ஒரு காலத்தில் வீதிக்கு வீதி எஸ்.டி.டி. பூத் இருந்தது. கியூவில் நின்று பேசினோம். மீட்டர் பார்த்து, கையில் உள்ள காசைக் கணக்குப் பார்த்து, எண்ணி எண்ணிப் பேசினோம். இன்று இலவசமாய் ஸ்கைப்பில் வெளி நாட்டுக்கே பேச முடிகிறது. எஸ்.டி.டி பூத் வைத்திருந்தவர்களின் நிலை என்ன ஆனது? இப்படி நிறைய உதாரணம் கொடுக்க முடியும்.

என் அத்தைமார்கள், சித்திமார்கள் எல்லாம் டிரான்சிஸ்டரைக் கேட்டபடியே எல்லா வேலைகளும் செய்வார்கள். சமைக்கையில் உப்பு ஜாடியின் மேலும், துவைக்கையில் கிணற்றடியிலும், படுக்கையில் தலைமாட்டிலும் என எல்லாக் காலங்களிலும் அவர்களின் உற்சாக ஊற்று ஒரு சின்ன டிரான்சிஸ்டர்தான். இன்றைய இளம் பெண்கள் சாலையை கடக்கையிலும் காதில் இயர் ஃபோனில் பாட்டுக் கேட்கையில் எனக்கு அந்த கால டிரான்ஸிஸ்டர் ஞாபகம் வரும். டிரான்ஸிஸ்டர் தயாரித்தவர்கள் என்ன ஆனார்கள்?

எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை

கூடும் வேகமும் வளரும் தொழில்நுட்பமும் பல பழைய விஷயங்களைத் தூசி தட்டி புதிய தொழில்களாய்க் கொண்டு நிறுத்தும். நகரமயமாக்கத்தில் வீட்டில் பாட்டிகள் இல்லாமல் போக, குழந்தைகள் காப்பகங்களும் கதை சொல்லல் மற்றும் விளையாட்டு மையங்களும் பெருகிவருகின்றன. சித்தப்பாக்களும் மாமாக்களும் குறைய பிரச்சினைகளைப் பேச ஆளில்லை. எல்லாவற்றுக்கும் தொழில்முறை ஆலோசகர்கள் பெருகிவருகிறார்கள். எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை.

கார்ப்பரேட் சுவாமிஜிகள் பேக்கேஜ் முறையில் உங்கள் அருகில் வந்து பயிற்சி தருகிறார்கள். வைத்தியம் பார்க்கிறார்கள். வீட்டில் தண்ணீர் தட்டுப்பாடு. விடுமுறை என்றால் ஆயிரக்கணக்கில் பணம் கட்டி தண்ணீர் விளையாட்டுகளில் தொபுகடீர் என்று குதிக்கிறோம். வாடிக்கையாளரின் தேவைகள் மாற மாற உங்கள் தொழில் மாறும். மறையும். புதிய தொழில்கள் மலரும்.

தொழில் முனைவோரின் முக்கியக் கடமை மாறிவரும் வாடிக்கையாளரின் மன நிலையைக் கூர்ந்து கவனிப்பதே. குறிப்பாக உங்கள் துறை சார்ந்த வாடிக்கையாளரின் வாழ்க்கை முறைகளைத் தொடர்ந்து ஆராயுங்கள். உங்கள் பொருள் அல்லது சேவையை விடுத்து மற்ற வலிகள் என்ன என்று உணருங்கள். அதில் ஏதாவது ஒன்றை உங்களால் சரி செய்ய முடியுமா என்று பாருங்கள். உங்கள் வாடிக்கையாளர்கள் நெருங்கி வருவார்கள்.

உங்கள் வாடிக்கையாளர்களை எவ்வளவு தரம் சந்திக்க முடியுமோ அவ்வளவு சந்தியுங்கள். உங்கள் நிறுவனத்திலும் எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களையும் வாடிக்கையாளரைச் சந்திக்க வையுங்கள். “இது என் வேலை இல்லை!” என்று யாராவது சொன்னால் அவர்களைத் திருத்துங்கள். நம் நிறுவனத்தில் எல்லோருடைய வேலையும் வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்தத் தான் என்று புரிய வையுங்கள்.

வாடிக்கையாளர் வெற்றி உங்கள் வெற்றி

ஒரு பழைய வங்கியில் 30 நிமிடத்தில் புதிய வங்கிக் கணக்கு தொடங்கலாம் என்று ஒரு பலகை இருந்தது. அங்கு வந்த முதியவர் அருகில் இருந்த ஊழியரிடம் இது பற்றிக் கேட்க, “இன்னிக்கு முடியாது. நாளைக்கு வாங்க” என்றார். அவர் நேரே மேனேஜர் அறைக்குச் சென்று புகார் கொடுத்தார். அவர் உடனே அந்த ஊழியரை அழைத்து, “எந்த வேலை இருந்தாலும் நிறுத்திவிட்டு இவருக்கு உதவுங்கள்” என்று கனிவோடு சொன்னார்.

“பாதிப் பேர் இன்னிக்கு லீவு. தலைக்கு மேல ஆயிரம் இருக்கு. நாளைக்கு வந்து பண்ணுங்கன்னு சொன்னா என்ன ஆயிடும்?” என்று முணுமுணுத்தவாறு நகர்ந்தார். அருகில் இருந்த என்னைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்தார் அந்த இளைஞர்.

“நான் தனியார் வங்கியிலேயிருந்து இங்க வந்து சேர்ந்ததால ரொம்ப கறார்னு எனக்குப் பேரு. இங்கே பெரும்பாலும் யூனியனைச் சேர்ந்த ஆட்கள். அதனால் எதையும் அளந்துதான் சொல்ல வேண்டியிருக்கு. முப்பது வருஷம் இல்லாம இப்ப மூணு மாசமா புது விதமா வேலை பாக்கறது அவங்களுக்கும் சிரமம்தான். தவிர உள்ளேயும் நிறைய பிரச்சினைகள் இருக்கு. வாஸ்தவம்தான்.

ஆனால், என் பிரச்சினை என்னவென்றால், இன்று இந்தச் சின்ன வாக்குறுதியைக்கூட நிறைவேற்ற முடியவில்லை என்றால் எப்படி இவர்களிடம் சென்று நான் டெபாசிட் கேட்க முடியும். ஒரு ஊழியரின் மனோபாவம் ஒரு உறவையே கெடுத்துவிடுமே!” என்றார். பதில் சொல்லாமல் நிறைவாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். அரை மணி நேரத்தில் வந்து நன்றி சொல்லிவிட்டுப் போன வாடிக்கையாளர் முகத்தில் சொல்ல முடியாத பெருமிதமும் வெற்றிக்களிப்பும். அந்த ஊழியர் முகம் சற்று அடிபட்டிருந்தது. மேனேஜர் சரி செய்வார் என்று நம்பி வெளியேறினேன்.

வாடிக்கையாளரின் பிடிவாதத்தில் தொடர்ந்து தோற்பது நல்லது. வாடிக்கையாளர் வெற்றி பெற வெற்றி பெற உங்கள் தொழில் வெற்றி பெறுவது உறுதி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்