கல்லாதது பன்மையண்டம் அளவு!

By ஆசை

நமக்கெல்லாம் அண்டம் (galaxy) தெரியும், பேரண்டம் அல்லது பிரபஞ்சம் (universe) தெரியும். அது என்ன பன்மையண்டம்?

நமக்குத் தெரிந்ததெல்லாம் நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சம் மட்டுமே. இதைத் தாண்டி வேறு எந்த பிரபஞ்சமும் இல்லை என்றே மக்களும் சரி, பல்வேறு அறிவியலாளர்களும் சரி நம்பிக்கொண்டிருக்கிறார்கள். எனினும், நாமிருக்கும் இந்தப் பிரபஞ்சம் என்பது எண்ணிலடங்காத பிரபஞ்சங்களுள் ஒன்றுதான் என்று சில அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். அந்தப் பிரபஞ்சங் களுடன் நம்மால் தொடர்புகொள்ள முடியவில்லை, அவற்றை அறிந்துகொள்ள முடியவில்லை என்பதற்காகவே அவை இல்லை என்று நம்பிவிட முடியாது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். பெருவெடிப்பில் தோன்றிய நமது பிரபஞ்சமே தோல்வியடைந்த கணக்கற்ற பிரபஞ்சப் பிறப்பு களுக்கிடையே வெற்றிபெற்ற ஒன்று எனும்போது வேறு பல பிரபஞ்சப் பிறப்புகளும் வெற்றி பெற்றிருக்கலாம் இல்லையா என்பது அவர்களின் கேள்வி.

வெற்றுக் கற்பனையா?

பன்மையண்டம் என்ற சிந்தனையே அறிவியல் புனைகதைகளில் வரும் கற்பனைபோல் இருக்கிறதல்லவா? பரிசோதனைகள் மூலம் இதை நிரூபணம் செய்ய முடியாது என்றுதான் அறிவியலாளர்களில் பலரும் கருதுகிறார்கள். அவர்கள் கூறுவதில் பெரும்பகுதி உண்மைதான். அறிவியல் என்பது நிரூபணத்தை அடிப்படையாகக் கொண்ட துறை. வெறும் கற்பனைகளை அறிவியல் என்றுமே ஏற்றுக்கொள்ளாது. ஆனால், அறிவியலின் சாதனைகள் என்று நாம் இன்று கொண்டாடிக்கொண்டிருக்கும் பலவும் ஆரம்பத்தில் வெற்றுக் கற்பனை என்று ஒதுக்கப்பட்டவையே. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு அணு, நேர்மின்னணு, எதிர் மின்னணு என்றெல்லாம் யாராவது பேசியிருந்தால் உலகின் பெரும் அறிவியலாளர்கள் பலரும் சிரித்திருப்பார்கள்.

பெரும் நிறைகொண்ட பொருளைக் கடக்கும்போது ஒளி வளையும் என்று 1900-ல் யாராவது ஒரு பேச்சுக்குச் சொல்லியிருந்தால் எல்லோரும் ஒருமாதிரியாகப் பார்த்திருப்பார்கள். ஆனால், இவை யாவும் கோட்பாடுகளாக முன்வைக்கப்பட்டு, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமும் செய்யப்பட்டிருக்கின்றன. அப்படிப் பட்டதுதான் பன்மையண்டம் கோட்பாடும் என்று இந்தக் கோட்பாட்டின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

‘குளிர் திட்டு’

இந்நிலையில் பன்மையண்டக் கோட்பாட்டாளர்கள் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில் அவர்களுக்கு ஒரு ஒளி கிடைத்திருக்கிறது. பன்மையண்டக் கோட்பாட்டுக்கு ஆதரவான ஒரு சான்றை லண்டனின் ‘ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி’ முன்வைத்திருக்கிறது. சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் இந்தச் சான்றை முன்வைத்திருக்கிறார்கள். ‘குளிர் திட்டு’ என்ற விஷயத்தைப் பற்றியது அந்த ஆய்வுக் கட்டுரை. 1,300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சம் தோன்றியபோது வெளியான கதிர் வீச்சின் ஒளிப்படத்தில் தெரியும் பகுதிகள்தான் இந்தக் குளிர் திட்டு.

நாஸாவின் டபிள்யூ.எம்.ஏ.பி. செயற்கைக்கோளால் 2004-ல் முதன்முதலில் கண்டறியப்பட்டதுதான் இந்தக் குளிர் திட்டு. ஐரோப்பிய விண்வெளி முகமையால் செலுத்தப் பட்ட பிளாங்க் விண்கலத்தால் 2013-ல் அது உறுதிப்படுத்தப்பட்டது. பெரும்பாலான வானியலாளர் களாலும் பிரபஞ்சவியலாளர்களாலும் இதை முதலில் நம்ப முடியவில்லை. ஆய்வுச் சாதனங்களின் துல்லியக் குறைப்பாட்டாலோ, தோற்றப் பிழையாலோ நிகழ்ந்த தவறு என்றே இந்தக் குளிர் திட்டைப் பலரும் கருதினார்கள். இந்தக் கருத்தையும் சமீபத்திய ஆய்வுக் கட்டுரை திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.

கேள்விக்குள்ளாகும் இயற்பியலின் அடிப்படை

இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரும் டரம் (Durham) பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான டாம் ஷாங்க்ஸ், “பிரபஞ்சம் தோன்றுவதற்குக் காரணமான பெருவெடிப்பின்போது ஏற்பட்ட சீரற்ற நிலையால் இந்தக் குளிர் திட்டு தோன்றியிருக்கலாம் என்ற சாத்தியத்தை நாம் ஒரேயடியாக மறுக்க முடியாது. அதுவும் காரணமில்லை என்றால் விசித்திரமான வேறு பல காரணங்களும் இருக்கக் கூடும். நம் பிரபஞ்சத்துக்கும் இதற்குள் உருவான ஒரு குமிழ் பிரபஞ்சத்துக்கும் இடையிலான உரசல்தான் அந்தக் குளிர் திட்டுக்குக் காரணம் என்றும் நாம் கொள்ளலாம். இதை மேலும் ஆழமாக நிரூபிக்கக்கூடிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமென்றால் பன்மையண்டத்துக்கு முதல் ஆதாரமாக இந்தக் குளிர் திட்டை நாம் கருதலாம்.”

பன்மையண்டம் என்ற கருத்தாக்கம் நம்மை ஈர்க்காததுபோல் இருக்கலாம். இயற்பியலின் அடிப்படையையே அது கேள்வி கேட்கும் விதத்தில் இருக்கலாம். ஆனால், இயற்கை இதையெல்லாம் பற்றிக் கவலைப்படுவதில்லை. நாம் நினைப்பதுபோலல்ல, தான் எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் இந்தப் பிரபஞ்சம் இருக்கும் என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உண்மையில் பன்மையண்டம் இருந்தால், அதற்குள் எங்கோ ஒரு மூலையில் நமது மாற்றுப் பிரதிகளும் இருக்கக்கூடும்; அவர்கள் ஏற்கெனவே பன்மையண்டத்தைக் கண்டறிந்து, நிரூபித்து, அதற்கு நோபெல் பரிசு பெற்றிருக்கவும் கூடும்!

- ‘தி கார்டியன்’ இதழில் அறிவியல் எழுத்தாளர் ஸ்டூவர்ட் கிளார்க்
எழுதிய கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்