ஆண்களுக்கானது எனக் கருதப்பட்ட பல துறைகளில் உள்ள பல்வேறு தடைகளைத் தாண்டி இன்று பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில், குடிமைப் பணிகள் எனப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளிலும் சமீப காலமாகப் பெண்கள் சாதனை படைத்துவருகின்றனர். இரு வாரங்களுக்கு முன்பு 2016-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு இறுதி முடிவுகளை, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதில், கர்நாடகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நந்தினி, அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளார்.
7 முறை முதலிடம்
இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் முதன்மையானதாகக் கருதப்படும் குடிமைப் பணித் தேர்வுகளில், கடந்த மூன்று ஆண்டுகளாகப் பெண்கள் முதலிடத்தைப் பிடித்து அசத்திவருகின்றனர். இத்தேர்வு எழுத இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றாலே போதுமானது. இருப்பினும் மருத்துவம், பொறியியல், மேலாண்மை உட்படப் பல்வேறு படிப்புகளைப் படித்தவர்களும் விண்ணப்பிப்பதே இத்தேர்வின் சிறப்பு அம்சம்.
கடந்த 10 ஆண்டுகளில், அகில இந்திய அளவில் பெண்களே 7 முறை முதலிடம் பிடித்ததுடன், 2014, 2015, 2016 ஆகிய 3 ஆண்டுகளில் முதலிடம் பிடித்து ஹாட்ரிக் சாதனையையும் படைத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த சாதனை மங்கைகள் இவர்கள்:
ஆட்சியாளரான அதிகாரி
கர்நாடகத்தைச் சேர்ந்த இந்திய வருவாய்த் துறை அதிகாரியான கே.ஆர்.நந்தினி, 2016-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில், அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். பெங்களூருவில் உள்ள பிரபலக் கல்வி நிறுவனத்தில் சிவில் இன்ஜினீயரிங் படித்தவர் இவர். தனது 2-வது முயற்சியில் வெற்றிபெற்று, இந்திய வருவாய்த் துறையில் (ஐ.ஆர்.எஸ்.) பணியில் சேர்ந்தார். தொடர்ந்து முயன்று, 4-வது முயற்சியில் தற்போது ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்வாகி உள்ளார்.
ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை
டெல்லியைச் சேர்ந்த டினா டபி, 2015-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில் முதலிடம் பிடித்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்ததன் மூலம் வரலாற்றிலும் இடம்பிடித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்தில் தங்கப்பதக்கம் வென்று ஏற்கெனவே சாதனை படைத்தவர் இவர்.
குறை தடை அல்ல
டெல்லியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஐரா சிங்கால், அவருடைய 4-வது முயற்சியில், 2014-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். சிறுவயதில் முதுகெலும்பு பாதிக்கப்பட்டதால் இவரால் தனது கைகளை இயக்க முடியாமல் போனது. இருப்பினும், மாற்றுத்திறனாளிகளுக்காகவும், பெண்கள் உரிமைக்காகவும் ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற முனைப்போடு முயன்று மகுடம் சூடினார்.
சாதனைத் தமிழச்சி
தமிழகத்தைச் சேர்ந்த திவ்யதர்ஷினி, 2010-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தவர். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தவர். தனது 2-வது முயற்சியில் வெற்றிபெற்றவர்.
நடுத்தரத்திலிருந்து முதல் இடத்துக்கு
மருத்துவரான ரேணு ராஜ், ஓய்வுபெற்ற பேருந்து நடத்துநரின் மகள். கேரளத்தைச் சேர்ந்த இவர், 2014-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில், தனது முதல் முயற்சியிலேயே 2-ம் இடம் பிடித்தவர். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு, ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்பதே முழு நேரக் கனவாக இருந்தது.
விடா முயற்சி
2014-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில், அகில இந்திய அளவில் 3-வது இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்தவர் நிதி குப்தா. இவர், ஏற்கெனவே இத்தேர்வில் வெற்றிபெற்று இந்திய வருவாய்த் துறை அதிகாரியாக இருந்தவர்.
பின்னடைவைத் தாண்டி
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வந்தனா ராவ், 2014-ம் ஆண்டு தேர்வில் 4-வது இடத்தைப் பிடித்தார். தென்-மேற்கு டெல்லியைச் சேர்ந்த இவர், தனது 2-வது முயற்சியில் வெற்றி பெற்றவர்.
அதிகாரியான கலைஞர்
உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த சவுமியா பாண்டே, 2016-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில், 4-வது இடத்தைப் பிடித்தார். பொறியியல் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர். இவர், கதக் நாட்டியக் கலைஞரும்கூட.
இந்தச் சாதனைப் பெண்கள், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர், மாற்றுத் திறனாளி, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனப் பல்வேறு சமூக-பொருளாதார-தனி மனிதப் பின்னடைவுகளுக்கு ஆளானவர்கள்.
ஆனால், அத்தனை நிலைகளையும் கடக்க அவர்கள் கையில் எடுத்தது அர்ப்பணிப்பு உணர்வையும் விடாமுயற்சியையும்தான். சாதனைக்கு வயது, சமூக நிலை, சாதி, மாற்றுத் திறன் உள்ளிட்டவை தடை அல்ல என்பது இவர்களின் மூலமாகப் புலப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago