ராஜேஷ் இளங்கலைத் தமிழிலக்கியம் படித்தார். முதலிரண்டாண்டுகள் அவரைப் பற்றிச் சரியாக நான் அறியவில்லை. என் வகுப்புகளில் இருப்பார், கவனிப்பார், எப்போதாவது பேசுவார், அவ்வளவுதான். மூன்றாமாண்டு தொடங்கி ஓரிரு மாதம் இருக்கும். ஓர் ஆசிரியர் என்னிடம் புகார் தெரிவித்தார். “இந்த ராஜேஷ் உங்க வகுப்புக்கு மட்டும் வந்துட்டுப் போயிர்றான். வேற யார் வகுப்புக்கும் வர்றதேயில்ல” என்று அவர் தம் புகாருக்கு ஆதாரமாக வருகைப் பதிவேட்டையும் காட்டினார். என் வகுப்புகளில் மட்டுமே அவருக்கு வருகைப் பதிவு இருந்தது. மற்ற வகுப்புகளில் எல்லாம் ஆப்செண்ட்தான்.
அப்போது மூன்றாமாண்டு வகுப்பு தூரத்துக் கட்டிடம் ஒன்றில் இரண்டாம் மாடியில் இருந்தது. அடுத்த நாள் அந்த வகுப்புக்கு நடந்துகொண்டிருந்தேன். ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்த ராஜேஷ் என்னைக் கண்டதும் எனக்கு முன்னால் வேகமாக நடந்து வகுப்புக்குப் போவதைப் பார்த்தேன். அடுத்த சில நாட்களும் தொடர்ந்து கவனித்தேன். என் வகுப்பு இல்லாத நாட்களில் கல்லூரிக்கே வருவதில்லை. என் வகுப்பு இருக்கும் நாட்களில் எந்த மணி நேரமோ, அப்போது மட்டும் வருகிறார். அவ்வகுப்பு முடிந்தவுடன் கிளம்பிவிடுகிறார்.
‘மத்த வகுப்பெல்லாம் புடிக்கல’
இந்தச் செய்தி எல்லா ஆசிரியர்களுக்கும் பரவிவிட்டது. எல்லா ஆசிரியர்களுக்கும் பரவியதால் எனக்குச் சங்கடமாக இருந்தது. ஏன் அப்படிச் செய்கிறார் என்று யாரும் சிந்திக்கப்போவதில்லை. நான்தான் அவரை வழி நடத்துகிறேன் என்றும் பிற ஆசிரியர்களின் வகுப்புக்குப் போக வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறேன் என்றும் எளிதாக விஷயத்தை என்மேல் திருப்பிவிட எல்லா வாய்ப்புக்களும் உண்டு. ஆகவே என் தலை தெரிந்ததும் மரத்தடியில் இருந்து வகுப்புக்குக் கிளம்பிய அவரைப் பெயரிட்டு அழைத்தேன். நின்றார்.
“என்னப்பா ஆச்சு” என்றேன். புரியாமல் பார்த்தார். “என்னோட வகுப்புக்கு மட்டும் வந்தா எப்பிடீப்பா, அது தப்பாயிராதா?” என்றேன். அவர் எதுவும் பதில் சொல்லவில்லை. அந்த நாட்களில் அக மதிப்பீட்டுத் தேர்வு கிடையாது. பல்கலைக்கழகத் தேர்வு மட்டும்தான். ஆகவே தேர்வு, மதிப்பெண் ஆகியவை குறித்துப் பயம் தேவையில்லை. வருகைப் பதிவு போதாது. இப்படி இருந்தால் வருகைப் பதிவில் எந்தச் சலுகையும் கிடைக்காது.
எல்லாவற்றையும் சொல்லி “என்னப்பா பிரச்சினை” என்று கேட்டேன். “உங்க வகுப்பு மட்டுந்தாங்கய்யா புடிக்குது. மத்த வகுப்பெல்லாம் புடிக்கல” என்றார் தீவிரமாக. ஒரு மாணவர் இப்படிச் சொன்னால் எந்த ஆசிரியருக்கும் தோன்றக் கூடிய பெருமிதமும் சிறுகர்வமும் என்னுள் எழுந்தன. அவற்றைக் கடக்க எனக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. அதற்குள் வகுப்பறையும் வந்துவிட்டது. அன்றைக்கெல்லாம் எனக்கு யோசனையாகவே இருந்தது. தலைமேல் அவர் சுமத்திய கிரீடத்தை உதாசீனமாகத் தூக்கியெறிய இயலவே இல்லை. எனினும் சிறிது சிரமப்பட்டுச் சிந்தனை மூலமாகக் கழற்றி ஒருபக்கமாக வைக்க முடிந்தது என் பாக்கியம்தான்.
இப்படிச் சிலர் உண்டு
இரண்டு நாள் கழித்துத்தான் அவரிடம் பேச முடிந்தது. “நான் நடத்தற பாடம் புடிக்குதாப்பா? நடத்தற முறை புடிக்குதாப்பா?” என்று என் சந்தேகத்தையும் சேர்த்துக் கேட்டேன். “ரண்டும் தாங்கய்யா” என்றார் சட்டென்று. அவரை மேலும் துருவியதில் வகுப்பில் நான் சொல்லும் தகவல்களும் இலக்கிய நயங்களும் அவரை ஈர்த்திருப்பதை அறிந்தேன். அந்தப் பருவத்தில் யாப்பிலக்கணம் நடத்திக் கொண்டிருந்தேன். அதை இலக்கியப் பாடமாகவே நடத்துவது வழக்கம். யாப்பிலக்கணத்தில் கை தேர்ந்தவராக இருந்தார் ராஜேஷ். நடத்தியவற்றுக்குக் குறிப்புகள் எடுத்துவைத்திருந்தார். என்னென்ன வேலைகள் செய்யச் சொல்லியிருந்தேனோ அவற்றை எல்லாம் செய்திருந்தார்.
“இதப் படிக்கற மாதிரியே மத்ததயும் படிக்கலாமேப்பா” என்றேன். மீண்டும் “புடிக்கலைங்கய்யா” என்றார். ஏன் பிடிக்கவில்லை என்றால் காரணம் சொல்லத் தெரியவில்லை. இப்படிச் சிலர் உண்டு. ஏதாவது ஒரே ஒரு பாடம் மட்டும்தான் அவர்களுக்குப் பிடிக்கும். என்ன செய்தாலும் மற்றவற்றில் கவனத்தைத் திருப்ப முடியாது. ராஜேஷுக்கு யாப்பிலக்கணத்திலும் மரபிலக்கியத்திலும் பயிற்சி கொடுத்தால் நன்றாகக் கற்றுக்கொள்வார் என்றே தோன்றியது. கொஞ்சம் முயற்சியும் எடுத்தேன்.
எப்படியும் கொடுத்துவிடுவேன்!
பிற வகுப்புகளில் உட்கார வைக்கவும் முயன்றேன். ஆனால் சூழல் ஒத்துழைக்கவில்லை. அடுத்த பருவத்தில் எப்போதாவது வருபவராகவும் வந்தால் என் வகுப்பை மட்டும் கவனிப்பவராகவுமே இருந்தார். ஆசிரியர்களைச் சந்திக்கவே அஞ்சினார். சூழலுக்கு உட்பட்டும் என் சக்திக்கு ஏற்பவும் அவருக்கு உதவ முயன்றேன். மாற்றம் ஏதுமில்லை. இளங்கலைப் பட்டம் பெறவில்லை. தொழில் செய்வதற்குப் போய்விட்டார். ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் கேட்பார். “ஐயா, அந்த மஞ்சள் பிசாசு படிக்கக் கெடைக்குமாங்கய்யா?”
நான் நகை எதுவும் அணிவதில்லை என்பதைக் கண்டு, அது ஏன் என்று ஒரு வகுப்பில் மாணவர்கள் கேட்டபோது விளக்கம் சொன்னேன். அப்போது ரஷ்ய வெளியீடாகிய ‘மஞ்சள் பிசாசு’ நூலைப் பற்றியும் சொல்லியிருந்தேன். அதை நினைவு கொண்டே ராஜேஷ் அந்த நூலைக் கேட்பார். இந்த முறை சொன்னார் “நானும் நகையெல்லாம் எதுவும் போட்டுக்கறதில்லைங்கய்யா. கேக்கறவங்களுக்குத் தங்கத்தப் பத்திச் சொல்ல அந்தப் புத்தகத்த ஒருமுறை படிச்சாப் பரவாயில்லங்கய்யா.” என் சேகரிப்பில் இருக்கும் மஞ்சள் பிசாசைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இந்த முறை ராஜேஷுக்கு மஞ்சள் பிசாசை எப்படியும் கொடுத்துவிடுவேன்!
பெருமாள்முருகன், நாவலாசிரியர்,
தமிழ்ப் பேராசிரியர்
தொடர்புக்கு: murugutcd@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago