வாள் எடுத்து கத்தி சுழற்றி பாடம் சொல்லும் ஆசிரியர்

By கி.பார்த்திபன்

தேக ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் உழைக்க யோசிக்கிறார்கள். குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் உழைப்பால் மலைக்க வைக்கிறார்கள். இதில் ஆசிரியர் சக்திவேல் இரண் டாவது ரகம். தனக்கு இரண்டு கண்ணும் தெரியாதபோதும் தன்னிடம் படிக்கும் மாணவர்களை நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெற வைக்கிறார் சக்திவேல். காரணம் தன்னலம் கருதாத தன்னம்பிக்கை தரும் அவரது உழைப்பு!

நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரியர் சக்திவேல். இவருக்கு சொந்த ஊரும் இதுதான். பிறக்கும்போது சக்திவேலுக்கு எந்தக் குறைபாடும் இல்லை. எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் லேசாக பார்வை மங்க ஆரம்பித்தது. முடிந்தவரை மகனுக்கு சிகிச்சை எடுத்திருக்கிறார் சக்திவேலின் அப்பா. ஆனால், அத்தனையும் பொய்த்துப் போய், 9-ம் வகுப்பில் அடியெடுத்து வைத்தபோதே சக்தி வேலுக்கு இரண்டு கண்ணிலும் பார்வை முற்றிலுமாய் பறிபோய்விட்டது.

சராசரி பிள்ளையாக இருந்தால் முடங்கிப் போயிருப்பார்கள். ஆனால், சாதிக்க வேண்டும் என்ற துணிவும் தெளிவும் இருந்ததால், தன்னை பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்த்துவிடும்படி மன்றாடினார் சக்திவேல். அவரது விருப்பப்படியே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கே தனது விடாமுயற்சியால் ஓராண்டில் பிரெய்லி முறையை கற்றது மட்டுமின்றி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 440 மதிப்பெண் பெற்று சாதனையும் படைத்தார். அங்கேயே பிளஸ் 2வும் முடித்து, மாநிலக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு எடுத்துப் படித்தார். அதன்பிறகு ஏறிவந்த படிகளையும் தாண்டிவந்த தடைகளையும் பற்றி அவரே சொல்கிறார்..

“சின்ன வயசுல புள்ளைக்கி கண்பார்வை போயிருச்சேன்னு என்னப் பெத்தவங்க ரொம்பவே மனசொடிஞ்சு போயிட்டாங்க. ஆனா, நான் தளர்ந்து போயிடல. கல்லுக்குள்ள இருக்கிற தேரைக்கும் படியளக்குற இறைவன் நமக்கு ஒரு வழி காட்டாமலா போயிருவான்னு நம்புனேன். அப்பா கண்டக்டர். அவரோட சம்பளத்துல குடும்பச் செலவுகளை கவனிக்கிறதே பெரும்பாடு. வெளியூருல தங்கிப்படிச்ச என்னோட செலவுகளை கவனிச்சிக்கிறதுக்கு அப்பா ரொம்பவே சிரமப்பட்டாரு. பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே எதிர்காலத்துல ஆசிரியரா வரணும்னு எனக்குள்ள ஒரு உறுதி இருந்துச்சு. கல்லூரிக்குப் போனதும் அந்த தாகம் இன்னும் அதிகமாகிருச்சு. அந்த வருடம் மாநிலக் கல்லூரியில் நான்தான் முதல் மாணவன். ரொம்பவே சந்தோஷப்பட்டேன்.

அதேவேகத்தோடு பி.எட் படித்து, எம்.ஃபில் வரை முடிச்சேன். 2001-ல் ஆசிரியர் போட்டித் தேர்விலும் தேர்ச்சி பெற்று, திருச்செங்கோடு பக்கத்துல ஒரு பள்ளியில வேலைக்கு சேர்ந்தேன். 2005-ல் சொந்த ஊருக்கே டிரான்ஸ்ஃபர் குடுத்துட்டாங்க. நம்ம படிச்ச பள்ளிக்கூடத்துக்கே வாத்தியாரா வர்ற பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்? அந்த பாக்கியம் எனக்கு கிடைச்சுது. 2007-லிருந்து என்கிட்ட படிக்கிற அத்தனை மாணவர்களும் வரலாற்றுப் பாடத்தில் நூத்துக்கு நூறு பாஸாகிட்டு வர்றாங்க. பொதுவா பொதுத் தேர்வுல, வரலாற்றுப் பாடத்துல நூத்துக்கு நூறு மதிப்பெண் போடமாட்டாங்க. ஆனா, என்கிட்ட படிச்ச ஒரு மாணவன் அந்த சாதனையையும் செஞ்சிருக்கான்.

வரலாறு படிக்கிறதுன்னா நம்ம பசங்களுக்கு கசக்கும். ஆனா, அதை மாத்தணும்கிறதுக்காகவே வரலாற்றுப் பாடத்தை கதை மாதிரி சொல்லிப் புரியவைச்சேன். அதுக்கு நல்ல பயன் இருக்கு. கதையில மன்னர் வாள் எடுத்துச் சுழற்றினார் என்றால் நானும் ஒரு பொம்மை கத்தியை வைத்துச் சுழற்றிக் காட்டுவேன். இது பசங்களுக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு. பாடத்தை ஆர்வமா படிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இதில்லாம, ஆடியோ கேசட் மூலம் பாடங்களை பதிவு செஞ்சு குடுத்தும் மாணவர்களுக்கு சொல்லித் தர்றேன். இதுக்காக அதிகாரிகள் என்னை பாராட்டி இருக்காங்க. படித்த பள்ளிக்கே நான் ஆசிரியராக வந்ததுபோல், என்னிடம் படித்த மாணவர்கள் சிலர் அண்மையில் என்னை வந்து சந்திச்சப்ப ரொம்ப பெருமையா இருந்துச்சு.

மாணவர்களின் எதிர்காலத்துக்கு நான் வழிகாட்டுறேன். என் நிகழ்காலத்துக்கு என் மாணவர்களும் மனைவி யோகேஸ்வரியும் வழிகாட்டுறாங்க. இவர்களின் துணை இருக்கிறவரை பார்வை எனக்கு ஒரு பொருட்டல்ல.. படிப்பில் சிறந்த மாணவர்களை உருவாக்கிக் கொண்டே இருப்பேன்’’ திடமாகச் சொல்லி விடை கொடுத்தார் சக்திவேல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்