ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழக்கமாகச் சொல்லப்படும் அறிவுரைகளில் ஒன்று, தினமும் தவறாமல் காலையில் செய்தித் தாளைப் படிக்க வேண்டும் என்பது. இன்றைக்கு எல்லாச் செய்திகளும் இணையம், தொலைக்காட்சி என்று உடனுக்குடன் கிடைக்கிறது. மேலும் போட்டித் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களுக்காக முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்கும் வழிகாட்டி நூல்களும் வெளியாகின்றன.
இப்போதும்கூட செய்தித்தாள் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்ன? நிச்சயமாக. ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட உயர்பதவி களுக்கான தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் செய்தித்தாள் வாசிக்கும் வழக்கத்தைத் தயாரிப்பின் ஒரு பகுதியாகவே கொள்ளவேண்டும்.
ஒற்றை வரி போதாது
சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுகளில் நடப்புச் சம்பவங்கள் தொடர்பான வினாக்களைப் பொறுத் தவரையில் பழைய பாணியிலான யார், எங்கு, எப்போது போன்ற ஒற்றை வார்த்தை வினாக்களின் காலம் மலையேறிவிட்டது. நடப்புச் சம்பவத்தைக் குறித்து நான்கு வாக்கியங்கள் கொடுக்கப்பட்டு, அவற்றில் எவையெல்லாம் சரி என்பது போன்ற தன்மையிலேயே வினாக்கள் கேட்கப்படுகின்றன.
நான்கு வாக்கியங்களில் எது தவறு என்று கண்டுபிடிக்காத முடியாத வகையில் வினாக்கள் சிக்கலானதாக அமைந்திருக்கின்றன. ஏதோ ஒரு வார்த்தையில் சூட்சும முடிச்சு இருக்கும். எனவே எந்தவொரு செய்தியையும் ஒற்றை வரி தலைப்பு செய்தியாக அல்லாமல் விரிவாக அலசல் தன்மையில் படித்தால் மட்டுமே விடையளிக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
வரலாறு என்றால் வரலாறு அல்ல
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வரலாறு, புவியியல், அரசியலமைப்பு தொடர்பான பாடத்திட்டத்தின் பரப்பெல்லை மிகவும் விரிவானது. எனவே எல்லாவற்றையும் படித்து முடிப்பது நடைமுறையில் சாத்தியமல்ல. வரலாற்றைப் பொறுத்தவரையில் அந்தந்த ஆண்டுகளில் நினைவுகூரப்படும் வரலாற்று நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதைப்போல அரசியல் தளத்தில் தீவிர விவாதத்திற்கு உள்ளாகும் விஷயங்களோடு தொடர்புடைய அரசியலமைப்பின் கூறுகளை விரிவாகப் படிக்க வேண்டும்.
புவியியல், அறிவியலும்கூட அப்படித்தான். போர், எல்லைக்கோடு பிரச்சினைகள், சர்வதேசப் பேச்சுவார்த்தைகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிய செய்திகளோடு தொடர்புடைய புவியியல் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளோடு தொடர்புடைய அறிவியல் பாடங்களுக்கும் அப்படியே. எனவே செய்தித்தாளைத் தொடர்ந்து வாசிக்காமல் அனைத்துப் பாடங்களிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டிய பாடங்களை அறிந்துகொள்ள முடியாது.
பொருள் உணர்ந்துகொள்ளும் திறன்
எளிமையான ஆங்கிலத்தில் வெளியாகும் பத்திரிகைகளைப் படிப்பதைக் காட்டிலும் துறை சார்ந்து பொருத்தமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து எழுதப்படும் கட்டுரை களை வெளியிடும் பத்திரிகைகளைத் தேர்ந்தெடுப்பதே சரியானது. உதாரணத்துக்கு, ஆள்கடத்தல் என்கிற பிரயோகம் எங்கு வந்தாலும், ‘kidnap’ என்கிற சொல் பரவலாகப் பல செய்தித்தாள்களில் இடம்பெறுகிறது. ஆனால், இந்திய தண்டனைச் சட்டப்படி குழந்தைகள் கடத்தப்பட்டால் மட்டுமே ‘kidnap’ குறிக்கும். வயது முதிர்ந்தவர்கள் கடத்தப்படுவதைக் குறிக்க ‘abduction’ என்பதே சரி.
சிவில் சர்வீஸ் முதனிலைத் தேர்வின் இரண்டாம் தாளில் ஆங்கிலப் பத்திகளின் பொருள் உணர்ந்து விடையளிக்கும் வகையிலான வினாக்கள் மட்டுமே ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு. தொடர்ச்சியான ஆங்கிலப் பத்திரிகை வாசிப்பு இருந்தால் மட்டுமே இந்த வினாக்களுக்குக் குறுகிய காலத்தில் விடையளிக்க முடியும். தேர்வுக்குத் தனியாகப் படிக்காமல் செய்தித்தாளை மட்டுமே வாசித்துவிட்டுப் போய் இருபது கேள்விகளுக்கு விடையளிக்க முடியுமென்றால் அந்த வாய்ப்பைத் தவிர்க்கவே கூடாது அல்லவா?
கட்டுரை என்றொரு சவால்
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றியைத் தீர்மானிக்கக்கூடியது கட்டுரைத் தாள் எனலாம். கேட்கப்பட்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைப்பற்றித் தெளிவான பார்வையும் தேவையான தகவல்களும் இருந்தால் அதிகபட்ச மதிப்பெண்களைப் பெறமுடியும். செய்தித்தாள்களில் இடம்பெறும் விமர்சனக் கட்டுரைகள் இதற்கு மிகவும் உதவியாக இருக்கும். செய்தித்தாள்களில் பலவிதம். எல்லாக் கட்டுரைகளையுமே சுவாரசியமானதாகவும் எளிமை யானதாகவும் மாற்றி எழுதும் பத்திரிகைகளும் உண்டு. ஆனால் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேவை, தெளிவான பார்வையுடன் கூடிய கட்டுரை எழுதும் திறன்.
எனவே அரசியல் விமர்சகர்களும், முன்னாள் அதிகாரி களும், மூத்த பத்திரிகையாளர்களும் எழுதிய கட்டுரைகளைப் படிப்பதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். முன்னாள் அதிகாரிகள் எதையும் நேரடியாகச் சொல்லாமல் சுற்றிச் சுற்றி எதையோ சொல்வது மாதிரி வந்து, அதையும் சொல்லாமல் போய்விடுகிறார்களே என்றும்கூட நினைக்கத் தோன்றும். உண்மையை ஒற்றை வரியாக மாற்றுவது எளிதல்ல. உண்மைக்குப் பல முகங்கள் உண்டு. நீங்கள் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு, எழுதக்கூடிய கட்டுரையும்கூட அப்படித்தான் இருக்கும்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago