பள்ளிகளுக்கு பத்து கட்டளைகள்

பள்ளி மாணவர்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் மலேரியா, சிக்குன் குனியா போன்ற வைரஸ் காய்ச்சல் குழந்தைகள், பள்ளி மாணவர்களை எளிதில் தாக்கும். இதனால், அவர்கள் உடல் நலம் கெடுவதுடன், கல்வியும் பாதிக்கும். எனவே, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரும், தொடக்க கல்வித் துறை இயக்குநரும் உத்தரவிட்டுள்ளனர்.

அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரும் தங்கள் கட்டுப்பாட்டில் வரும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டியன குறித்த பத்து கட்டளைகளையும் பிறப்பித்துள்ளனர்.

தற்போது மழைக்காலமாக இருப்பதால் பள்ளி வளாகத்தில் நீர் தேங்காமல் இப்பதற்கான தடுப்பு நடவடிக்கையை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் குடிநீர்த் தொட்டி, கழிவு நீர்த் தொட்டி திறந்த நிலையில் இருத்தல் கூடாது. பயனற்ற திறந்த வெளிக்கிணறு, பள்ளம் இருந்தால் அதை மூடிவிட வேண்டும்.

பள்ளிக் கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் கழிவு நீர்க் கால்வாய் இருந்தால் கொசுக்கள் உற்பத்தியாவதை சுகாதாரத் துறை மூலம் தடுக்க தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், வாகன டயர் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி கொசுக்கள் உற்பத்தியை தடுக்க வேண்டும்.

பள்ளி மேற்கூரையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் கட்டுமானப் பணிக்காக கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் தேக்கி வைக்காமல் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். சிறு பள்ளம், சிறு கிணறு இருந்தால், அவற்றை மூட வேண்டும். இது தொடர்பாக காலையில் நடக்கும் இறைவணக்கத்தின்போது மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மாணவர்கள் மூலம் பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்தக் கட்டளைகளை அமல்படுத்தி நோய் தாக்குதலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குனரும், தொடக்க கல்வித் துறை இயக்குனரும் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE