இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் இப்போது இல்லை. அவரை வாழ்க்கையின் விளிம்புக்குத் தள்ளிய பல சிக்கல்கள் இருக்கக்கூடும். ஆனால் அவர் முகநூலில் விட்டுச் சென்ற சில பதிவுகள், நம் கல்வி அமைப்பில் இருக்கும் சிக்கலின் முகத்திரையை கிழித்துக்காட்டுகின்றன.
ரோகித் வெமுலா, சரவணன், முத்துக்கிருஷணன் போன்றவர்கள் வெறுமனே மரணிக்கவில்லை. இந்தக் கல்வி அமைப்புத் தொடர்பாக அவர்களுக்கு இருந்த உள்ளக்குமுறலை முக்கியத் தலைவர்களுக்கு கடிதம் மூலம் சுட்டிக்காட்டிவிட்டுத் தற்கொலை என்கிற உச்சபட்ச முடிவை எடுத்திருக்கிறார்கள். முதலில், நம் கல்வி அமைப்பிலேயே சிக்கல் உள்ளது என்பதை இப்போதாவது ஒப்புக்கொள்ள வேண்டும்.
உறுதியோடு முயற்சி செய்தேன்…
அதிலும் முத்துக்கிருஷ்ணன் மனம் வெதும்பிப் பதிவிட்ட அனுபவங்களைவிட மகிழ்ச்சியில் எழுதிய ஒரு பதிவு மேலும் வேதனையைக் கூட்டுகிறது.
“இது ஜே.என்.யூ-க்குள் நான் கால் பதிக்கும் நான்காவது வருடம்.
மூன்று முறை ஜே.என்.யூ.வின் எம்.ஏ. நுழைவுத் தேர்வை எழுதினேன்
இரண்டு முறை ஜே.என்.யூ.வின் எம்.ஃபில்/ பிஎச்.டி. நுழைவுத் தேர்வை எழுதினேன்
இரண்டு முறை நேர்முகத் தேர்வு வரை வந்தேன்.
ஒன்று தெரியுமா?
முதல் இரண்டு முறைகளில் நான் ஆங்கிலத்தை சரியாகக் கற்றுக் கொண்டிருக்க வில்லை.
ஆனால், பின்வாங்கக் கூடாது என்கிற மனஉறுதியோடு முயற்சி செய்தேன்…”
எனத் தொடங்கி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எப்படியாவது படிக்க வேண்டும் என்கிற முனைப்பிலும் தவிப்பிலும் அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பதிவிட்டிருந்தார். அதில் ஒரு மாணவரின் விடாமுயற்சி, விளிம்புநிலையில் இருந்து மேலெழ எத்தனிப்பவரின் அன்றாட வாழ்க்கைப் போராட்டம், பொருளாதாரப் பிரச்சினை போன்றவை அடியோட்டமாக அடங்கியுள்ளன.
ஒருவர் கனவு மட்டுமல்ல
அதிலும் இந்த மூன்று வரிகள் அவர் கடந்துவந்த பாதை எத்தகையது என்பதை உணர்த்துகிறது:
“நான் இப்போதுதான் உணர்ந்தேன் அரசு கலைக் கல்லூரியிலிருந்து மத்தியப் பல்கலைக் கழகத்துக்குப் படிக்க வந்திருக்கும் ஒரே ஒருவன் நான் என்பதை.
அதிலும் சேலம் மாவட்டத்திலிருந்து ஜே.என்.யூ.வில் தேர்வானவன் நான் ஒருவனே என்பதை.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தி லிருந்து நவீன இந்திய வரலாறு படிக்க வந்திருப்பவன் நான் ஒருவனே என்பதை…..”
இறுதியாக அவர் இப்படி எழுதி முடித்திருக்கிறார், “இந்த வரலாற்றுத் தருணத்துக்கு நான் பலருக்கு நன்றி சொல்ல வேண்டும்... அதற்காகவே நான் ‘ஏ ஜங்க்டு டூ ஜே.என்.யூ’ (ஜே.என்.யூ.வுக்குச் செல்லும் கொண்டாட்டப் பயணம்) என்கிற புத்தகத்தை எழுதவிருக்கிறேன்”.
இது முத்துக்கிருஷணன் என்கிற ஒரு மாணவரின் கனவுப் பயணம் மட்டுமல்ல. இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு மையங்களிலும் எம்.ஃபில்., பிஎச்.டி. உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளைத் தேர்வு செய்யும் பெரும்பாலான மாணவர்களின் நிலை இதுவே. 2014-ல் ‘இந்தியா உயர்கல்வியில் தலைமுறைகளுக்கு இடையேயும் பிராந்தியங் களுக்கு இடையிலுமான வேறுபாடுகள்’ என்கிற தலைப்பில் உயர்கல்வி குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒட்டுமொத்த இந்திய மாணவர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே பள்ளி படிப்பைத் தாண்டி மேற்படிப்பை மேற்கொள்வது தெரியவந்தது. கல்லூரிக்குச் செல்லும் வயதும் தகுதியும் இருந்தும் மிகக் குறைவானவர்களே கல்லூரிக்குள் கால் பதிக்க முடிகிறது. அவர்களில் முதுநிலைக் கல்வியை எட்டுபவர்கள் இன்னும் சொற்பம்.
சிக்கல்கள் என்ன?
இந்நிலையில் எம்.ஃபில்., பி.எச்டி. ஆகிய ஆய்வு நிலையை எட்டுபவர்கள் சில ஆயிரம் மட்டுமே. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் (59) பல்கலைக்கழகங்களைக் கொண்ட தமிழகத்தில் முனைவர் பட்டத்துக்கு 2013-ல் பதிவு செய்தவர்கள் மொத்தம் 7,995 பேர். முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் நேரடியாக முனைவர் படிப்பில் சேர்ந்தால், மூன்று ஆண்டுகளில் முடித்துவிடலாம் என்கிற நிலையில், இவர்களில் பெரும்பாலோர் இந்நேரம் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர்களில் 50 சதவீதத்தினர்கூட முடித்திருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம். இதை ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. அப்படி இந்திய ஆய்வு மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்தான் என்ன?
“கிராமப்புறங்களிலிருந்து பெருங்கனவுகளோடு ஆய்வு மேற்கொள்ள வரும் முதல் தலைமுறை பட்டதாரிகள் இங்குத் திணறு கிறார்கள். காரணம் அவர்களால் மற்றவர்களோடு போட்டிப்போட்டு படிக்க முடியவில்லை என்பதல்ல. அவர்களுக்கு நம்முடைய கல்வி நிறுவனங்கள் சரியான வழிகாட்டுதலை வழங்கு வதில்லை என்பதுதான். அத்துடன் அலட்சியமும் மெத்தனப்போக்கும் ஊழலும் நம்முடைய சாதாரணக் கல்வி நிறுவனங்களில் மட்டுமல்ல, தரவரிசைப் பட்டியலில் இடம்பிடிக்கும் பல்கலைக்கழகங்களிலும் மண்டிக் கிடக்கின்றன. ஆசிரியர் முதல் துணை வேந்தர் பணி நியமனம்வரை இங்கு லாபி நடைபெறுகிறது. அவற்றைக் கண்டு மனம் நொந்து தட்டிக்கேட்பவர்கள் விளிம்புக்குத் தள்ளப்படுகிறார்கள்,” என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன்.
தேவை சட்ட நடைமுறை
நடைமுறையில் இது எப்படிச் செயல்படுகிறது என்பது பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது. “பொருளாதார, சமூக, அரசியல் ஒடுக்கு முறைகளைப் போராடிக் கடந்து வந்து கல்வி நிறுவனங்களில், பணியிடங்களில் சாதி அடிப்படையில் வலிகளை, அவமதிப்புகளை அடையும் இளம் தலைமுறையினர், அதைத் தங்கள் குடும்பத்தினருடனோ தம் ஊர்மக்களிடமோ பகிர்ந்துகொள்ள முடியாத மன உளைச்சலில் முடங்கிப்போகி றார்கள். போராடுவதா? தம் கல்வியை, ஆராய்ச்சியைத் தொடர்வதா? என்ற இரட்டை மனநிலையில் அவர்கள் அடையும் மனத்துயரம் மிகக் கொடியது. இதைத்தான் சாதிய மனம் கொண்ட ஆசிரியர்களும் சாதிய மனம் கொண்ட பிற மாணவர்களும் விரும்புகின்றனர்.
ஜே.என்.யூ. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பிற மாணவர்கள், நிர்வாகம், சாதிய வன்மம் கொண்ட ஆசிரியர்கள் என மூன்று வகையான அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிறார்கள் இந்த மாணவர்கள். ஊர்-சேரி என்ற அமைப்பில் உள்ள ஒடுக்குமுறையில் இருந்து வெளியேறி, நவீன அமைப்பான கல்வி நிறுவனங்களுக்கு வரும் இளைஞர்கள் அங்கும் சாதி ஒடுக்குமுறையை கடுமையாக அனுபவிக்கிறார்கள். இந்நிலையில் சமூக அமைப்பின் மீதும் அரசியல் மீதும் நம்பிக்கை இழக்க நேர்கிறது. இவற்றைக் கடந்துதான் இந்த மாணவர்கள் படித்தாக வேண்டி இருக்கிறது” என்பது எழுத்தாளரும் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள், இலக்கிய ஆய்வுத் துறை பேராசிரியருமான பிரேமின் குரலாக ஒலிக்கிறது.
சாதிய மனம் கொண்ட ஆசிரியர்கள், மாணவர்களைத் தண்டிக்கத் தனிச் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமைகளை, அவமதிப்புகளைக் கண்காணிக்க உள்ளது போன்று சாதிய- தீண்டாமை நடத்தைகளை, ஒடுக்குமுறையைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கச் சட்ட அதிகாரம் கொண்ட குழுக்கள் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்படவேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
மாணவர்களைப் பாதுகாக்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதும், கல்வி நிலையங்களில் ஒவ்tவொரு துறையிலும் உளவியல் ஆலோசனை மையங்களை நிறுவி மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்பதும் அடிப்படைத் தேவை. இவற்றைத் தாண்டி மலிந்துகிடக்கும் சிக்கல்களை ஒவ்வொன்றாகக் களைய வேண்டும். இதெல்லாம் நடக்கும்போது, முத்துக்கிருஷ்ணன் விரும்பியதைப் போல ‘ஏ ஜங்கட் டூ ஜே.என்.யூ.’ நிஜமாகவே எழுதப்பட்டிருக்கும்.
எனக்கு நடந்தது என்ன? -ஆய்வு மாணவர்களின் குரல்
"பல மாநிலப் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்கு 2008-லேயே நான் விண்ணப்பித்திருந்தேன். ஆனால், சாதி காரணமாக எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துப் போராடியும் பயனில்லை. பின்பு மத்தியப் பல்கலைக்கழகங்களின் தேர்வெழுதி அகில இந்திய அளவில் 11-வது இடம்பிடித்துத் தற்போது ஜே.என்.யூ.வின் நவீன வரலாற்றுத் துறையில் ஆய்வு மாணவராகப் படித்துவருகிறேன். நானும் முத்துக்கிருஷ்ணனும் ஒரே துறையில் ஆய்வு மேற்கொண்டதால் வளாகத்தில் சந்திருக்கிறோம். என் அனுபவத்தில் மற்ற பல்கலைக் கழகங்களுடன் ஒப்பிடுகையில் ஜே.என்.யூ.வில் சாதியப் பாகுபாடுகள் குறைவு.”
- குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், ஜே.என்.யூ. நவீன வரலாறு துறை.
“நானோ அறிவியலில் முழுநேர ஆய்வு மாணவியாகச் சேர்ந்த நான், மகப்பேறு காரணமாகப் பின்னர் பகுதி நேரப் படிப்பாக மாற்றிக்கொண்டேன். நான் ஆய்வுக்குப் பதிந்த அதே வருடத்தில் பயோ டெக் துறையில் மூன்று பெண்கள் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்தார்கள். நான் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப் போனபோது அவர்களெல்லாம் இடைநின்றுபோனது தெரியவந்தது. சொல்லப்போனால் என்னுடைய ஆய்வை சமர்ப்பிக்க முடியாதபடி, ஆய்வுத் துறையைச் சேர்ந்த பல அதிகாரிகள் அலைக்கழிக்கிறார்கள். பெண்கள் முனைவர் பட்டம் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.”
பெயர் சொல்ல விரும்பாத நானோஅறிவியல் துறை ஆய்வு மாணவி, சென்னை.
“சில மாதங்களுக்கு முன்புதான் முனைவர் பட்டம் பெற்றேன். ஆனால் நான் ஆய்வு மேற்கொண்ட காலத்தில் உதவித்தொகையை யூ.ஜி.சி. வழங்கினாலும், பல்கலைக்கழகம் அதைத் தடுத்து வைத்திருந்தது. இதை எதிர்த்துக் கடந்த ஆண்டு தொடர்ந்து ஆறு நாட்களுக்கு இரவும் பகலுமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்திலேயே 120 ஆய்வு மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினோம். ஒரு கட்டத்தில் அது சாதிரீதியான போராட்டம் என திசைதிருப்ப முயற்சிக்கப்பட்டது. இன்னும் அங்கு வெளிப்படையாகவே சாதியச் சிக்கல்கள் உள்ள. பெரும்பாலான ஆய்வு வழிகாட்டிகள் தங்களுடைய சாதியைச் சேர்ந்த மாணவர்களை மட்டுமே ஆய்வு மாணவர்களாகச் சேர்த்துக்கொள்கிறார்கள்.”
- பெயர் சொல்ல விரும்பாத முன்னாள் ஆய்வு மாணவி, மதுரை.
“‘நீங்கெல்லாம் பெரிய படிப்புக்குச் சரிப்பட்டு வரமாட்டீங்க’ என்கிற சாதிரீதியான சீண்டல் ரொம்பவும் சகஜம். அதிலும் முன்பைக் காட்டிலும் இந்துத்துவச் சக்திகளின் தலையீடு கல்வி நிறுவனங்களில் தற்போது அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் நீதி கேட்கும் மாணவர்களின் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. முத்துக்கிருஷ்ணனுடன் எனக்கு நல்ல பழக்கம். அவர் நீதி கேட்டதாலேயே பல முனைகளில் ஒடுக்கப்பட்டிருக்கலாம்”.
- மாரியப்பன், மாநிலத் தலைவர், இந்திய மாணவர் சங்கம், சென்னை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago