பிரெக்ஸிட்டின் அரிச்சுவடி

By இராம.சீனுவாசன்

கடந்த ஒரு வாரமாக ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கும் ஒரு சொல் பிரெக்ஸிட். Britain + Exit = Brexit. Exit என்றால் வெளியேறு என்று பொருள். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (European Union EU) பிரிட்டன் வெளியேற வேண்டும் அல்லது சேர்ந்திருக்க வேண்டும் என்பது தொடர்பாக 2016 ஜூன் 23 அன்று நடந்த வாக்கெடுப்பை பிரெக்ஸிட் குறிக்கிறது. இந்த வாக்கெடுப்பு ஒரு பெரிய நாடாளுமன்றத் தேர்தல் போல பிரிட்டனில் நடந்தது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்திருக்க வேண்டும் என்று 48% மக்களும் வெளியேற வேண்டும் என்று 52% மக்களும் வாக்களித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியம்

இரண்டாம் உலகப் போரின் கோரத் தாண்டவத்துக்குப் பிறகு, பொருளாதார வளர்ச்சிக்கு நாடுகளுக்கிடையே ஒற்றுமை அவசியம் என உணரப்பட்டது. 28 ஐரோப்பிய நாடுகள் ஒன்றாக இணைந்து, 1992-ல் ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கின. இந்த நாடுகளுக்கிடையே மக்களும், வியாபார நிறுவனங்களும் எந்தவிதத் தடையும் இல்லாமல் சென்று வரலாம்.

அதாவது, பிரிட்டனில் பிறந்த ஒருவர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம், வேலை செய்யலாம், வியாபார முதலீடு செய்யலாம், எந்த ஒரு நாட்டின் அரசு அளிக்கும் சுகாதாரச் சேவையையும் பெறலாம். எனவே இந்த நாடுகளில் இவை தொடர்பான சட்டங்களும் ஒன்றாக இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் ஒரே நாடு போல இருக்கின்றன. இதில் இடம்பெற்ற 19 நாடுகள் ஒன்றாக இணைந்து யூரோ (EURO) நாணயத்தை உருவாக்கின. ஆனால் இந்த 19 நாடுகளில் பிரிட்டன் இல்லை.

‘வெளியேற வேண்டும்’ என்னும் குரல்

பிரிட்டனில் 13% மக்கள் வெளிநாட்டினர். இவர்களில் பெரும் பகுதியினர் மற்ற ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களால், பிரிட்டன் மக்களின் வேலைவாய்ப்பு குறைகிறது, அவர்களின் கல்வி, சுகாதாரத்துக்கு பிரிட்டிஷ் அரசு அதிகச் செலவு செய்ய வேண்டியுள்ளது என்ற கருத்து உள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருப்பதால், இந்த ஒன்றியத்துக்கு பிரிட்டன் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்தக் கட்டணத்துக்குச் சமமாகக்கூட பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பயன்பெறவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டதிட்டங்கள் கடுமையாக இருப்பதால் வியாபாரம் செய்வதும் பிரிட்டிஷ் மக்களுக்குக் கடுமையாக இருந்தது. இவை எல்லாவற்றையும் இணைத்துப் பார்க்கும்போது பிரிட்டன் பிரிந்து வருவது நாட்டின் பொருளாதாரத்துக்கும், பிரிட்டனின் இறையாண்மைக்கும் நல்லது என்பது ‘வெளியேற வேண்டும்’(Leave) என்பவர்களின் கருத்து.

‘வெளியேற வேண்டாம்’ என்னும் குரல்

பிரிட்டனின் ஏற்றுமதி - இறக்குமதியில் 50% மற்ற ஐரோப்பிய நாடுகளுடன்தான் நடக்கிறது. ஆகவே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால், மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வியாபார ஒப்பந்தம் செய்ய வேண்டும். அதே போல, முதலீடுகள் செய்யும் வியாபாரம் நடத்தவும் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்குப் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.

இவை மட்டுமல்லாமல், ஐரோப்பிய ஒன்றியம் உலகில் உள்ள மற்ற நாடுகளுடன் பொருளாதார ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளது. அந்த நாடுகளுடன் இப்போது மீண்டும் பிரிட்டன் புதிய பொருளாதார ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும். இவை எல்லாம் பிரிட்டன் பொருளாதாரத்தை நசித்துவிடும் என்பதே ‘வெளியேற வேண்டாம்’ என்பவர்களின் கருத்து. இந்தக் கருத்தைக் கொண்டிருந்த மக்கள் 48% மட்டுமே இருந்ததால், Brexit வாக்கெடுப்புக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

நடைமுறைக்கு வருமா?

இந்தத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த முடியாது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான சட்டம் இயற்ற வேண்டும். அதன் அடிப்படையில் ஒன்றியத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முறை அதைச் சார்ந்த நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியச் சட்டங்களுக்குப் பதிலாக பிரிட்டன் தனக்கான வியாபாரம், குடியேற்றம், என்பது தொடர்பாகச் சட்டங்கள் இயற்ற வேண்டும். மற்ற நாடுகளுடனும், ஐரோப்பிய ஒன்றியத்துடனும் வியாபார ஒப்பந்தங்கள் செய்ய வேண்டும். எனவே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிரிட்டன் முழுமையாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும்.

டேவிட் கேமரூன் பதவி விலகல்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டாம் என்பது பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் கருத்து. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனுக்குப் பிரதான இடம் வாங்கித் தருவதாகவும், மேலும் சில சலுகைகளை வாங்கித் தருவதாகவும் கேமரூன் அறிவித்தார்.

ஆனால், இதையெல்லாம் பிரிட்டிஷ் மக்கள் நிராகரித்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வாக்களித்ததால், இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்றும், ஒன்றியத்திலிருந்து விலக பிரிட்டன் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்க தனக்கு உரிமை இல்லை என்று கூறியும், கேமரூன் பதவி விலக முடிவுசெய்துள்ளார்.

அரசியல் மாற்றங்கள்

ஸ்காட்லாந்து (Scotland), வேல்ஸ் (Wales), வடக்கு அயர்லாந்து (North Ireland) இங்கிலாந்து (England) ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்டதுதான் பிரிட்டன். இதை United Kingdom என்று தான் சொல்ல வேண்டும். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருக்க வேண்டும் என்று ஸ்காட்லாந்து 62% வாக்குகளையும், வடக்கு அயர்லாந்து 55.8% வாக்குகளையும் கொடுத்துள்ளன.

எனவே, இந்த இரு பகுதிகளும் பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளன. பிரிட்டன் போலவே நார்வே போன்ற சில நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முயலலாம். மேலும் எல்லா உலக நாடுகளிலும் வெளிநாட்டு மக்களை ஏற்றுக்கொள்வதில்லை என்ற சிந்தனை மேலோங்கலாம்.

உலகப் பொருளாதாரத்துக்குப் பாதிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறும்போது, பிரிட்டனின் நாணயமான பவுண்டின் மதிப்பு குறையும், அதன் பன்னாட்டு வியாபாரம் பாதிப்படையும், அந்நாட்டில் இருக்கும் அந்நிய முதலீடு வெளியேறும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. இவற்றில் பல இப்போது நடந்தேறியுள்ளன. இதனால் டாலர் மதிப்பு உயரலாம். பிரிட்டனில் உள்ள நிதிச் சந்தை உலகின் மிகப் பெரிய சந்தைகளில் ஒன்று. எனவே, இதன் தாக்கம் எல்லா நாடுகளிலும் இருக்கும். அடுத்த சில மாதங்கள் எல்லா நாடுகளின் நிதிச் சந்தைகளில் பங்கு விலைகளும், அந்நியச் செலாவணி மாற்றும் விகிதங்களும், வட்டி விகிதங்களும் ஏற்ற இறக்கத்துடன் சரியும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டாம் என்ற பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்

பிரெக்ஸிட்டுக்குத் தீவிரப் பிரச்சாரம் செய்த லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன்

கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்

தொடர்புக்கு: >seenu242@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

27 mins ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்