சொல்லுங்க ‘சீஸ்!’

By ந.வினோத் குமார்

புத்தாயிரத்துக்குப் பிறகான எம்.பி.ஏ. பட்டதாரிகள் யாரையேனும் நிறுத்தி, “நீங்க படிச்ச முக்கியமான அஞ்சு மேனேஜ்மென்ட் புக்ஸ் சொல்லுங்க?” என்று கேட்டால், அவர்கள் சொல்லும் புத்தகங்களில் நிச்சயமாக இடம்பிடிக்கும் புத்தகம், ‘ஹூ மூவ்டு மை சீஸ்?’

வெற்றிக்கான வழிகாட்டி

1998-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் புத்தகம், இன்றும் ‘பெஸ்ட் செல்லர்’! இதுவரை கிட்டத்தட்ட 2 கோடியே 80 லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன. பன்னாட்டு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள் முதல் புதிதாக வேலை தேடும் இளைஞர்கள்வரை, அனைத்துத் துறையில் இருப்பவர்களும் வாசிப்பதற்கு ஏற்றது இந்தப் புத்தகம். வெற்றியைத் தேடுபவர்களுக்கான வழிகாட்டி.

இந்தப் புத்தகத்தை எழுதிய ஸ்பென்சர் ஜான்சன், தனது 78-வது வயதில், அமெரிக்காவின் சான் டீகோ நகரில், கணையப் புற்றுநோய் காரணமாகக் ஜூலை 3 அன்று காலமானார்.

‘ஹூ மூவ்டு மை சீஸ்’ புத்தகத்தில் புரிந்துகொள்ள முடியாத தத்துவங்களையோ பின்பற்ற முடியாத வழிமுறைகளையோ அவர் சொல்லவில்லை. வெறும் 32 பக்கமே உள்ள அந்தப் புத்தகத்தின் சாராம்சம் இதுதான்: “மாற்றத்தை ஏற்றுக்கொள்!”

கல்லூரி நண்பர்கள் சிலர் பல வருடங்கள் கழித்துச் சந்திக்கிறார்கள். அவர்களில் பலர் நல்ல நிலைக்கு வந்திருக்கிறார்கள். சிலர் வேலை, தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்களில் ஒருவர், ஒரு கதை சொல்கிறார்.

அந்தக் கதை இதுதான்: நான்கு கதாபாத்திரங்கள். ஸ்னிஃப், ஸ்கர்ரி எனும் இரண்டு எலிகள். அந்த எலிகளின் அளவே உள்ள ஹெம், ஹா எனும் இரண்டு மனிதர்கள். அவர்கள் அனைவரும், குழப்பமான வழிகளை உடைய குகை போன்ற ஓரிடத்தில் வாழ்கிறார்கள். அந்தக் குகையின் ஓரிடத்தில் பாலாடைக்கட்டி வைக்கப்பட்டுள்ளது. அதை அந்த நான்கு பேரும் சாப்பிட்டுவருகிறார்கள். ஒரு கட்டத்தில் அது தீர்ந்துவிடுகிறது. அவர்களுக்குத் தேவையான புதிய பாலாடைக்கட்டி, அந்தக் குகையின் வேறு ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது எந்த இடம், அதற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பதை அவர்கள் எப்படி அறிந்துகொள்கிறார்கள் என்பதுதான் மீதிக் கதை.

மாற்றத்தை வெறுக்கக் காரணம் என்ன?

இது சாதாரணக் கதையாகத் தோன்றலாம். ஆனால் அது சொல்லும் செய்தி, விலை மதிக்க முடியாதது. இதில் அந்தக் ‘குழப்பமான வழிகளை உடைய குகை’தான் நாம் வாழும் இந்த உலகம். அந்தக் கதாபாத்திரங்கள் சாப்பிடும் பழைய பாலாடைக்கட்டி, நமது இப்போதைய நிலை. நாம் இப்போதிருக்கும் நிலையிலிருந்து அடுத்ததாக நமக்கு என்ன வேண்டும் என்கிற அந்தத் தேவை இருக்கிறதல்லவா, அதுதான் புதிய பாலாடைக்கட்டி.

கதையில், அந்தப் பழைய பாலாடைக்கட்டி ஒரு நாள் தீர்ந்துபோகும் என்பதை, அந்த நால்வரும் எதிர்பார்க்கவே இல்லை. அது தீர்ந்துபோன பிறகு, ஒவ்வொருவரும் அந்த மாற்றத்தை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதைச் சுவாரசியமாக விவரித்திருப்பார் ஸ்பென்சர் ஜான்சன்.

அதில், எலிகள் இரண்டும் மிக விரைவாக அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, புதிய பாலாடைக்கட்டியைத் தேடும் முயற்சியில் இறங்கி வெற்றிபெற்றுவிடும். ஆனால், அந்த இரண்டு மனிதர்களோ தங்களின் மூளையைப் பயன்படுத்தி, இல்லாதது பொல்லாததை எல்லாம் சிந்தித்து, இருக்கும் நிலையை இன்னும் கடினமாக்கி, செய்வதறியாது திகைத்து நிற்பார்கள். காரணம், அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட மாற்றத்தை விரும்பவில்லை. அதாவது, தங்களின் ‘கம்ஃபர்ட் சோனில்’ இருந்து வெளியே வர அவர்கள் விரும்பவில்லை!

மனிதர்கள், இப்படி மாற்றத்தை வெறுக்கக் காரணம் என்ன? மாற்றம் என்பது எப்போதும் கெட்டதையே கொண்டுவரும் என்ற அவர்களின் முன்முடிவுதான். அதனால் ஏற்படும் பயம் காரணமாக, அவர்களின் நிலையை இன்னும் மோசமாக்கிக் கொள்கிறார்கள். இதிலிருந்து விடுபடுவதற்கான எளிய ஆலோசனை : “மாற்றம் நன்மையைத் தரும் என்று நம்புங்கள்!” என்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.

சிறந்த நிர்வாகியாக மாற

இந்தப் புத்தகம் வெளியான பிறகு, பல பல்கலைக்கழகங்களில் இது பாடமாகவும், ‘கேஸ் ஸ்டடி’ ஆகவும் பயன்படுத்தப்பட்டது. நிர்வாகத் துறையில் இருந்தவர்கள் எல்லாம் ஆர்வத்துடன் படித்தார்கள். இந்தப் புத்தகத்துக்குப் பின், இதுபோன்ற பல புத்தகங்கள் வெளிவந்தன. ஆனால், அவை வந்த வேகத்தில் காணாமல் போயின. காரணம், அதில் இடம்பெற்றிருந்த வறட்டுச் சித்தாந்தங்கள். இந்தப் புத்தகம் வெற்றிபெற முக்கியக் காரணம், அதன் எளிமை.

ஸ்பென்சர் ஜான்சனுக்கு இது முதல் புத்தகம் அல்ல. இதற்கு முன்பு, தன் நண்பர் கென் ப்ளென்சார்ட் உடன் இணைந்து ‘ஒன் மினிட் மேனேஜர்’ என்ற புத்தகத்தை எழுதினார். இன்று வரையிலும், ஒரு சிறந்த நிர்வாகியாக மாற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அதுதான் வழிகாட்டி!

ஒளிப்படம் எடுக்கும்போது ஒளிப்படைக் கலைஞர், ‘ஸே, சீஸ்!’ என்று சொல்லச் சொல்வது வழக்கம். அப்போது, நமது உதடுகள் அழகான முறையில் திறந்து, அந்த நொடிக்கான புன்னகை போன்ற சாயல் நம் முகத்தில் வெளிப்படும். அப்போது எடுக்கப்படும் படம், மிகவும் அருமையாக இருக்கும். மாற்றம் நிகழும்போது, நாம் சொல்லிக்கொள்ள வேண்டியதும் இதுதான். ஒரு புன்னகையோடு, நமக்கான தேவைகளை நோக்கி உழைப்போம். ஆம், மாற்றம் நல்லது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்