மாணவரைப் பெயர் சொல்லி ஆசிரியர் அழைத்தால் அம்மாணவர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. படிப்பை முடித்துச் சென்ற பின் சில ஆண்டுகள் கழித்து ஆசிரியரைச் சந்திக்க நேர்கையில் பெயரை நினைவு வைத்திருந்தார் என்றால் மாணவருக்குப் பெருமிதமே வந்துவிடும். ஆண்டுக்கு நூற்றுக்கணக்கில் வெளியே செல்லும் மாணவர்கள் எல்லோரது பெயரையும் நினைவில் வைத்திருப்பது சிரமமான காரியம்.
வகுப்பை உயிர்ப்பாக்கும் வழி
ஏதேதோ காரணங்களால் மாணவரின் பெயர் நினைவில் இருக்கும். மாணவர் பெயரை நினைவில் வைத்திருப்பது ஆசிரியருக்கு ஒரு பயிற்சி. அதை இயல்பாக மேற்கொள்வது என் வழக்கம். வகுப்பறையில் வருகைப் பதிவு எடுக்கும்போது சுழல் எண்களைச் சொல்லி அழைக்க மாட்டேன். கைதி எண்ணைச் சொல்லி அழைப்பது போலவோ திரைப்படங்களில் காவலரை அழைப்பது போலவோ எனக்கு அது தோன்றும். பெயர் சொல்லி அழைப்பது வகுப்பை உயிர்ப்பாக்கும். வருகைப் பதிவேட்டில் எண் மட்டும் எழுதப்பட்டிருந்தால் தனியாக ஒரு வருகைப் பதிவேட்டை வைத்துக்கொள்வேன்.
ஒவ்வொருவரையும் பெயர் சொல்லித்தான் அழைப்பேன். பெயரை அழைத்துவிட்டு நிமிர்ந்து மாணவர் முகத்தையும் பார்ப்பேன். சில நாட்களில் பெயரும் முகமும் ஒட்டி மனதில் பதிந்துவிடும். சில பெயர்கள் அவற்றின் இயல்பு காரணமாகப் பதியும். சில பெயர்கள் அவை வைக்கப்பட்ட காரணத்தால் பதியும். பெயராய்விலும் எனக்குக் கொஞ்சம் ஈடுபாடு இருப்பதால் மாணவர்களிடம் பெயர் வைக்கப்பட்ட காரணம் பற்றி விசாரிப்பதுண்டு.
காலம் மறக்கடிக்கவே செய்கிறது
சில மாணவர்களின் பெயர்கள் அவர்கள் அடிக்கடி வந்து சந்திப்பதால் நினைவில் பதியும். ரயிலில் ஒருமுறை நின்றுகொண்டு போனபோது என்னைப் போலவே சற்றுத் தூரத்தில் நின்றபடி பயணம் செய்த இளங்கோவைப் பெயர் சொல்லி அழைத்தேன். அவருக்கு ஆச்சரியம். ஆசிரியரே அழைத்துப் பேசுகிறார் என்பதோடு தன் பெயரையும் நினைவில் கொண்டிருக்கிறார் என்பதுதான் காரணம். இளங்கோ என்னும் பெயர் கொண்ட மாணவரை ஒரு தமிழாசிரியர் மறந்துவிட முடியுமா?
ஒரு வகுப்பில் செந்தில் ஒருவரும் செந்தில்குமார் மூவரும் இருந்தனர். அவர்களின் தோற்றம், ஊர், குடும்பப் பின்னணி ஆகியவையும் என் நினைவில் இருக்கின்றன. அந்த வகுப்பில் பயின்ற மாணவர் ஒருவரைச் சந்தித்தபோது, நான்கு செந்தில்களையும் விசாரித்தேன். அவருக்கு எத்தனை நினைவுபடுத்தியும் ஒரு செந்தில்குமாரை மனதில் கொண்டு வர இயலவில்லை. எனக்கு நினைவிருந்தது அவருக்கு ஆச்சரியம்.
இப்படி எல்லாம் முயற்சி எடுத்திருந்தாலும் காலம் பெயர்களை மறக்கடிக்கவே செய்கிறது. எங்காவது பொதுவிடத்தில் ஒரு மாணவர் எதிர்ப்பட்டு “என்னை நினைவிருக்கிறதா?” என்று கேட்பார். பெயரைச் சொல்லிவிட்டால் அவர் முகம் பொலியும். சில சமயம் நினைவுக்குக் கொண்டுவர முயன்று வெவ்வேறு வகையில் பேச்சு கொடுத்து முயல்வேன். சட்டென வந்து திக்கும். சிலசமயம் நினைவு வராமலே போய்விடும். சமாளிப்பு வெளிறிப் போய்விடும்.
அப்போது அந்த மாணவரைவிட எனக்கு அவமானமாக இருக்கும். மூன்றாண்டுகள் என் பார்வையில் இருந்த ஒருவர் பெயரை மறக்கலாமா நான்? ஒரு வகுப்பு மாணவர்களை எப்படி நினைவில் கொண்டிருந்தேன் தெரியுமா? அவ்வகுப்பில் பெரும்பாலான மாணவர்கள் நல்ல உயரம். அரிதாக அமையும் ஒப்புமை. அவ்வகுப்பில் பயின்ற மாணவர் ஒருவர் சில ஆண்டுகள் கழித்து என்னைப் பார்க்கக் கல்லூரிக்கு வந்தார். அவரை நன்றாக நினைவிருந்தது. தேசிய மாணவர் படையில் ஆர்வத்தோடு பங்கெடுத்துக்கொண்டிருந்தவர் அவர். ஆனால், பெயர் நினைவுக்கு வரவில்லை. அவர் என்னை ஊகிக்கவும் விடவில்லை. ‘எம்பேரச் சொல்லுங்கய்யா’ என்று கேட்டுவிட்டார். இப்படியும் சிலர் சோதிப்பார்கள்.
அன்றைக்குப் பதில் கண்டுபிடித்தேன்
நேரே அப்படிக் கேட்கும்போது என்ன சொல்ல முடியும்? “இருப்பா யோசிச்சு சொல்றேன்” என்றேன். அதுவே அவருக்குப் பிடிக்கவில்லை. “நீங்க எப்படி எம் பேர மறக்கலாம்” என்று உரிமையோடு சண்டை போடுபவரிடம் என்ன சொல்வது? மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். அவர் சுரேஷ். சிலசமயம் பெயரை மனதுக்குள் யோசித்தபடி சமாளித்துப் பேசிக்கொண்டிருப்பேன். பேசப் பேசப் பெயரை மனம் யோசித்து நினைவுக்குக் கொண்டுவந்துவிடும். பெயர்களை நினைவில் பதித்திருக்க ஆவணம் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கலாம் என்று அவ்வப்போது தோன்றுவதுண்டு. புகைப்படம், பெயர், ஆண்டு ஆகியவற்றோடு ஒரு பதிவேட்டை வைத்திருப்பது ஆசிரியருக்குத் தேவைதான்.
ஒருநாள் வெளியூர்ப் பயணம் காரணமாக விடிகாலை நான்கு மணிக்குக் கிளம்பி வீட்டிலிருந்து பேருந்து நிலையத்துக்கு நடக்க ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் நடப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சாலையில் கொஞ்ச தூரம் நடந்திருப்பேன். எனக்குப் பின்னால் வந்த வண்டி எனக்கு முன்னால் போய் நின்றது. ஆளைப் பார்த்ததும் என் மாணவர் என்பது தெரிந்துவிட்டது.
சட்டெனப் பெயரும் நினைவுக்கு வந்துவிட்டது. “என்னப்பா ரங்கசாமி, நல்லா இருக்கறயாப்பா” என்றேன். இருள் பிரியாத அவ்விடிகாலை நேரத்தில் அவர் முகத்தில் ஆச்சரியம் அப்படிப் பளிச்சிட்டது. சட்டென இறங்கிவிட்டார். “எப்படிங்கய்யா என் பேரு ஞாபகம் இருந்துச்சு” என்றார். வகுப்புண்டு, அவருண்டு என்று இருப்பவர். வகுப்பிலும் பேச மாட்டார்.
பின் எப்படி அவர் பெயர் நினைவில் இருந்தது? அது எனக்கே புரியவில்லை. எப்படியோ நினைவில் இருந்தது. சட்டென வாயிலும் வந்துவிட்டது. மேற்கொண்டு படிப்பைத் தொடராத அவர் லாரித் தொழில் செய்துகொண்டிருக்கிறார். அவருடனான பைக் பயணம் அத்தனை மகிழ்ச்சியாக அமைந்திடக் காரணம் பெயர். பெயரில் என்ன இருக்கிறது என்னும் கேள்விக்கு அன்றைக்குப் பதில் கண்டுபிடித்தேன். பெயரில் பரஸ்பர அன்பு இருக்கிறது.
பெருமாள் முருகன்,எழுத்தாளர்,
தமிழ்ப் பேராசிரியர் தொடர்புக்கு:
murugutcd@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago