அதீத ஆற்றல் கொண்ட மாணவர்கள் மிகச் சில பேர்தான் இருப்பார்கள். ஆசிரியர்களின் மொழியில் சொன்னால் ‘அவர்களைக் கட்டி மேய்ப்பது கஷ்டம்.’ அவர்கள் படிப்பைப் பற்றிப் பெரிதாக அக்கறைப்படுவதில்லை. ஒரு வகுப்புகூடத் தவறாமல் வந்து உட்கார்ந்திருக்கும் மாணவர்கள் நிறையத் தாள்களில் நிலுவை வைத்திருப்பது வெகு சாதாரணம். ஆனால் ஆற்றலாளர்களான மாணவர்கள் வகுப்புக்கு வருவது அரிதாகவே இருக்கும். ஆனால் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றாவது எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள்.
வெளியே போ!
சாதாரண மாணவர்களை வெளியே போ என்றால், அதை அவமானமாக நினைத்துப் பெரிதும் தயங்குவார்கள். இந்த ஆற்றலாளர்களுக்கு அதுவெல்லாம் பெரிய பிரச்சினை இல்லை. “வெளியே போ” என்றால், உடனே போய்விடுவார்கள். இதில் மட்டும் ஆசிரியர் சொல்லைத் தட்டுவதில்லை. சொன்னதும் தைரியமாக எழுந்து உடனே ஒரு மாணவன் வெளியே போனால், ஆசிரியர் அதைத் தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதுவார். ஆசிரியர் உடனே அவன் முதுகுக்குப் பின்னால் கத்துவார். “இன்னமே என்னோட வகுப்புக்கு நீ வராத.” சிலரை அப்படி வரவே கூடாது என்று நிரந்தரமாகக் கட்டுப்படுத்தி வைத்துவிடுவதும் உண்டு.
அம்மாணவர்களே வகுப்பை உயிர்ப்போடு வைத்திருப்பவர்கள். அவர்கள் செய்யும் சேட்டைகளை, குறும்புகளை, சொல்லும் சொற்களை சக மாணவர்களைப் போலவே ஆசிரியரும் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் அப்புறம் பிரச்சினையே இல்லை. வகுப்பு அப்படியொரு சந்தோஷமாகப் போகும். பேசா மடந்தைகளாக இருக்கும் மாணவர்கள் வகுப்புக்குச் சோர்வைத் தருபவர்கள். பேசுபவர்கள் சிலராவது இருந்தால்தான் வகுப்புக்குச் சுவை கூடும்.
அடங்காத தோல்வியாளர்
ஆற்றலாளர்கள் எனக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமானவர்கள். அவர்களுக்கு நிறைய இடம் கொடுப்பேன். என் எல்லைக்குள் அவர்களை எவ்வளவு அனுமதிக்க முடியுமோ அவ்வளவு வரைக்கும் இயல்பாக விடுவதுண்டு. விட்ட பிறகு வழிப்படுத்தலாம். “படி” என்று சொன்னால் படிப்பார்கள். ‘இதை உடனே செய்’ என்றால் ஏனென்று கேட்காமல் செய்வார்கள். நம்பிக்கையும் அன்பும் நிறைந்த மனம் கொண்டவர்கள் அவர்கள். ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுத்தால் மிகச் சிறப்பாக நிறைவேற்றுவார்கள். தலைமைப் பண்பை எளிதாக அடைவார்கள்.
நான் துறைத் தலைவராக இருந்தபோது பயின்ற மாணவர் ராஜ்குமார். சேட்டை என்றால் இவ்வளவுதான் என்று சொல்ல முடியாது. தினம் ஒரு பிரச்சினையைக் கொண்டுவருவார். பின்னணியில் இருந்துகொண்டு சிலரை இயக்கவும் செய்வார். அவர் வகுப்பு மாணவர் ஒருவரைப் பேரவைத் தேர்தலில் நிற்க வைத்துப் பெருமளவு பிரச்சாரம் செய்தார். ஆனால் தோல்விதான் கிடைத்தது. வெற்றியாளர்கள் அமைதியாகிவிடுவார்கள். தோல்வியாளர்கள் அடங்க மாட்டார்கள். வெகுண்டெழுந்து விதவிதமான பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கல்லூரி முதல்வர் என்னை அழைக்கிறார் என்று தகவல் வந்தாலே “ராஜ்குமார் ஏதோ செய்துவிட்டார்” என்று அர்த்தம்.
வரம்புக்குள் வந்த குறும்பு
ஒருமுறை பெரிய பிரச்சினை ஒன்றில் அவரும் அவர் நண்பர்கள் சிலரும் சிக்கிக்கொண்டனர். கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுப்பது உறுதி என்று தெரிந்தது. இடைநீக்கம் செய்து மாதக் கணக்கில் கல்லூரிக்கு வர விடாமல் செய்வது நோக்கமாக இருந்தது. என்ன செய்வது என்று என்னிடம் வந்து நின்றார்கள். யோசனை சொன்னேன். முதல்வர் அதே பகுதியைச் சேர்ந்தவர். அவரது வீட்டுக்குப் போய்ப் பணிவாக நில்லுங்கள். அவர் பேசுவார், நீங்கள் கேட்டுக்கொண்டு நின்றால் போதும், பிரச்சினை தீர்ந்துவிடும் என்றேன். பாம்பின் கால் பாம்பறியும்.
அந்தப் பிரச்சினையில் என் யோசனை பலித்ததால், ராஜ்குமார் கொஞ்சம் என் கட்டுக்குள் வந்தார். அவரது ஆற்றலை ஏதாவது வழிக்குள் செலுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு ‘இலக்கிய மன்ற’ நிகழ்வில் தொடர்ந்து பங்கேற்கச் செய்தேன். நன்றாகப் பாடும் திறனும் கொண்டவர். அவர் குறும்புப் பேச்சும் சேட்டைகளும் வரம்புக்குள் வந்ததால் எல்லோரும் ரசித்தனர். அவருக்கு நல்ல கவனமும் கிடைத்தது. திருப்தியாக இருந்தார்.
இப்படி ஏமாந்துபோனோமே!
இரண்டாமாண்டு படிக்கும்போதே ஊரில் ஒரு பெண்ணைக் காதலித்துக் கல்யாணமும் செய்துகொண்டிருந்தார். ஆனால் அந்தத் தகவலைக் கல்லூரியில் பரவாமல் காத்துக்கொண்டார். தெரிந்த சிலர் என்னிடம் சொன்னார்கள். நான் அவரைக் கேட்டேன். திருமணம் ஆகிவிட்டது என்று உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை. மூன்றாமாண்டு முடித்தபோது ராஜ்குமார் எல்லாத் தாள்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவரது வகுப்பு நண்பர்கள் முதுகலைப் படிப்புக்காக திருச்சி, சேலம், கோவை என்று போய்ச் சேர முயன்றுகொண்டிருந்தனர். ராஜ்குமாரிடம் மேலே படிக்க யோசனை சொன்னேன். துறை ஆசிரியர்கள் எல்லாரும் அவருக்கு ஆலோசனை சொன்னார்கள்.
ஒருமுறை கல்லூரிக்கு அவர் வந்தபோது ஆசிரியர்களின் ஆலோசனைக்கும் அறிவுரைக்கும் இடம் கொடுக்காமல் ‘சென்னை, தியாகராயா காலேஜ்ல எம்.ஏ. சேந்துட்டன்’ என்று சொன்னார். நானும் மிகவும் சந்தோஷப்பட்டு அந்தக் கல்லூரியில் பணியாற்றும் என் நண்பர் ஒருவரைச் சொல்லிப் போய்ப் பார்க்கும்படியும் நன்றாகப் படிக்கும்படியும் அறிவுரை சொன்னேன்.
எல்லாம் நல்ல பிள்ளையாகக் கேட்டுக் கொண்டார். பின்னர் விசாரித்தபோது தெரிந்தது, சென்னை தியாகராயா கல்லூரியில் தமிழ் முதுகலைப் படிப்பே இல்லை என்னும் விவரம். இப்படி ஏமாந்து போனோமே என்று ஆசிரியர்கள் பேசிச் சிரித்தோம். அப்போதுதான் அவர் திருமணம் செய்துகொண்ட செய்தியும் உறுதியாயிற்று. திருமணம் செய்த பிறகு வெளியூர் போய்ப் படிக்க வாய்ப்பேது?
ஏறினேன் மகிழ்ச்சியோடு
எனினும் நல்ல ஆற்றலாளரான ராஜ்குமாரின் வால் சுருண்டுவிடவில்லை. அஞ்சல் வழியில் படித்து எம்.ஏ., பி.எட். பட்டம் பெற்றார். தொழில்துறையில் இறங்கி நல்ல சம்பாத்தியத்தோடு வளமாக வாழ்கிறார். அவர் மகன் இப்போது என் மாணவர். சமீபத்தில் தான் வாங்கிய காரைக் கொண்டுவந்து எனக்குக் காட்டிய ராஜ்குமார் ‘ஏறுங்கய்யா, ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்’ என்றார். நானும் ஏறினேன் பெருமகிழ்ச்சியோடு.
பெருமாள்முருகன், எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர். தொடர்புக்கு: murugutcd@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago