இந்திய மாணவர்களையும் ஒட்டு மொத்தக் கல்வியாளர்களையும் அதிரவைத்த பல சம்பவங்கள் 2016-ல் அரங்கேறின. 2016-ம் ஆண்டின் கல்வி நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வை:
மோடி சொல்லும் கல்வி
தகவல் தொழில்நுட்பக் கல்வியைப் பிரதானமாக வைத்துப் புதிய கல்விக் கொள்கையை 1986-ல் ராஜிவ் காந்தி அரசு அறிவித்தது. இன்றுவரை இந்தியப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் அஸ்திவாரம் அதில் போடப்பட்டது. அதன் பிறகு 30 ஆண்டுகள் கழித்து விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக 43 பக்கங்களைக் கொண்ட ‘புதிய கல்விக் கொள்கை 2016’ முன்வரைவு வெளியிடப்பட்டது.
இதில் முன்வைக்கப்பட்ட பாலியல் சமத்துவக் கல்வி, தனி தேசிய திறமைசார் படிப்பு உதவித் திட்டம் போன்றவை வரவேற்புக்குரியவை. ஒன்பதாம் வகுப்போடு தொழில் துறையில் இணையலாம் என்னும் யோசனை, குலக் கல்வியை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சி என்று விமர்சிக்கப்பட்டது. இந்தியக் கலாசாரக் கூறுகளைத் தக்கவைப்பதாகச் சொல்லிச் சம்ஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்கும் திட்டமும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
காலியாக இருந்தும் நிரப்பப்படவில்லையே!
நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் 10 லட்சம் வரையிலான காலியிடங்கள் நிரப்பப்படாமலே இருப்பது 2016-ல் தெரியவந்தது. அதிலும் 1 லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகள் ஓராசிரியர் பள்ளி களாக இயங்கிவருவதால் கிட்டத்தட்ட 5 லட்சம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலை நீடித்து வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான டெல்லி பல்கலைக்கழகத்தில் மட்டும் 900 பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களில் தற்காலிகமான நியமனத்தில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வேலை பார்த்துவருகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் கடந்த 30 ஆண்டுகளாகக் கல்விக் கொள்கை திருத்தியமைக்கப்படாததுதான் என மத்திய அரசு சொன்னது.
ஆனால், சமீபகாலமாக நூற்றுக் கணக்கான இணைப்புக் கல்லூரிகள் (Affliated) முளைத்துவிட்டன. ஒரு பல்கலைக் கழகத்தின் கீழ் எத்தனை இணைப்புக் கல்லூரிகள் செயல்படலாம் என்பதற்கான வரையறை தீர்மானிக்கப்பட்டால் மட்டுமே முதல் கட்டமாக நிரந்தரப் பணியிடங்களை நிரப்ப முடியும். இதற்குரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். அதே நேரம், ஆசிரியர்களை நியமித்தால் மட்டும் போதாது; சரியான உள்கட்டமைப்பு வசதிககளைப் பூர்த்தி செய்தால்தான் கல்வியின் தரத்தை உயர்த்த முடியும்!
ஐ.ஐ.டி.களின் ஏற்றமும் இறக்கமும்
ஆசிரியர்களின் திறன், வளாக நேர்முகத் தேர்வு மூலமாக வேலைவாய்ப்பு தரும் விகிதம் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக வைத்து ஆசியாவின் மிகச் சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சென்னை ஐ.ஐ.டி. உட்பட 6 ஐ.ஐ.டி. நிறுவனங்கள் இடம்பிடித்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தன. அத்துடன் ஜம்மு, பாலக்காடு, திருப்பதி, தார்வாட், பிலாய், கோவா ஆகிய 6 இடங்களில் புதிய ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால், 2015-16 கல்வி ஆண்டில் மட்டும் 656 மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி.களிலிருந்து இடைநின்றுபோனது அதிர்ச்சி அளித்தது.
அரசியலைச் சமையல் ஆக்கிய ஊழல்!
பிளஸ் டூவில் 500-க்கு 444 எடுத்து பிஹாரின் முதல் மாணவியாக ஜொலித்த ரூபி ராய் “அரசியல் அறிவியல் பாடம் என்பது சமையல் கலை சம்பந்தப்பட்டது” என்று சொன்னபோது அவர் மட்டுமல்ல; ஒட்டுமொத்தத் தேர்வு முறையும் கேள்விக்கு உள்ளானது. அவரைப் போலவே பிஹாரில் 14 மாணவர்கள் அடிப்படைத் தகுதி இன்றி மாநிலத்தின் முதலிடம் பிடித்திருப்பதாகச் சந்தேகம் எழுந்தது.
முதலிடம் பிடித்த ரூபா ராய், அறிவியல் பாடப் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்த ஒரு மாணவர், மாநிலத் தேர்வு வாரியத் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத், அவரின் மனைவியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான உஷா சின்ஹா, விஷூன் ராய் கல்லூரி முதல்வர் பச்சா ராய் உள்ளிட்டோர் முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பெற்றோர், தேர்வு நடைபெறும் அறையின் வெளிப்புறச் சுவரில் ஏறி ஜன்னல் வழியாகத் தங்களுடைய பிள்ளைகளுக்குப் பதில் சொல்லித் தருவதில் தொடங்கி, பிஹாரில் தேர்வு முறையில் ஏகப்பட்ட மோசடிகள் நடந்தேறுவது இதன் மூலம் அம்பலமானது.
விடாமல் மிரட்டும் நீட்!
இந்தியா முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. சி.பி.எஸ்.இ. அல்லாத தனித்த பாடத் திட்டம் கொண்ட மாநிலங்களான தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகியவை இனிமேல் சி.பி.எஸ்.இ. முறைப்படி அமைக்கப்பட்ட நுழைவுத் தேர்வான ‘நீட்’ எழுத வேண்டும் என்பதே இதன் அடிப்படை. ஆங்கிலத்திலும், இந்தியிலும் இத்தேர்வை எழுதலாம் என முதலில் சொல்லப்பட்டது.
ஆனால், அதற்கு எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் எழுதலாம் என அறிவிப்பு வந்துள்ளது. ஆனால், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே இத்தேர்வை நடத்தலாம் என்கிற கோரிக்கையும் கடுமையாகப் படித்துப் பிளஸ் டூ தேர்வை முடித்த மாணவர்களை மீண்டும் அழுத்தத்துக்கு ஆளாக்கக் கூடாது என்கிற குரலும் விடாமல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
நிமிரச்செய்த இளம் வீரர்கள்!
ஒடுக்கப்பட்ட சமூகத்தி லிருந்து வந்து கல்வியின் உயர்ந்த நிலையை அடையப் போராடியவர்களில் மறக்க முடியாத இருவர் ரோஹித் வெமுலாவும் கன்னையா குமாரும். ரோஹித் வெமுலா நெருக்கடி தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். பல இன்னல்களைத் துணிச்சலாக எதிர்கொண்டு மாணவர்களின் அரசியல் முன்மாதிரியாக மாறியிருக்கிறார் கன்னையா. “இந்திய ஜனநாயகத்துக்குப் பலம் சேர்த்த மாணவர்கள்” என்ற அடிப்படையில் கன்னையா குமாருக்கும் மறைந்த ரோஹித் வெமுலாவுக்கும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இரோம் ஷர்மிளா 2016 கல்வி உதவித்தொகையைக் கடந்த மார்ச் மாதம் வழங்கியது.
இந்தியா முழுவதும் 370 கேம்பிரிட்ஜ் பள்ளிகள் உள்ளன. சர்வதேசப் பள்ளிகளான இவற்றில் படிப்பவர்களுக்குச் சர்வதேச அளவில் சி.ஐ.இ. தேர்வு நடத்தப்பட்டுச் சான்று அளிக்கப்படுகிறது. இதற்காக நடத்தப்பட்ட கேம்பிரிட்ஜ் சர்வதேசத் தேர்வுகளில் உயர்ந்த மதிப்பெண் குவித்து உலக அரங்கில் இந்தியாவைத் தலைநிமிரச் செய்தனர் 41 இந்திய மாணவர்கள்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கடந்த ஆண்டில் கல்வித் துறையில் பெரும் முன் னேற்றம் என்று சொல்லத்தக்க அம்சங்கள் குறைவாகவே இருந்தன. ஊழல்கள், அரசியல் தலையீடுகள், கொள்கை சார்ந்த குறுக்கீடுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் நம்பிக்கை தரும் சில சலனங்களும் இருந்தன என்பதே 2016 கல்விக் களத்தின் யதார்த்தம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
25 mins ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago