பள்ளி வளாகத்தில் வெளிநபர்கள் நடமாட அனுமதிக்கக் கூடாது - கல்வித்துறை உத்தரவு

பள்ளி வளாகங்களில் வெளிநபர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஒருசில இடங்களில் பள்ளி வளாகத்தில் வெளிநபர்களின் நடமாட்டம் இருப்பதாகவும், பள்ளியில் இருந்து பொருட்கள் காணாமல் போவதாகவும் அத்துமீறி நுழையும் நபர்களால் பொருட்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் தகவல் வந்துள்ளது. இத்தகைய போக்கை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விழிப்புடன் இருந்து தவிர்க்க வேண்டியது அவசியம்.

அரையாண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில், மாணவர்களின் கல்வி, தேர்வுப் பணிகள் பாதிக்கப்படாத வகையிலும், கற்றல்-கற்பித்தல் பணிக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் பள்ளி வளாகத்தில் வெளிநபர்கள் வந்து செல்வது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

பள்ளி வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் எப்போதும் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்கப்படுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் குறைபாடுகள் ஏதும் பள்ளிகளில் கண்டறியப்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரே ஏற்க நேரிடும். இவ்வாறு அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE