பேச்சு பேச்சா இருந்தா போதுமா?

By ம.சுசித்ரா

நான் 1 ரூபாய் கொடுத்தாலே 1000 ரூபாய்க்குப் பேசுவேனே! என்கிற டைப்பா நீங்கள்?

தகர டப்பா, வாயாடி, ஓட்டை வாய் போன்ற பட்ட பெயர்கள் உங்களுக்கு இருக்கா? நீ பேச ஆரம்பிச்சா பிறகு நிப்பாட்டுறது ரொம்ப கஷ்டமாச்சே!’ னு நண்பர்கள் உங்களைக் கேலி செய்கிறார்களா?

அதை வைத்து உங்களைச் சிறந்த மொழித்திறனாளி எனச் சொல்ல முடியாது. மொழியைப் பயன்படுத்துவதில் கூடுதல் திறமையோடு இருக்கிறீர்கள் என்று சொல்லலாம். ஆனால் சிறப்பான மொழித்திறனாளி என்பதற்கும் அதற்கும் ரொம்ப ரொம்ப தூரம்.

மொழியைச் சிறப்பாகப் பயன்படுத்தியதற்கான சிறப்பான உதாரணத்துக்கு நீங்கள் பார்க்க வேண்டியது உலகப் புகழ் பெற்ற நகைச்சுவைக் கலைஞர் சார்லி சாப்ளினின் முதல் பேசும் படமான ‘தி கிரேட் டிக்டேட்டர்’.

மவுனத்தின் மொழி

மொழி குறித்த எனது புரிதலைப் புரட்டிப்போட்ட படம் அது. 100 வருடங்களுக்கு முன்பே படங்களை எடுத்தவர் சாப்ளின். பேசும் படங்கள் வந்த பின்பும் மவுனப் படங்கள் எடுத்தார். சினிமாவில் காட்சிகள் பேச வேண்டும், வசனங்கள் அல்ல என்பார் அவர்.

ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் தனது படைபலத்தால் உலகை அச்சுறுத்திய காலம். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரை நையாண்டி செய்தவர் சாப்ளின்.

முதல் பேசும் படம்

அவரது முதல் பேசும் படம் ‘தி கிரேட் டிக்டேட்டர். அதில் ஹிட்லராகவும் யூத இனத்தைச் சேர்ந்த சவரத் தொழிலாளியாகவும் இரண்டு வேடங்களில் நடித்து சாப்ளின் நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைப்பார். தன் வெத்துப் பேச்சால் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருப்பவர் ஹிட்லர் என கேலியோடு, நகைச்சுவை ததும்ப சித்தரித்திருப்பார்.

சினிமா என்னும் வலிமையான மொழியைக் கொண்டு போரையும், அதிகார வெறியையும், இனவெறியையும் சாப்ளின் கேலிக்கும், கேள்விக்கும் உள்ளாக்கினார்.

பிதற்றலின் மொழி

ஹிட்லர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது போல் ஒரு காட்சி. அதில் ஹிட்லர் பேசுவது ஒரு மொழியே அல்ல. ஹ, ப்ப, பூ, ஹூ, ஷ, ஹீ எனும் வெறும் சப்தங்கள்தான். அவர் பேசவில்லை, பிதற்றுகிறார் என்பதைக் கேலியாகக் காட்டுவதற்காகக் காட்சி அப்படி அமைக்கப்பட்டிருக்கும்.

கடைசியில் ஹிட்லர் வேஷத்தில் இருக்கும் யூத சவரத் தொழிலாளி மேடை ஏறி உலக மக்களிடம் உரையாற்றும் காட்சி வரும். அதுவரை விழுந்து விழுந்து சிரித்த அனைவரையும் உறையவைக்கும் காட்சி அது.

“என்னை மன்னியுங்கள், நான் பேரரசனாக விரும்பவில்லை. யாரையும் அதிகாரம் செய்வது என் நோக்கம் அல்ல…. நாம் அதிகம் சிந்திக்கிறோம். ஆனால் குறைவாக நேசிக்கிறோம். புத்திசாலித்தனத்தை விடவும் நமக்குத் தேவை மனிதநேயமே. ஜனநாயகத்தின் பெயரால் நாம் இணைவோம். விரோதம் விடுத்து அன்பு கொள்வோம்” என உரை நிகழ்த்துவார் சாப்ளின்.

இது தான் மொழி

எப்போதுமே கோமாளியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் சாப்ளினுக்குள் இத்தனை ஆழ்ந்த சிந்தனை இருக்கிறதா? என பிரமிப்பூட்டும் காட்சி அது. கிட்டத்தட்ட 4½ நிமிடங்கள் தொடர்ந்து நிதானமான குரலில் பேசுவார்.

அவர் கண்கள் சின்ன சிமிட்டல்கூட இல்லாமல் கூர்மையாக இருக்கும். இது வெறும் வசனமல்ல. சாப்ளினின் ஆன்மாவின் குரலாகத் தோன்றும். எதை வேண்டுமானாலும் பேசுவது அல்ல மொழி, அர்த்தமுள்ள பேச்சு மட்டுமே மொழி என்று அந்தக் காட்சி எனக்கு உணர்த்தியது.

அதையும் தாண்டி சக்திவாய்ந்தது

பேச்சு என்பது வெறும் பேச்சாக இருந்தால் மட்டும் போதாது. திறன் வேறு திறமை வேறு. படபடவெனப் பேசவும், எழுதவும் உங்களால் முடிந்தாலும், சுய புத்தியில்லாமல் சொன்னதை சொல்லும் கிளிப் பிள்ளையாக வெளிப்படுத்துவது திறன் மட்டுமே. ஆனால் மொழியின் வெவ்வேறு பரிமாணங்களை உள்வாங்கிக் கொள்ளும்போது உங்கள் திறனை திறமையாக மாற்ற முடியும். மொழி அத்தனை சக்தி வாய்ந்தது.

அதன் முதல் படி, கற்றல் பல்வேறு விதங்களில் நிகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் அமெரிக்க உளவியல் நிபுணர் கார்ட்னர். “வகுப்பில் ஆசிரியர் விரிவுரை நிகழ்த்துவார். பின்னர் அதே விஷயங்களைப் பாடப் புத்தகங்களில் படிக்க வேண்டும். படித்தவற்றை நினைவில் வைத்து பரீட்சை எழுத வேண்டும். இப்படித்தான் கல்வி கற்க முடியும் என்னும் அபத்தமான மூட நம்பிக்கை நம்மிடையே நிலவுகிறது.” என்று விமர்சிக்கிறார் அவர்.

நமது மொழித் திறனை வளப்படுத்த அவர் முன்மொழியும் வழிகள் இவை:

# வார்த்தை விளையாட்டுகள்.

# குழுவாக இணைந்து கதை எழுதுதல்

# புதிய சொற்களைத் தொடர்ந்து கற்றுக்கொள்ளல்,

# அன்புக்குரியவர்களுக்குக் கடிதம் எழுதுதல்,

# உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரோடு வெவ்வேறு சமூகம் சார்ந்த விஷயங்களை விவாதித்தல்.

# நகைச்சுவையோடும், விமர்சனத்தோடும் சினிமா, உணவகங்கள், புத்தகங்கள் பற்றி எழுதுதல் .

# பலவித புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள் வாசித்தல்.

# பத்திரிகைகளுக்குக் கதை, கட்டுரைகளை எழுதுதல்.

# பள்ளியில், கல்லூரியில் வளாகப் பத்திரிகையை ஆரம்பித்தல்.

# இணையத்தில் பத்திரிகை, வலைப்பூ (blog) தொடங்குதல்.

கார்ட்னர் பரிந்துரைக்கும் விதங்களில் நீங்கள் மொழியோடு விளையாடத் தொடங்கினால், ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். அதாவது, மொழி என்பது ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள உதவும் ஊடகம் மட்டுமல்ல. அது நம் கடந்த காலத்தையும் எதிர் காலத்தைத் தொடர்புபடுத்தும் மிக நீண்ட வரலாற்றுப் பாலமும்கூட. கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, தொழில் நுட்பம் என அனைத்தையும் தாங்கிச் செல்லும் கப்பல் மொழி. அத்தகைய மொழியைப் பரந்து விரிந்த பார்வையின் அடிப்படையில் உள்வாங்கிக் கொண்டு பின்னர் வெளிப்படுத்தினால் உங்களாலும் இவ்வுலகைப் புரட்டிப்போட முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

35 mins ago

சிறப்புப் பக்கம்

45 mins ago

சிறப்புப் பக்கம்

56 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்