பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதற்கு சாக்குப்போக்கு சொல்லக் காரணம் தேடும் குழந்தைகள் பலர். அவர்கள் மத்தியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, முழுமையான ஓய்வு தேவைப்படும் நிலையிலும் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு எழுதினார் துஷார் ரிஷி. புற்றுநோய் சிகிச்சைக்காக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றுவருவார். இப்படியொரு உடல்நிலையோடு இருக்கும் துஷார் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும் என்று பலரும் நினைக்க, 95 சதவீத மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கவைத்திருக்கிறார். மனதில் உறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதுவுமே பொருட்டல்ல என்று நிரூபித்திருக்கும் துஷார், சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு நல்லதொரு முன்னுதாரணம்.
ராஞ்சியைச் சேர்ந்த துஷார் ரிஷி, டெல்லி பப்ளிக் ஸ்கூல் மாணவர். 2014-ல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கவிருந்தபோது துஷாருக்கு இடது மூட்டில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. கிட்டத்தட்ட பதினோரு மாதங்களுக்கு கீமோதெரபி சிகிச்சை நடந்தது. அது துஷாரை உடலளவிலும் மனதளவிலும் பெரிதும் பாதித்தது. சிகிச்சை முடிந்த பிறகு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி அதில் பத்துக்குப் பத்து புள்ளிகள் பெற்று வாகைசூடினார்.
“புற்றுநோயிலிருந்து மீண்டு வருவேன் என்று நம்பினேன். படிப்பில் கவனம் சிதறாமல் இருந்தேன். பிளஸ் டூ முடித்ததுமே இன்ஜினீயரிங் சேர வேண்டும் என்ற பலரது பொதுவான கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. டெல்லி பல்கலைக்கழகத்தில் இலக்கியம் அல்லது பொருளாதாரம் படிக்கத் திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார் துஷார்.
நன்றாகப் படிக்கும் மாணவர்களே பொதுத் தேர்வுகளில் முழு மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காகத் தனியாக டியூஷனுக்குப் போவார்கள். தொடர்ச்சியான சிகிச்சையில் இருந்ததால் பள்ளிக்குத் தொடர்ச்சியாகச் செல்ல முடியாத நிலை. இருந்தாலும் பள்ளி ஆசிரியர்களின் உதவியோடு பாடங்களைப் படித்தார். டியூஷனுக்குச் செல்லவில்லை.
பாடத்தில் கவனம் செலுத்தி, நல்ல மதிப்பெண்கள் வாங்குவதோடு நின்றுவிடவில்லை அவர். புற்றுநோயோடு தான் கடந்து வந்த அனுபவங்களை ‘The Patient Patient’ என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியிருக்கிறார் துஷார் ரிஷி.
துஷாரின் கதை நம்பிக்கை தருகிறது என்றால் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தர்ஷனாவின் கதை போராடினால் வெற்றி நிச்சயம் என்கிறது. கண்களில் பிறவிக் குறைபாட்டுடன் பிறந்த இவர், பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் மாற்றுத் திறனாளிகளின் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.
தர்ஷனா - துஷார் ரிஷி
பிறந்து ஒரு வாரம் கழித்துதான் தர்ஷனாவின் கண்களில் பூ விழுந்திருப்பது போல இருப்பதை அவருடைய பெற்றோர் பார்த்தனர். மருத்துவரிடம் சென்றபோது கருவிழி மறைப்பு என்கிற குறைபாடு அது என்று சொல்லியிருக்கிறார்கள். வலது கண்ணின் கார்னியா மிகவும் சிறுத்து இருந்ததால் இடது கண்ணின் கார்னியாவை மட்டும் மாற்றலாம் என்று மருத்துவர் சொல்ல, இரண்டு வயது தர்ஷனாவுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பலனாக ஓரளவுக்குப் பார்வை கிடைத்தது. வலது கண்ணில் நிழலுருவமாக மட்டுமே பிம்பம் தெரியும்.
பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் தர்ஷனாவைச் சேர்க்க நினைத்தபோது, பொதுப்பள்ளியில் சேர்க்கும் அளவுக்கு தர்ஷனா தகுதியோடு இருப்பதாகச் சொன்னார்கள். பிறகு கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்.
“நான் ஒன்றாம் வகுப்பு படித்தபோதுதான் என்னால் மற்றவர்களைப் போல இயல்பாகப் பார்க்க முடியவில்லை என்பதையே உணர்ந்தேன். கரும்பலகையில் எழுதியிருப்பதைப் படிக்கவும் எழுதவும் என் நண்பர்கள் உதவினார்கள்” என்று சொல்கிறார் தர்ஷனா. பள்ளி ஆசிரியர்களும் தர்ஷனாவை ஊக்கப்படுத்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறினார்.
“எங்கள் மகள் ஒன்றாம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவத்தை எப்போதும் மறக்க முடியாது. கண்களில் அடிபட்டுவிடக் கூடும் என்பதற்காக வெளியரங்க விளையாட்டுகளில் அவளை அனுமதிப்பதில்லை. அப்போது பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. மாணவர்கள் ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதைப் பார்த்ததும் தர்ஷனாவுக்கும் ஆசை. ஆனால் அதைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். அதைப் பார்த்த அவளது வகுப்பாசிரியர் மேரி, தர்ஷனாவின் கையைப் பிடித்துக்கொண்டு விளையாட்டு அரங்கம் முழுவதும் ஓடினார். ஆசிரியர் ஓடுவதைப் பார்த்துச் சுற்றியிருந்தவர்களில் சிலர் கேலியாகச் சிரித்தனர். ஆனால், அவர் அன்று என் மகளுக்குக் கொடுத்த ஊக்கம்தான் அவளை உற்சாகத்துடன் இருக்கவைத்தது” என்கிறார் தர்ஷனாவின் தந்தை மோகன்.
மற்ற மாணவர்களைப் போல ஓடியாடி விளையாட முடியவில்லை, இருசக்கர வாகனம் ஓட்ட முடியவில்லை போன்ற வருத்தம் தர்ஷனாவுக்கு இப்போதும் உண்டு. ஆனால், அதையே நினைத்து ஏங்கிக்கொண்டிருக்காமல் உள்ளரங்க விளையாட்டுகளில் கவனம் செலுத்துகிறார். கர்னாடக சங்கீதமும் தெரியும்.
“சென்னையில் பி.காம். படிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். கர்னாடக சங்கீதம் தெரியும் என்பதால் அதற்கான வாய்ப்புகளைத் தேடும் எண்ணமும் உண்டு” என்கிறார் தர்ஷனா. குறையை நினைத்துச் சுணங்கிப் போகாமல் நிறைவை நோக்கி நடைபோடும் தர்ஷனாவின் கனவு நிச்சயம் மெய்ப்படும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago