அறிவியல் உலகம் 2016

By ஆசை

ஒன்பதாவது கோளுக்கான ஆதாரங்கள்

கோள் என்ற தகுதியை புளூட்டோ இழந்த பிறகு சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கோள் என்ற தகுதி வெற்றிடமாக இருந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடிய சாத்தியங்கள் கொண்ட கோள் ஒன்று குறித்த ஆதாரங்களை ‘தொழில்நுட்பத்துக்கான கலிஃபோர்னியா மைய’த்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் வெளியிட்டார்கள். புதிதாக உத்தேசிக்கப்பட்ட கோளின் சுற்றுவட்டப் பாதை சூரியனிலிருந்து சுமார் 2,000 கோடி மைல் தொலைவில் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

உச்சபட்ச தொலைவாக 10,000 கோடி மைல்கள் தூரத்தில் சூரியனிலிருந்து அந்தக் கோள் இருக்கலாம் என்றும் கணித்திருக்கிறார்கள். பூமியைவிடச் சற்றுப் பெரியதாக அந்தக் கோள் இருக்குமாம். அந்தக் கோளைத் தொலைநோக்கியில் பார்க்கவில்லை என்றாலும் அந்தக் கோள் இருக்கக்கூடிய சூரியக் குடும்பப் பகுதியில் காணப்படும் அறிகுறிகளைக் கொண்டு இந்த ஊகங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். உறுதிப்படுத்தப்படும்போது புளூட்டோ முன்பு வகித்துவந்த பதவியை இந்தக் கோள் ஏற்றுக்கொள்ளும்.

இந்திய சாதனை!

இந்திய அறிவியல் துறை பெருமைப்பட்டுக்கொள்ளும் சில விஷயங்களும் இந்த ஆண்டில் நிகழ்ந்தன. ஒரே சமயத்தில் எட்டு விண்கலங்களைச் செலுத்தி அவற்றை அவற்றின் சுற்றுப்பாதையில் இஸ்ரோ நிலைநிறுத்தியிருக்கிறது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் விண்கலங்களும் இவற்றுள் அடங்கும். எட்டு விண்கலங்களில் ‘எஸ்.சி.ஏ.டி.எஸ்.ஏ.டி-1’ என்ற விண்கலம் கடல்களையும் வானிலையையும் ஆராய்வதற்காக அனுப்பப்பட்டது.

புதுப்பிக்கத் தக்க எரிசக்தியில் ஒளிர்ந்த போர்ச்சுகல்

2016 ஆண்டு மே மாதத்தின் 7-ம் தேதியிலிருந்து 11-ம் தேதிவரை போர்ச்சுகல் நாடு முழுக்க முழுக்க புதுப்பிக்கத் தக்க எரிசக்தியைப் பயன்படுத்தி சாதனை புரிந்திருக்கிறது. ஒரு நாடு முழுமைக்கும் இந்த அளவில் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி பயன்படுத்தப்பட்டிருப்பது இதுதான் முதன் முறை. மரபான எரிபொருட்களால் சிறிய அளவிலான சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறைவதிலிருந்து புவிவெப்பமாதல் போன்ற பேரளவுவரை தாக்கம் இருக்கிறது. மேலும், மரபான எரிபொருட்கள் கிடைப்பதும் குறைந்துகொண்டே வருகிறது. சுற்றுச்சூழல் பிரச்சினையைச் சமாளிக்கவும் எரிபொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சினையை சரிசெய்யவும் புதுப்பிக்கத் தக்க எரிபொருட்களை நாம் அதிகம் நாட வேண்டிய சூழலில் போர்ச்சுகல் தற்போது முன்னோடியாகத் திகழ்கிறது.

அடுத்த விண்மீனை நோக்கி…

சூரியக் குடும்பத்திலிருந்து 4.37 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஆல்ஃபா சென்டோரி என்ற விண்மீனை அறிவியலாளர்கள் குறிவைத்திருக்கிறார்கள். மென்பொருள் துறையின் மூலம் பெரும் செல்வந்தரான யூரி மில்னரும் பிரபல அறிவியலாளர் ஸ்டீவன் ஹாக்கிங்கும் சேர்ந்து இந்தக் கனவுத் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். ‘பிரேக்த்ரூ ஸ்டார்ஷாட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் ஒட்டுமொத்தமாக 5 பில்லியன் டாலரிலிருந்து 10 பில்லியன் டாலர் வரை செலவு பிடிக்கும். இந்தத் திட்டத்தின்படி ஆயிரம் விண்கலங்கள் ஏவப்படவிருக்கின்றன.

இந்த விண்கலங்கள் ஒவ்வொன்றும் ஸ்மார்ட் ஃபோன்கள் அளவுக்குத்தான் இருக்கும். ஒளியின் வேகத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு வேகத்தில் செல்லும் இந்த நுண்கலங்கள் ஆல்ஃபா சென்டோரியைச் சென்றடைவதற்கு 20 ஆண்டுகள் ஆகும். திட்டமே தற்போதுதான் தொடங்கப்பட்டிருப்பதால் ஆராய்ச்சிகள், தொழில்நுட்பக் கட்டமைப்புகள் போன்றவற்றுக்குப் பிறகு இன்னும் 20 ஆண்டுகள் கழித்துத்தான் இந்த நுண்கலங்கள் ஏவப்படவிருக்கின்றன. ஆக, இன்னும் 40 ஆண்டுகள் கழித்துதான் இந்தக் கலங்கள் ஆல்ஃபா சென்டோரியைச் சென்றடையும். அதற்குப் பிறகு அங்கிருந்து அவை அனுப்பும் தகவல்கள் பூமிக்கு வந்து சேர்வதற்கு மேலும் 4.3 ஆண்டுகள். எனவே, ஆல்ஃபா சென்டோரி கூறும் வரவேற்பு வாசகத்தை கேட்க நாம் இன்னும் 45 ஆண்டுகள் ஆகும்.

என்றும் அழியாத தரவுச் சேமிப்பு

பிரிட்டனின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் கிட்டத்தட்ட என்றென்றும் நீடித்து நிற்கக்கூடிய தரவுச் சேமிப்புப் பொருளைக் கண்டறிந்திருக்கிறார்கள். மனித நாகரிகம் தோன்றியதிலிருந்து வரலாறு, தகவல் போன்றவற்றைச் சேமிக்க எத்தனையோ வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், எதுவும் நீடித்து நிற்பதில்லை. தற்போதைய தகவல் தொழில்நுட்ப உலகின் குறுந்தகடுகள், பென் டிரைவ், மேகக் கணினி எல்லாம் குறிப்பிட்ட வாழ்நாள் உடையவையே. நானோ-அமைப்புகள் பொதியப்பட்ட கண்ணாடிப் பொருள்தான் புதிதாகக் உருவாக்கப்பட்டிருக்கும் தரவுச் சேமிப்புச் சாதனம். வழக்கமான, ஒரு குறுந்தகடு அளவில் 360 டெராபைட்டுகளை இதில் சேமிக்க முடியும். இந்தத் தரவு 1,380 கோடி ஆண்டுகள் வரை நீடிக்கும். பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த ஆயுளும் 1,380 கோடி ஆண்டுகள்தான். 190 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையிலும் இந்தத் தரவுச் சாதனம் தாக்குப்பிடிக்குமாம்.

கரியமில வாயுவின் சுமை எல்லை மீறியது!

வளிமண்டலத்தில் இருக்கும் கரியமில வாயுவின் அளவு புது உச்சத்தை எட்டியிருக்கிறது. வானிலை அறிவியலில் 30 ஆண்டுகள் என்பது தரவுகளுக்கான கால எல்லையாகக் கருதப்படுகிறது. இப்படி ஒவ்வொரு முப்பதாண்டுகளிலும் எடுக்கப்பட்ட அளவீடுகளை தற்போது ஒப்பிட்டிருக்கிறார்கள். 1896-ல் வளிமண்டலத்தில் பத்து லட்சம் துகள்களுக்கு 295 பங்கு என்ற அளவில் கரியமில வாயு இருந்தது. இந்த ஆண்டில் பத்து லட்சம் துகள்களுக்கு 400 என்ற அளவை எட்டியிருக்கிறது. அதிலும், கடந்த ஆண்டுகளைவிட 2016-ல்தான் கரியமில வாயு அதிக அளவில் வளிமண்டலத்தில் சேர்ந்திருக்கிறது. புவிவெப்பமாதல், பருவநிலை மாற்றம் போன்றவற்றால் பூமி அசாதாரணமான பாதிப்புகளைக் கண்டுவரும் நிலையில், இந்தத் தரவு நம்மை மேலும் அச்சுறுத்துகிறது.

ஈர்ப்பலைகளின் சத்தம் கேட்டது!


லிகோவின் அறிவியல் குழுவினர்

ஐன்ஸ்டைனால் கணிக்கப்பட்ட ஈர்ப்பலைகள், அவரது பொதுச்சார்பியலின் நூற்றாண்டில் இப்போது உறுதிசெய்யப்பட்டிருக்கின்றன. தொலைவிலுள்ள இரண்டு கருந்துளைகள் ஒன்றையொன்று சுற்றிக்கொண்டு, பின் பிணைந்ததால் வெளிப்பட்ட ஈர்ப்பலைகளை அமெரிக்காவின் லிகோ ஆய்வகத்தில் கண்டறிந்தார்கள். மோதிப் பிணைந்துகொண்ட இந்த இரு கருந்துளைகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஒரு கருந்துளை சூரியனைவிட 36 மடங்கு நிறை கொண்டது; இன்னொன்று 29 மடங்கு நிறை கொண்டது. இரண்டும் மோதிப் பிணைந்தபோது உருவான கருந்துளையின் நிறை, சூரியனை விட 62 மடங்கு அதிகம். மீதமுள்ள மூன்று மடங்கு சூரிய நிறை, ஈர்ப்பலைகள் வடிவில் பரிசுத்தமான ஆற்றலாக மாறிவிட்டது. அந்த ஈர்ப்பலைகளின் சத்தத்தை லிகோ ஆய்வகம் கேட்டு, இந்த முக்கியமான கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தது.

‘இறுதிப் பொது மூதாதை’யின் வரைபடம்

ஜெர்மனியைச் சேர்ந்த உயிரி-வேதியியலாளர் பில் மார்ட்டின் உயிரினங்களின் ‘இறுதிப் பொது மூதாதை’யின் கிளை-வரைபடத்தை வெளியிட்டிருக்கிறார். ‘ஒரு செல்’ உயிரினங்களின் டி.என்.ஏ.க்களையெல்லாம் ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் இந்த வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார். புவியில் உள்ள உயிர்கள் அனைத்துக்கும் ஒரு பொது மூதாதை உண்டு என்ற கருத்து அறிவியல் உலகில் நிலவுகிறது. எந்தக் கட்டத்தில் அந்தப் பொது மூதாதையிலிருந்து உயிர்கள் வெவ்வேறு வடிவில் கிளைத்தன என்பது குறித்த தேடல்தான் இது. இந்தப் பொது மூதாதை நாம் கண்ணால் காணக் கூடிய அளவில் இருந்திருக்க வாய்ப்பில்லை. பாக்டீரியா அளவில்தான் இருந்திருக்கும் என்பது இந்தக் கிளை வரைபடத்தில் தெரியவருகிறது. உயிர்களின் தொட்டிலான கடல்களில் அப்போது நிலவிய மிக அசாதாரணமான சூழலில் அவை எப்படி வாழ்ந்திருக்கும் என்பது குறித்தும் பில் மார்ட்டின் விளக்கியிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 mins ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்