ஒரு அன்பர் கேட்டிருந்தார்: “ஏன் தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் மட்டும் அதிகமான சாமியார்கள் உபதேசம் செய்கிறார்கள்? ஐ.டி. வளர்ச்சிதான் காரணமா? ”
“வரலாறும் பண்பாடும் மறக்கையில் ஆன்மீக வறுமை ஏற்படும். மேம்போக்கான வாழ்க்கை விரக்தியில் முடியும். அது உடல் வலிகளாலும் உபாதைகளாலும் தொடர்ந்து வெளிப்படும். அது வாழ்வியல் பிரச்சினை என்று உணரும்போது மருத்துவர்களை விட இவர்களை நாடிச்செல்லுதல்தான் இயற்கையாய் நடக்கும்” என்று அவருக்குத் தெரிவித்தேன்.
சாமியார்களின் பங்கு
எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் சாமியார்கள் நம் சமூகத்துக்கு ஒரு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். “வலிகள் உடற்காரணங்களால் வருவதல்ல” என்னும் விழிப்புணர்வுதான் அது. அதே போல யோகா மற்றும் ஆயுர்வேதத்தை எளிமைப்படுத்தி நம் மக்களிடம் பரப்பியதும் மகத்தான பணி.
வலி என்றவுடன் உடனேயே மாத்திரையை எடுத்து விழுங்குவதற்குப் பதில் “ஏன் இந்த வலி? ” என்று யோசிக்க வைப்பது முக்கியம். வலிகளுக்கு மருத்துவச் சிகிச்சை எடுப்பது தவறில்லை. சில நேரங்களில் அது ஒன்றுதான் தீர்வாகக்கூட இருக்கும். ஆனால் வாழ்க்கை முறையாலும் சிந்தனைகளாலும் நாம் எப்படி இந்த வலிகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கிறோம் என்று அறிய முயல்வது அவசியம்.
வலிகள்
பணியிடத்தில் உற்பத்திக் குறைவுக்கும், வேலைத்திறன் குறைவுக்கும், விடுப்புகள் அதிகரிப்பதற்கும், சக பணியாளர்களிடம் உறவுச் சிக்கல்கள் ஏற்படுவதற்கும் வலிகள் முக்கியமானக் காரணம் எனத் தொழில் உளவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
பணி சார்ந்த வலிகள் கிட்டத்தட்ட எல்லாருக்கும் உண்டு. உடலின் பகுதிகள் யாவும் சீராக இயங்க நாம் விடுவதில்லை. ஒரு சில பகுதிகளை அளவுக்கு அதிகமாகவும் பல பகுதிகளை முற்றிலும் பயன்படுத்தாமலும் உடலை வதைக்கிறோம்.
இதனால்தான் வேலையில் நிற்பவர்கள், நடப்பவர்கள், உட்காருபவர்கள் என அனைவருக்கும் ஏதோ ஒரு சில வலிகள் நிச்சயம் உண்டு. நாம் மடக்கி விரிக்காத பகுதிகள் உடலில் நிறைய உண்டு. அவை தன் இருப்பைத் தெரிவிக்க வலிகளாக மாறுவதைத் தவிர வேறு வழியில்லை.
அபாயமான வேலை
வேலைகளிலேயே அபாயகரமான வேலை ஒரே இடத்தில் அமர்ந்து 8 மணி நேரம் செய்யும் வேலை.
“ Sitting is injurious to health!” என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். இன்று சேவைத் துறையில் பணி புரியும் லட்சக்கணக்கான மக்களின் பிரச்சினை இதுதான். வேலை மட்டுமல்ல. நம் பயணமும் உட்கார்ந்தவாறே நடக்கிறது. பெரு நகரங்களில் இவை 2, 3 மணி நேரங்கள் எனக் கொள்ளலாம். வீட்டிற்குச் சென்றபின்பு கூட சேரில் உட்கார்ந்து சாப்பிட்டு, சோஃபாவில் உட்கார்ந்து டி.வி. பார்த்து, படுக்கையில் விழும் வரை அனைத்தும் உட்காரும்நிலைதான்.
அதனால் விழித்திருக்கும் சுமார் 18 மணி நேரத்தைப் பலர் உட்கார்ந்தே கழிக்கிறோம். இந்த உட்காரும் நிலையினால்தான் கழுத்து, முதுகு மற்றும் மூட்டு வலிகள் இன்று மலிந்து விட்டன.
பாதியில் விடுவோர்
பணியாளர்கள் இன்னொரு உளவியல் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். “இந்த வேலை என்றால் கண்டிப்பாக இந்த வலி வரும். ஒன்றும் செய்ய முடியாது!” என்று மனதளவில் கைவிட்டு விடுகிறார்கள். அதனால் வலிகளைப் பூரணமாக தீர்ப்பதற்குப் பதிலாக நிவாரணம் தேட ஆரம்பிக்கிறார்கள்.
வலி வந்தவுடன் உடற்பயிற்சி பற்றிச் சிந்திப்பவர்கள் முதலில் ஜிம்மிற்கு பணம் கட்டுவார்கள். விலை உயர்ந்த டிராக்ஸ் வாங்குவார்கள். பிறகு ஜிம்மிற்குப் போக மாட்டார்கள். வீட்டில் உடற்பயிற்சி சைக்கிள் வைத்திருப்பவர்கள் பலர் அதில் துணி காயப் போடுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வருகின்றன! வாக்கிங் ஆரம்பித்த ஆசாமிகளில் வயதானவர்களே தொடர்ந்து நடக்கிறார்கள். யோகா, தாய்ச்சி, கராத்தே மற்றும் குருமார்கள் வகுப்புகளில் சேர்பவர்களிலும் பாதியில் விடுபவர் எண்ணிக்கைதான் அதிகம்.
இவை அனைத்திற்கு மூல காரணம் சோம்பல் மற்றும் ஊக்கமின்மை. அதனால் அதைச் சரி செய்கையில் மற்றவை சித்திக்கும்.
சூரியன் உதிக்காத வானம்
பசித்தபோது மட்டும் உண்ணுங்கள். குறைவாக, தேர்ந்து சாப்பிடுதல் நலம். செயற்கை உணவுகள் தவிர்த்து கூடுமான அளவு இயற்கை உணவுகள் தேடிப்போனால் கிடைக்கும். பணியிடத்திலும் உண்ண முடியும். இரவு உணவை எவ்வளவு முன்னதாக உண்ண முடிகிறதோ அவ்வளவு நலம்.
படுக்கையில் டி.வியை அணைத்து விட்டு முழு இருட்டில் விரைவில் தூங்குங்கள். மொபைலை ம்யூட் பண்ணிவிட்டு உறங்குங்கள். ஒபாமாவே போன் பண்ணினாலும் பரவாயில்லை. குடி முழுகிப் போய்விடாது. சூரியன் உதிக்காத வானம் பார்க்க முடிந்தால் நீங்கள் பாக்கியவான். அதிகாலைக் காற்றின் தன்மையை உணருங்கள். பிறகு நீங்களே அந்த நேரத்தைத் தவறவிட மாட்டீர்கள்.
மலையேற்றம்
எந்தப் பணியாக இருந்தாலும் இரண்டு மணி நேரத்திற்கு இரண்டு நிமிடங்களாவது ஓய்வு எடுத்து நடந்து வாருங்கள். பணி இல்லாத வேறு சிந்தனைகளை ஊக்கப்படுத்துங்கள். இடைவேளை நேரத்தில் உண்ண பழங்கள், பால் கலக்காத பானம் எனத் தேர்ந்தெடுக்கலாம்.
நம்பிக்கையைத் தூண்டும் மனிதர்கள், புத்தகங்கள், சூழ்நிலைகளைத் தேர்ந்தெடுங்கள். நகைச்சுவை உணர்வைக் கை விடாதீர்கள். வாரக் கடைசியில் குன்று இருக்கும் கோயிலுக்கோ, ஒரு காட்டுக்கோ, நண்பரின் ஊருக்கோ போக அவசியம் முயலுங்கள். மலை ஏற்றத்தைவிடச் சிறந்த பயிற்சி எதுவுமில்லை.
வலியின் வழி
உங்கள் உடலோடு தொடர்ந்து பேசுங்கள். வலி மனிதனை யோசிக்க வைக்கிறது. அவனை அவனுக்கு உள்ளே பார்க்க வைக்கிறது. அதற்குப் பயந்தோ, சோம்பல்பட்டோ அவன் உள்ளே பார்க்க மறுக்கும்போதும் அது தொடர்ந்து தன் கடமையைச் செய்கிறது. பணியிடமோ, வீடோ வலியை மறக்காதீர்கள். வலி பற்றி யோசியுங்கள்.
வலி வாழ்வின் உன்னதங்களை உணர்த்தும் வழி!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago