தொழிலை வளர்க்கும் சூத்திரம் என்ன? யாருடைய தயவில்லாமல் பல இடங்களில் பணம் பண்ண வேண்டும். அதற்குத் தோதான பிஸினஸ் மாடல் வேண்டும். தொழிலை ஒரு இடத்தில், ஒரு காலகட்டத்தில் கட்டிப்போடும் விஷயம் எதுவாக இருந்தாலும், அதை விலக்க வேண்டும்.
சில்லறை வியாபாரத்தில் ஒரு ஆள் பல ஊர்களில் முதல் போட்டுக் கிளை பரப்ப முடியாது என்னும் பட்சத்தில் முகமை (ஃப்ரான்சைஸ்) முறையைக் கையாளலாம். ஏனென்றால், ரிலையன்ஸ் ஜியோ கடை பரப்புவது போலத் தன் காசிலேயே நாடு முழுவதும் விஸ்வரூப வளர்ச்சி எடுக்கக்கூடிய நிறுவனங்கள் மிக மிக சொற்பம். அதனால் உங்கள் பிராண்டையும் பொருளை அல்லது சேவையையும் ஒரு குறிப்பிட்ட லாபப் பங்கீட்டு முறையில் இன்னொரு நபர் அல்லது நிறுவனத்துக்கு அளித்தல்தான் ஃப்ரான்சைஸ் முறை. இன்று முடி திருத்தும் நிறுவனம் முதல் சூப்பர் மார்க்கெட்வரை பல இந்த முறையில் இயங்கிவருகின்றன.
பெயரை வைத்து பணம் பண்ண முடியாது
இதை நீங்கள் செய்வதற்கு முன் சில கேள்விகள் கேட்க வேண்டும். நம்முடைய தொழில் லாபமாக இயங்குகிறதா? நம்முடைய பிராண்ட் / பெயர் ஊர் அறிந்ததா? பல கிளைகளில் பரவும் அளவுக்கு இந்தத் தொழிலுக்குச் சந்தையில் இடம் உள்ளதா? தனி ஆளின் தனித்திறமையை மட்டும் நம்பாமல் எங்கு வேண்டுமானாலும், யார் செய்தாலும் பணம் சம்பாதிக்கும் பிஸினஸ் மாடல் உள்ளதா? முகமை வளர்க்கும் நேரமும் திறமையும் மனப்பக்குவமும் நம்மிடம் உள்ளதா? பெயரை மட்டும் தாரை வார்த்துவிட்டுப் பணம் பண்ணும் வழி அல்ல இது.
நம் முகமைக்காரர்களின் வெற்றி, நம் வெற்றி என்று நினைத்து உழைக்க வேண்டும். எங்கே சென்றாலும் ஒரே தரம் என்று வாடிக்கையாளர்கள் நம்பத்தகுந்த வகையில் நிலையான பொருள் தரம் அல்லது சேவைத் தரம் வேண்டும். அதற்கு நிர்வாகக் கட்டுப்பாடுகளும் பயிற்சியும் மிக அவசியம். வளர்ந்துவரும் காலங்களில் எல்லாக் கிளைகளையும் நிர்வாகம் செய்வதும் பெரும் பணி. அதனால் இதையெல்லாம் முன் கூட்டியே தீர்மானித்துவிட்டு முடிவு செய்யுங்கள்.
பெருக்கும் வழி
தொழிலைப் பன்மடங்காகப் பெருக்க இன்னொரு வழி தொழில்நுட்பம். கல்லூரி வளாகத்தில் விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்ட சமூக வலைத்தளம்தான் ஃபேஸ்புக். இன்று அது உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. ஆனால், முதலாளி ஊர் ஊராகச் சென்று கிளை பரப்பவில்லை. உலகெங்கும் கொண்டு சென்றது தொழில்நுட்பம். கடந்த பத்தாண்டுகளில் நம்ப முடியாத விஸ்வரூப வளர்ச்சி கண்டவை அனைத்தும் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களே.
எல்லாத் தொழில்களிலும் ஏதோ ஒரு வகையில் தொழில்நுட்பத்தைப் பிடித்துக் கொண்டு வளர முடியும் என்று திடமாக நம்புகிறேன். பிஸினஸ் மாடல் தொழிலுக்குத் தொழில் மாறுபடலாம். ஆனால் அடி நாதமாய் உள்ள விஷயம் தொழில்நுட்பத்தின் உதவி. இன்று பிரபலமாக உள்ள எல்லா ‘ஆப்’களையும் பாருங்கள். நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும்.
ஒரு கார்கூடச் சொந்தமாக இல்லாத கம்பெனி, வாடகைக்கு கார் அனுப்பிப் பன்னாட்டு நிறுவனமாக வளர்கிறது. ஒரு ஓட்டல்கூடச் சொந்தமாக இல்லாத கம்பெனி, உங்களுக்கு வீடு தேடி வந்து உணவளிக்கிறது. ஒரு கடைகூடச் சொந்தமாக இல்லாத கம்பெனி நீங்கள் கேட்கிற எல்லாப் பொருட்களையும் கொண்டுவந்து உங்களிடம் கொட்டுகிறது.
“என் தொழில் ஐ.டி. சார்ந்தது அல்ல. நான் எப்படித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது?” என்று குழம்ப வேண்டாம். ஒவ்வொரு தொழிலிலும் அதற்கு ஏற்ற மாதிரித் தொழில்நுட்பத்தைக் கையாளலாம். ஒரு பொருளைத் தயாரிக்கவோ விற்கவோ இன்று ஏதோ ஒரு வகையில் நீங்கள் கட்டாயம் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறீர்கள். உதாரணத்துக்குப் பல சிறிய ஓட்டல்களிலேயே சாப்பிட ஆர்டர் எடுக்க, உள்ளே ஆர்டரைச் செலுத்த, பணம் பெற, பில் கொடுக்க என அனைத்தையும் கணினிமயமாக்கிவிட்டார்கள். இது தினசரி நிர்வாக முறைக்கு மட்டும் பயன்படுத்தும் வழிமுறை.
நிபுணத்துவத்தோடு நுட்பமும் வேண்டும்
ஒரு புடவைக் கடை, புதிதாகப் புடவைகள் வருகையில் வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்த ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறது. இவர்கள் விற்பனைக்கு மட்டும் ஒரு சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் இன்று இயந்திரங்களின் துணைகொண்டுதான் இயங்குகின்றன. கைகளின் பங்கைவிட இயந்திரங்களின் பங்கு பெருகிவருகிறது. ஆனால், பல சிறிய உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியைத் தவிர மற்ற தேவைகளுக்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில்லை.
நான் இதுபோன்ற தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசவில்லை. உங்கள் தொழிலின் வழிமுறையையே மாற்றி, சிறிய அளவில் செய்துவரும் உங்கள் தொழிலை மிகப் பெரிய அளவில் கொண்டு செல்ல முடியுமா? முடியும் என்றால் அதுதான் நான் சொல்லும் தொழில்நுட்பப் பயன்பாடு.
“அப்படி என்றால் எங்கள் கம்பெனியே ஐ.டி. கம்பெனி போல மாற வேண்டுமே?” என்று பதற வேண்டாம். பயணச்சீட்டு, பயணச்சேவை செய்துவந்த டிராவல் நிறுவனங்கள் இன்று அழிந்துவருவது ஏன்? பயணச்சீட்டுப் பதிவை ஆன்லைனில் செய்ய முடியும் என்றபோதே அவர்கள் யோசிக்கவில்லை. தொழில்நுட்பத்தைக் கொண்டு பிற சேவைகளைத் தர முடியும் என நினைக்கவில்லை. இன்று பயணச்சீட்டு, ஓட்டல் புக்கிங் எனச் சகலத்தையும் ஆன்லைனில் செய்யும் ஐ.டி. நிறுவனங்கள் பல, டிராவல் கம்பெனிகளை மூடவைத்துவிட்டது. தொழில் நிபுணத்துவம் மட்டும் போதாது. தொழில்நுட்பம் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் நம்மை அறியாமல் ஒரு சுனாமி வந்து நம்மைத் தூக்கிச் செல்லும்.
ஏதோ ஒரு தொழில்நுட்ப நிறுவனம் நம் தொழில் வாய்ப்பைக் களவாடுவதற்கு முன் நீங்களே ஏன் உங்கள் தொழிலைச் சமீபத் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றக் கூடாது? யோசியுங்கள்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago