துறை ஆளுமை: பெற்றோரை மீறிப் படியுங்கள் முன்னேறலாம்!

By கா.இசக்கி முத்து

இந்தியத் திரையுலகில் ‘எந்திரன்’, ‘இருமுகன்’, ‘பிரதர்ஸ்’, ‘க்ரிஷ் 3’, ‘கிக்’ உள்ளிட்ட பல படங்கள், விளம்பரப் படங்களுக்குக் கலை இயக்குநராகவும், தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் சுரேஷ் செல்வராஜன். பாண்டிச்சேரி கவின்கலைக் கல்லூரியில் படித்துவிட்டு இன்று கலைத் துறையில் ஜொலிக்கும் அவரிடம் தயாரிப்பு வடிவமைப்புத் துறை சார்ந்த படிப்பு தொடர்பாகப் பேசியதிலிருந்து...

- சுரேஷ் செல்வராஜன்

தயாரிப்பு வடிவமைப்புத் துறைக்குள் நுழைய வேண்டுமானால் என்ன படித்திருக்க வேண்டும்?

வடிவமைப்பு தொடர்பாக எந்தவொரு படிப்பையும் படித்துவிட்டு இந்தத் துறைக்கு வரலாம். இந்தியாவைப் பொறுத்தவரை தயாரிப்பு வடிவமைப்புக்கான (Production Design) படிப்பு புனே திரைப்படக் கல்லூரியில் மட்டுமே இருக்கிறது. இதுவரை இரண்டாண்டு படிப்பாக இருந்தது, தற்போது 3 வருடப் பட்டப் படிப்பாக மாற்றப்பட்டுள்ளது. கட்டிடக்கலை படித்தவர்களும் புனே கல்லூரியில் இதற்கு விண்ணப்பிக்கலாம். சென்னையில் கவின்கலைக் கல்லூரியில் BFA (Bachelor of Fine Arts) என்ற படிப்பு உள்ளது. அதைப் படித்துவிட்டும் வரலாம். செராமிக், விஷுவல் கம்யூனிகேஷன், பெயிண்டிங் என எந்தவொரு படிப்பையும் படித்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் வந்தது எப்படி?

சிதம்பரத்தில் பிறந்த எனக்கு ஓவியக் கல்லூரி என்ற ஒன்று இருப்பதே தெரியாது. “ஹோர்டிங்குக்கு வரையப் போறியா, தேர்தல் சுவர் விளம்பரம் எழுதப் போறியா” என்றுதான் என்னிடம் கேட்பார்கள். பொதுவாகப் பெற்றோர்களுக்குப் பொறியியல், மருத்துவப் படிப்பு சம்பந்தப்பட்ட கல்லூரிகள்தான் தெரியும். ஓவியத்துக்கென்று கல்லூரி இருப்பதே பலருக்குத் தெரியாது. ஆனால், என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து அப்பாவும் மாமாவும்தான் புதுச்சேரியில் ஓவியக் கல்லூரி இருப்பதைக் கண்டறிந்து என்னை அங்கு படிக்க அனுப்பினார்கள். நான் கல்லூரியில் சேர்ந்து படித்ததால்தான் நேரடியாகப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. இல்லையென்றால் வாழ்க்கையில் நிறையப் போராட வேண்டி வந்திருக்கும். கவின்கலையும் தயாரிப்பு வடிவமைப்பாளர் படிப்பும் படித்தால் 90% உங்களுடைய வேலை எளிதாகிவிடும்.

திறமையை மட்டுமே வைத்துக்கொண்டு இந்தத் துறைக்குள் வருவது சாத்தியமில்லை என்கிறீர்களா?

கடந்த 2 ஆண்டுகளாகத்தான் தயாரிப்பு வடிவமைப்பாளர் என்கிற பெயர் படத்தின் டைட்டிலில் இடம்பெறுவதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு முன்னால் கலை இயக்கம் எனச் சொல்லப்பட்டதுதான் இன்று தயாரிப்பு வடிவமைப்பு எனப்படுகிறது. சாபுசிரில், தோட்டாதரணி போன்ற பெரும் கலைஞர்கள் பல வருடங்களாகக் கலை இயக்குநராக உள்ளனர். அவர்களும் எழும்பூர் கல்லூரியில் BFA படித்தவர்களே. கலை இயக்குநர்களில் நிறையப் பேர் BFA படித்தவர்களாகத்தான் இருக்கிறோம். கலை இயக்குநராவதற்குக் கண்டிப்பாக வடிவமைப்பைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.

அதேநேரத்தில் எந்தவொரு படிப்பையும் படிக்காமல் இந்தத் துறையில் பணிபுரிபவர்களும் இருக்கிறார்கள். ஏனென்றால், இந்தத் துறை உங்களுடைய ஆர்வம் சார்ந்தது. படிப்பாகப் படிக்கும்போது இயக்குநர்கள், கலை இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்டவர்கள் நேரடியாகத் தங்களுடைய அனுபவங்களை வகுப்பிலேயே பாடமாக எடுத்துச்சொல்லும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். இப்படி படித்தால் உங்களுடைய கனவு நிஜமாகும் பாதை கண்கூடாகத் தெரியும்.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் தயாரிப்பு வடிவமைப்பு சார்ந்த படிப்புக்கு ஆர்வம் இருக்கிறதா?

அது தனிப்பட்ட விருப்பம்தான். 100-க்கு 5 பேரிடம்தான் இந்தத் துறை சம்பந்தமான ஆர்வமிருக்கிறது. ஏனென்றால், ஓவியர்கள் மிகவும் குறைவு. பொறியாளர் படிப்பு கிடைக்கவில்லை அதனால் இந்தத் துறைக்குள் வந்தேன் என்றுதான் பலர் சொல்கிறார்கள். ஓவியர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால்தான், அதற்கான கல்லூரிகளும் குறைவாக உள்ளன. பெற்றோர்களும் குழந்தைகள் ஓவியம் வரையும்போது, அதை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கிறார்கள். இதற்கென்று ஒரு ‘வேல்யூ’ இருக்கிறது, ஆஸ்கர் விருது பட்டியலில்கூட விருது உள்ளது என்பதெல்லாம் பலருக்கும் தெரியாது.

நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் மற்றொருவர் வடிவமைத்தது என்பது பலருக்கும் தெரிவதில்லை. உங்களைச் சுற்றியிருக்கும் 99 சதவீதப் பொருட்கள் யாவுமே மற்றவர்கள் வடிவமைத்ததுதான். மாணவர்களுக்கு ஆர்வம் இருக்கிறது, ஆனால் பெற்றோர்களால் பலரும் திசைமாற்றிவிடப்படுகிறார்கள். பெற்றோர்களை மீறிப் படித்து, முன்னேறி வந்தவர்கள் பலர் உண்டு.

ஓவியத்தின் முக்கியத்துவத்தை எப்போது, எப்படிப் புரியவைப்பது?

டிசைனிங் என்பதைப் பள்ளியிலிருந்தே தொடங்க வேண்டும் என்பது ஆசை. நிறையக் கலைஞர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். சொல்லப்போனால், பள்ளியிலும் ஓவிய ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அந்த ஓவிய ஆசிரியருக்கு நிறைய விஷயங்களைச் சொன்னோம் என்றால், 10-ம் வகுப்பு வருவதற்குள் அவர்கள் மூலமாக மாணவர்களுக்கு நிறைய கற்றுத் தந்துவிடலாம். ஓவியத்தில் உள்ள விஷயங்களை 7-ம் வகுப்பு படிக்கும்போதே ஒரு மாணவர் தெரிந்துகொண்டால், இன்னும் நன்றாக இருக்கும். நான் 7-ம் வகுப்பு படிக்கும்போதே சினிமாவுக்குள் வந்துவிட வேண்டும் எனக் கனவு கண்டேன். ஓவியத்தின் முக்கியத்துவத்தைப் பள்ளியிலேயே அறிமுகப்படுத்திவிட்டால் கலையும் அழியாது.

புனே கல்லூரியில் தயாரிப்பு வடிவமைப்புக்கு எனப் படிப்பு இருக்கும்போது, தமிழகக் கல்லூரிகளில் இல்லாதது ஏன்?

இதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் கலை இயக்குநருக்கும் தயாரிப்பு வடிவமைப்பாளருக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். கலை இயக்குநர் என்பவர் படப்பிடிப்பின்போது தேவையான செட்டை அவ்வப்போது வடிவமைத்துத் தருபவர். தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் படத்தின் தொடக்கத்திலிருந்து முழுவதுமாக திரைக்கதையோடு பணிபுரிவார்கள். ஒருவிதத்தில் கலை இயக்குநர்களும் இதேபோன்றுதான் இதுவரை பணிபுரிந்திருக்கிறார்கள்.

ஆனாலும் தயாரிப்பு வடிவமைப்பாளர் என்கிற பிரிவே ஹாலிவுட்டைப் பார்த்துத்தான் இங்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. அதுவும் இந்தியில்தான் முதலில் வந்தது. இந்தித் திரையுலகம் பெரியது என்பதால், ஒரு படத்தில் பல்வேறு துறைகள் இயங்கும். மற்ற திரையுலகில் ஒருவரே பலதுறை சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்வார். ஹாலிவுட்டில் தயாரிப்பு வடிவமைப்பாளரோடு Weapons Maker, Set Dresser எனப் பலர் பணிபுரிவார்கள். ஆனால், இங்கு அப்படியல்ல. கலை இயக்குநரே அனைத்துப் பணிகளையும் பார்க்க வேண்டும். அதனால் பலரும் இதற்கான படிப்பைக் கொண்டுவரவில்லை.

இந்தியில் தயாரிப்பு வடிவமைப்பாளர் என்பது மிகவும் பிரபலம் என்பதால் புனே திரைப்படக் கல்லூரியில் தனிப்படிப்பு தொடங்கியுள்ளார்கள். இன்னும் தமிழகத்தில் கலை இயக்குநர் என்றுதான் கூறிவருகிறோம். கலை இயக்குநருக்கான சங்கங்கள் எல்லாம் கூடிப்பேசி இதற்கான படிப்பைக் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம்.

தயாரிப்பு வடிவமைப்பைப் பற்றி இணையத்தின் மூலம் நிறைய தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக யூடியூப்பில் பல தயாரிப்பு வடிவமைப்பாளர்களுடையப் பேட்டிகளைக் காண வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்