வெற்றி முகம்: சிந்து சொல்லித் தரும் பாடங்கள்!

By டி. கார்த்திக்

பி.வி. சிந்து. 21 வயது இளம் பெண். ஆனால், அவர் இன்று தொட்டுள்ள உச்சம் மிகப் பெரியது. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம், சீன ஓபன் பேட்மிண்டன், இந்திய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் எனச் சமீப காலமாக பேட்மிண்டனில் கோலோச்சிக்கொண்டிருக்கிறார். 6 மாதங்களுக்கு முன்பு உலகின் 10-ம் நிலை வீராங்கனையாக இருந்தவர், இன்று ஜெட் வேகத்தில் 2-ம் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்.

பொதுவாக ஒவ்வொரு வெற்றியாளரின் பின்னணியிலும் கடின உழைப்பு, ஈடுபாடு எனப் பலவும் இருக்கும். ஒருவரின் வெற்றிக் கதையிலிருந்து மற்றவர்கள் பாடம் படிக்க முடியும். இந்திய பேட்மிண்டனை இன்று ஆண்டு கொண்டிருக்கும் பி.வி.சிந்துவின் வெற்றியிலிருந்து நீங்கள் கற்பதற்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. அது உங்களின் வெற்றிக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவலாம். அவரது வெற்றியின் ரகசியத்தையும் பின்னணியையும் பார்ப்போமா?

தியாகங்கள் நல்லது

இன்று இளையோர் ஒரு நிமிடம்கூட கைபேசியை விட்டுப் பிரிவதில்லை. கைபேசி இல்லாத வாழ்க்கையை அவர்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால், பி.வி.சிந்து 3 மாதங்கள்கூட கைபேசியைப் பயன் படுத்தாமல் இருந்திருக்கிறார். மிகப் பெரிய தொடரில் பங்கேற்பதற்கு முன்பு கவனச் சிதறல் ஏற்பட்டு, பயிற்சி பாதிக்காமல் இருக்க கைபேசியின் பக்கம் தலை வைத்துப் படுக்கமாட்டார் சிந்து. பயிற்சியாளரின் இந்த அறிவுரையைக் கண்டிப்பாகத் தொடர்ந்து பின்பற்றிவருகிறார் அவர்.

பி.வி.சிந்துக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளைப் பிரியம். பேட்மிண்டன் தொடர்களுக்கு முன்னால் ஐஸ்கிரீமுக்கும் தடை போட்டுக்கொள்வார். நம்மில் யாராவது இந்தத் தியாகத்தைச் செய்வோமா எனக் கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன். வாழ்க்கையில் சாதிப்பதற்கு இதுபோன்ற சிறு தியாகங்கள் எல்லாம் ஒன்றுமே கிடையாது என்பது பி.வி. சிந்துவின் பாலிசி.

எல்லையில்லா ஈடுபாடு

பி.வி. சிந்துவின் ஹைதராபாத் வீட்டுக்கும் அவர் பயிற்சி மேற்கொள்ளும் பேட்மிண்டன் பயிற்சி அகாடமிக்கும் இடையே 56 கிலோ மீட்டர் தூரம். இங்கே செல்வதற்காகத் தூக்கத்தைத் துறந்து அதிகாலை 3 மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பிவிடுவார். தூரம் அதிகமாக இருந்தாலும் அதற்காக அலுத்துக்கொள்ள மாட்டார். தினந்தோறும் பயிற்சிக்காக இவ்வளவு தூரம் வந்து செல்வதில் கொஞ்சமும் சோர்வு வராமல் பார்த்துக்கொள்வார். தூக்கத்தை நினைத்தும் ஏங்க மாட்டார்.

அதேபோலத் தொடர்களுக்கு முன்பாகத் தினந்தோறும் 6 முதல் 7 மணி நேரம் வரை கடினமாகப் பயிற்சி மேற்கொள்வதும் அவரது வாடிக்கை. வாரத்தில் ஒரு நாள் ஓய்வு தவிர, 6 நாட்களுக்கும் கடினமான பயிற்சியைத் தொடருவார். எப்போதுமே ஒரு குறிக்கோளை அடைய ஈடுபாடும் கடின உழைப்பும் இரண்டு கண்கள் போன்றவை. இரண்டையும் கருத்தாகச் செய்வர்களுக்கு வெற்றி மாலை நிச்சயம் காத்திருக்கும். சிந்து ஏன் வெற்றியாளராக வலம்வருகிறார் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்குமே.

தன்னம்பிக்கை மனம்

சிலர் எப்போதுமே போட்டி, பந்தயம் என்றால் சகப் போட்டியாளரை நினைத்து மனதில் கலக்கம் கொள்வார்கள். உண்மையில் போட்டியாளர் தனித்த திறன்களை அதிகம் பெற்றவராக இருந்தாலும், அவர் தோற்கடிக்க முடியாதவர் இல்லை என்ற எண்ணம் நமக்குள் இருக்க வேண்டும். இந்த நேர்மறையான எண்ணம் வெற்றியை வசப்படுத்த உதவும். தனது பணிவாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து பல சந்தர்ப்பங்களில் பேட்மிண்டன் உலகத் தரவரிசையில் முன்னணி வகிக்கும் வீராங்கனைகளைச் சிந்து சந்தித்திருக்கிறார். அந்த வீராங்கனைகளை யெல்லாம் பல சந்தர்ப்பங்களில் பந்தாடியிருக்கிறார். சக போட்டியாளரிடம் எவ்வளவு தனித் திறன்கள் இருந்தாலும், அதைப்பற்றியெல்லாம் சிந்து எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அவர்களைத் தோற்கடிக்கத் தன்னிடம் திறமைகளும், பொறுமையும் இருக்கிறது என நம்பக்கூடியவர் அவர். அதனால்தான் இன்று அவரே உலகத் தரவரிசையில் இரண்டாம் நிலையை அடைந்திருக்கிறார்.

சுயமாகச் சிந்தியுங்கள்

சிந்துவின் அப்பாவும் அம்மாவும் கைப்பந்தாட்ட விளையாட்டில் சாதித்தவர்கள். இப்படிப்பட்ட ஒரு பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்தால், அவர்கள் வெற்றிக்கொடி கட்டிய துறையிலேயே பிள்ளையையும் களமிறக்கிவிடவே விரும்புவார்கள். கைப்பந்தாட்டப் போட்டியில் உயரம் மிகவும் முக்கியம். பி.வி. சிந்து 6 அடி உயரம் உள்ளவர். கைப்பந்தாட்டப் போட்டியில் விளையாடும் அளவுக்குக் கூடுதல் உயரம் உள்ளவரே. இந்தச் சிறப்பு இருந்தபோதும், சிந்து கைப்பந்தாட்டத்தைத் தேர்வு செய்யவில்லை. பேட்மிண்டனையே விரும்பி தேர்வு செய்தார். 8 வயதில் விளையாடத் தொடங்கி, இன்று பல உச்சங்களைத் தொட்டிருக்கிறார். இதன் மூலம் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், எப்போதும் உணர்ச்சிகரமான முடிவை எடுக்காமல் தன்னுடைய வழியிலேயே பயணிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

சிந்துவின் விஸ்ரூப வெற்றியின் பின்னணியை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நீங்கள் ஒரு போட்டியாளராக இருந்தால், இவை உங்களுக்கும் பொருந்துமல்லவா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்