பிளஸ் 2 பொதுத் தேர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அடுத்து மேற்படிப்புக்கு என்ன தேர்ந்தெடுக்கலாம் என்கிற எண்ண ஓட்டம் தொடங்கியிருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை கணினி அறிவியலைத் தேர்ந்தெடுத்துப் படிப்பவர்களுக்கு மட்டும்தான் கணினி அவசியமாக இருந்தது. ஆனால், இப்போது இந்தியக் கல்வியின் முக்கிய அங்கமாகத் தொழில்நுட்பம் மாறியுள்ளது. 2011-ல் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழக அரசே இலவச மடிக் கணினியை வழங்கியதன் மூலம் இது தெளிவானது.
அதிலும் கணினித் துறையில் படிக்கும் மாணவர்களுக்கு என்றில்லாமல் இளங்கலை அறிவியல், கலை, வணிகவியல் ஆகிய பட்டப் படிப்பு படிப்பவர்களுக்கும் கணினிகள் வழங்கப்பட்டன. டிஜிட்டல் கல்வியை நோக்கி நாம் நகர்வதையும் நகர வேண்டிய தேவையையும் இது சுட்டிக்காட்டுகிறது. அதற்காக எல்லோரும் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் இப்படியான பட்டப் படிப்புகளைதான் படிக்க வேண்டும் என்பதில்லை.
படித்தால் மட்டும் போதுமா?
50 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகளை ஆண்டுதோறும் இந்தியா உருவாக்குகிறது என்கிறது சமீபத்திய ஒரு ஆய்வு. இவர்களில் 75 சதவீதத்தினர் வேலைச் சந்தைக்குள் நுழைகிறார்கள். ஆனால் 2015-ன் தேசிய வேலைவாய்ப்பு அறிக்கையின்படி இந்தியப் பொறியியல் பட்டதாரிகளில் 80 சதவீதத்தினர் வேலை இன்றித் தவிக்கிறார்கள். ஒட்டுமொத்த பட்டதாரிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் 47 சதவீதத்தினர் வேலையில்லாப் பட்டதாரிகளாகவே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலை தொடரக் காரணம் என்ன? முதலாவதாக நம்முடைய கல்வி அமைப்பு பெரும்பாலும் ஏட்டுப் பாடமாகவே உள்ளது. கற்றதை செயல்முறைப்படுத்தச் சொல்லித் தருவதைக் காட்டிலும் புத்தகங்களில் உள்ளவற்றை அப்படியே மனதில் பதியவைக்கத்தான் சொல்லித் தரப்படுகிறது. சமீபத்தில் இந்தச் சிக்கல் உணரப்பட்டு செயல்முறைக் கல்வித் திட்டம் பல இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் புத்தகக் கல்வியை நெறிமுறைப்படுத்துவதற்காக சீரான திட்டம் முழுவதுமாக அமல்படுத்தப்படவில்லை.
இரண்டாவது, ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டம் பெற்றுவிட்டாலே போதும் வேலை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை இன்னமும் நிலவுகிறது. ஒரு பாடப் பிரிவை ஏன் தேர்ந்தெடுக்கிறோம், அதைப் படித்தால் நம்முடைய திறனுக்கு ஏற்ற மாதிரியும் அதே நேரத்தில் வேலைவாய்ப்பும் இருக்குமா என்பன போன்ற கேள்விகளை எத்தனை பேர் கேட்கிறோம்?
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை மனதில் கொண்டு அதேநேரம் உங்களுடைய படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் சில பாடப் பிரிவுகளைத் தெரிந்துகொள்வோம்.
கிராஃபிக் டிசைன்
20 ஆண்டுகளுக்கு முன்புவரை கிராஃபிக்ஸ் என்றால் ஹாலிவுட் படங்கள் மட்டும்தான் நினைவுக்கு வரும். ஆனால் இன்று சினிமா, தொலைக்காட்சி ஊடகம் மட்டுமின்றி வலைப்பூ, ஃபேஸ்புக் பதிவு, புத்தகப் பதிப்புத் தொழில், பத்திரிகை வடிவமைப்பு, சுயதொழில் என அத்தனை துறைகளுக்கும் பல்வேறு விஷயங்களுக்கும் கிராஃபிக்ஸ் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.
உங்களுக்கு கிராஃபிக்ஸ் மீது ஆர்வமும் படைப்பாற்றலும் இருந்தால் கிராஃபிக்ஸ் டிசைன் ரிச் மீடியா பட்டயம், கிராஃபிக் டிசைனிங் ஆகிய படிப்புகள் படிக்கலாம். அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிஸைன், மும்பையில் உள்ள இண்டஸ்ட்ரியல் டிசைன் சென்டர், டெல்லியில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் டிஸைன் அண்டு டெவலப்மென்ட் சென்டர், குவாஹாத்தி பல்கலைக்கழகத்தில் உள்ள டிப் பார்ட்மென்ட் ஆஃப் டிசைன் ஆகிய கல்வி நிறுவனங்கள் கிராஃபிக்ஸ் படிப்பைச் சிறப்பாகப் பயிற்றுவிக்கின்றன.
அனிமேஷன் டிசைன்
வெள்ளித்திரையில் கிராஃபிக்ஸின் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கின்றது என்றால் சின்னத்திரையில் அனிமேஷன் கோலோச்சுகிறது. இன்று ஏகப்பட்ட கார்ட்டூன் சேனல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், போதுமான எண்ணிக்கையில் அனிமேஷன் படிப்புகளைப் படித்தவர்கள் இல்லை. அனிமேஷன் என்பது கார்ட்டூன் திரைப் படங்களுக்கு மட்டுமின்றி விளம்பரங்கள், புத்தகங்கள், வலைப்பூ என பலவற்றுக்கும் தேவைப்படுகிறது.
உங்களுக்கு கேலிச்சித்திரம் வரையும் திறன் அபரிமிதமாக இருந்தால் பி.எஸ்சி. அனிமேஷன், 3டி அனிமேஷன் பட்டயம், அனிமேஷன் பட்டயம், டிஜிட்டல் கிராஃபிக்ஸ் அனிமேஷன் என ஏகப்பட்ட படிப்புகள் உள்ளன. சென்னையில் உள்ள குளோபல் ஸ்கூல் ஆஃப் அனிமேஷன், மும்பையில் உள்ள மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக், பெங்களூருவில் உள்ள டெக்னோ பாயிண்ட் மல்டிமீடியா, மும்பை, நொய்டா, பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள அரீனா மல்டிமீடியா. இப்படி ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களில் இந்த படிப்பு கற்றுத்தரப்படுகிறது.
வீடியோ எடிட்டிங்
பதிவு செய்யப்பட்ட வீடியோவை தொகுப்பவர்தான் எடிட்டர். சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திருமண வீடியோ படங்கள் என ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு விதமாக தொகுக்க வேண்டியிருக்கும். இவை ஒவ்வொன்றுக்கும் மென்பொருளும் மாறுபடும். ஆக, நீங்கள் எந்தத் துறையில் வீடியோ எடிட்டராக விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்ற மாதிரி படிப்பைத் தேர்ந்தெடுங்கள். எம்.எஃப்.ஏ. மீடியா டிசைன், பி.எஸ். டிஜிட்டல் சினிமாட்டோகிராஃபி, எம்.ஏ. ஃபிலிம் மற்றும் டிவி உள்ளிட்ட பாடப் பிரிவுகளைப் படிக்க பூனேவில் உள்ள ஃபிலிம் அண்டு டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, கொல்கத்தாவில் உள்ள சத்யஜித்ரே ஃபிலிம் மற்றும் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட், மும்பையில் உள்ள விஸ்லிங்க் வூட்ஸ் இண்டர்நேஷனல், டெல்லியில் உள்ள சென்டர் ஃபார் ரிசர்ச் இன் ஆர்ட் ஆஃப் ஃபிலிம் அண்டு டெலிவிஷன், நொய்டாவில் உள்ள ஏஷியன் அகாடமி ஆஃப் ஃபிலிம் மற்றும் டெலிவிஷன் ஆகியவற்றில் படிக்கலாம். உங்களுடைய தனித் திறன், விருப்பம், ஆற்றலுக்கு ஏற்ற மாதிரியான படிப்புகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அதைச் சரியாகத் தேர்ந்தெடுத்தால் மகிழ்ச்சியாகப் படிக்கலாம், படிப்புக்கு ஏற்ற வேலையில் சேர்ந்து பிரகாசிக்கலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago