மாணவர்களுக்கு புரிந்த மொழியிலேயே பாடங்கள் இருந்தால் எப்படி இருக்கும்? இந்தக் கேள்விக்கு உரிய பின்னூட்டத்தை அனுபவரீதியாக உணரவைத்திருக்கிறார் ஞா.பெர்ஜின்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 12-ம் வகுப்புக்கான இயற்பியல் ஆசிரியர் பெர்ஜின். இதற்கு முன்பு நெல்லை ராதாபுரத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் ஆசிரியர்களுக்கான ஆங்கில பயிற்சியாளராக இருந்தார். ஆனால் ஆங்கிலப் புலமை குறைவாக இருந்ததால் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் பயிற்று விப்பதில் ரொம்பவே சிரமப்பட்டார்.
“அந்த நேரத்தில் என்னை நானே மேம்படுத்திக் கொள்ள இணையம் வழியாகப் பல பயிற்சிகளை எடுத்தேன். சில தொழில் நுட்பங்களையும் கற்றேன். அந்த பயிற்சிதான் இப்போது எளிய முறையில் மாணவர்களுக்கு கற்பிக்க உதவுகிறது’’ என்கிறார் பெர்ஜின்.
படைப்பாற்றலை ஊக்குவிக்கும் தொழில்நுட்பம்
12-ம் வகுப்பு இயற்பியல் பாடத்தில் உள்ள மூன்று வகையான கேள்விகளையும் அதற்கான பதில்களையும் ஆடியோ பதிவாக வைத்திருக்கிறார் பெர்ஜின். பதில்கள் வழக்கமான கட்டமைப்புக்குள் இல்லாமல், மாணவர்களுக்குப் புரிந்த மொழியில் இலகுவாக விளக்கப்பட்டிருப்பதுடன் அந்த விளக்கத்துக்கு ஏற்ற வகையில் அனிமேஷன் படங்களையும் ‘வீடியோ எடிட்டிங் சாஃப்ட்வேர்’ மூலமாக வீடியோ காட்சிகளாக இணைத்திருக்கிறார்.
ஆடியோவைக் கேட்டுக்கொண்டே வீடியோ காட்சிகளையும் பார்க்கும் மாணவர்கள், கேள்விக்கான விளக்கத்தை தங்களுக்குப் புரிந்த மொழியில் எளிதில் புரிந்துகொள்கிறார்கள். இதனால் தேர்வில் கேட்கும் கேள்விகளுக்கு வழக்கமான பாணியில் இல்லாமல், தங்களுக்குத் தெரிந்த விதத்தில் படைப்பாற்றலோடு பதில் எழுத முடிகிறது. இதுதான் பெர்ஜின் தனது சுயமுயற்சியில் செய்திருக்கும் சாதனை.
பாட்டு போல பாடங்களையும் கேட்கலாம்
12-ம் வகுப்பில் மொத்தம் 10 பாடங்கள். இதில் ஆறு பாடங்களுக்கான கேள்வி - பதில்களை இந்த முறையில் தயாரித்து முடித்துவிட்டார் பெர்ஜின். எஞ்சிய பாடங்களையும் இந்த ஆண்டுக்குள் முடித்துவிட முடியும் என்று நம்பிக்கை அளிக்கிறார். இவ்வாறு பாடங்களைக் கேட்க ஆரம்பித்த பிறகு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது பெர்ஜினின் திறமைக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம். கடந்த ஆண்டு இந்தப் பள்ளி 12-ம் வகுப்பு இயற்பியல் மாணவர்களின் சராசரி மதிப்பெண் 128-ஆக இருந்தது. இந்த ஆண்டு 142-ஆக உயர்ந்திருக்கிறது. 192 மதிப்பெண் எடுத்த மாணவரும் இருக்கிறார்.
“குமரி மாவட்டத்தில், பார்வைத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக ஆடியோ புத்தகங்களை முதலில் உருவாக்கிக் கொடுத்தேன். அதன் அடுத்த கட்டமாக இப்போது வீடியோவையும் சேர்த்து வழங்குகிறேன். அரசு வழங்கிய மடிக்கணினிகள் எங்கள் பள்ளியில் பெரும்பாலான மாணவர்களிடம் இருக்கிறது. அநேகம் பேர் அலைபேசிகளும் வைத்திருக்கிறார்கள்.
கேள்வி - பதில்களை ஆடியோ வடிவில் தனியாகக் கேட்க முடியும் என்பதால் அலைபேசியில் பாட்டுக் கேட்பதுபோல் பாடங்களைக் கேட்கலாம். வீட்டில் இருக்கும்போது மடிக்கணினி வழியாக செய்முறை புரிதலோடு பாடத்தைக் கிரகித்துக் கொள்ளமுடியும்.
முன்பெல்லாம் பாடப் புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே வரி பிசகாமல் எழுத மட்டுமே தெரிந்திருந்த எங்கள் மாணவர்கள், இந்த முறையில் பாடங்களைப் படிக்க ஆரம்பித்த பிறகு சொந்த நடையில் எழுதும் அளவுக்கு தேர்ந்துவிட்டார்கள்” எனப் பெருமிதம் கொள்கிறார்
- பெர்ஜின். தொடர்புக்கு: 9443582772
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago