“வணக்கம் குழலி, தமிழ் நாகரிகத்தைப் பத்தி விரிவா ஆராய்ச்சி செய்றதுதான் உன்னோட நோக்கம்கிறது எனக்குத் தெரியும். சரி, அதற்கு இருக்கும் வரலாற்று ஆதாரங்கள் பத்தி நீ என்ன நினைக்கிறே?
“சிந்துவெளி நாகரிகம் பத்தி போன வாரம் பேசிக்கிட்டிருந்தோம் இல்லையா. சிந்துவெளி நாகரிகம் பத்தி பள்ளிக்கூட வரலாற்றுப் புத்தகத்துல படிச்சிருப்ப. ஆனா, அதுல அழுத்தம் தரப்படாத முக்கியமான விஷயம், சிந்துவெளிக்கும் திராவிடப் பகுதிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு. அதேநேரம், புதிதாக வெளியாகியுள்ள 6-ம் வகுப்பு வரலாற்றுப் புத்தகம் அதை மாத்திருக்கு. அதுல இது பத்தி குறிப்பு இருக்கு”
“அந்த விஷயம் பாடப்புத்தகத்துல இடம்பெறுவது நல்லதுதான். சரி, இரண்டு நாகரிகங்களுக்கும் அப்படி என்னதான் தொடர்பு?”
“அந்தத் தொடர்புகள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பா, சிந்துவெளி மொழிக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த ஆராய்ச்சிகள் அவற்றில் முக்கியமானவை”
“ஆனா, சிந்துவெளி மக்கள் பேசிய மொழி எது, அவர்களுடைய சித்திர எழுத்துகளுக்கான அர்த்தம் என்ன என்றெல்லாம் கண்டறிவது ரொம்பக் கஷ்டமா இருக்கிறதா ‘நேஷனல் ஜியாகிரஃபிக்' இதழ்ல படிச்சேனே”
“பரவாயில்லையே! அறிவியலைத் தாண்டியும் படிக்கிறியா செழியன். நல்ல பழக்கம்தான். நீ சொல்றது உண்மைதான். ஆனா, ஆராய்ச்சிகள் ஒரு சில அம்சங்களோட தேங்கிடறது இல்லைங்கிறது, இளம் விஞ்ஞானியான உனக்கும் நல்லாத் தெரியுமே”
“சிந்துவெளிப் பண்பாட்டை ஆராயப் பழந்தமிழ் இலக்கியங்கள் பயன்படும் என்ற கருத்தை ஐராவதம் மகாதேவன், அஸ்கா பர்போலா, கமில் சுவலபில் உள்ளிட்ட அறிஞர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.
அதிலும் ‘தி இண்டஸ் ஸ்கிரிப்ட்: டெக்ஸ்ட்ஸ், கன்கார்டன்ஸ் அண்ட் டேபிள்ஸ்’ என்ற ஐராவதம் மகாதேவனின் நூல் சிந்துவெளி எழுத்துக்களைக் குறித்த ஆராய்ச்சிகளில் ஒரு மைல்கல். சிந்து வெளி எழுத்துக்களுக்கும் திராவிட மொழிக் குடும்பத்துக்கும் இடையிலான உறவைப் பத்தி அந்த நூலில் அவர் விரிவா எழுதியிருக்கார். சிந்துவெளிப் பண்பாடு திராவிடப் பண்பாடுதான் என்ற கருதுகோளை வலுப்படுத்தும் திசைநோக்கியே அவருடைய ஆய்வுகள் அமைஞ்சிருக்கு."
“ஓ! இதுல இவ்ளோ விஷயம் இருக்கா, எனக்கு ஆச்சரியமா இருக்கு”
“உன் ஆச்சரியத்துக்குக் கொஞ்சம் அணை போட்டு வை செழியன், இன்னும் நான் முழுசா சொல்லி முடிக்கலை”
“மொஹஞ்சதாரோ, ஹரப்பா எல்லாம் 5,000 ஆண்டுகளுக்கு முன் செழித்திருந்த சிந்துவெளி நாகரிகத்தின் முக்கிய நகரங்கள். இந்த நாகரிகத்தின் பெரும்பகுதி இன்றைய பாகிஸ்தானில் இருக்கிறது. பாகிஸ்தானில் இருக்கும் இந்தப் பகுதிக்கும் தமிழகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றுதான் பொதுவா எல்லோரும் நம்புவோம். ஆனா, அது முழுத் தப்பு.
கோட்டை, ஊர் போன்ற தமிழ்ப் பெயர்கள் வட இந்தியாவிலும் அதே அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவது ஏற்கெனவே பதிவாகியிருக்கு. ஐராவதம் மகாதேவனின் வழிவந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் இந்தப் பின்னணியில் முக்கியமான கண்டறிதலை முன்வைத்திருக்கிறார்.”
“அப்படியா, அவர் என்ன சொல்லியிருக்கார்?”
andha naal 2jpg“புகழ்பெற்ற சங்க காலத் தமிழ் நகரங்களான கொற்கை, வஞ்சி, தொண்டி பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருப்பே. அந்த ஊர்ப் பெயர்கள் சிந்துவெளி, ஆப்கானிஸ்தான், ஈரான் வரையிலான பகுதிகளில் இன்றுவரை நிலைத்துள்ளன. குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்தபோது, தங்கள் ஊர்களுக்கு முன்பு வழங்கப்பட்ட பெயர்களையே குடிபெயர்ந்த புதிய பகுதிகளிலும் பயன்படுத்தினார்கள் என்பதுதான் அவர் முன்வைத்திருக்கும் கருதுகோள்.”
“இதெல்லாம் நிஜம்தானா?”
“பாண்டிய வம்சப் பெயரை வைத்திருக்கும் நீ, இப்படியெல்லாம் சந்தேகப்படுறது தப்பு செழியன்.கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை (மதுரை), உறை (உறையூர்), கூடல்கர் (கூடல்நகர்) போன்ற பெயர்களைக் கொண்ட ஊர்கள் பாகிஸ்தானில் இன்றைக்கும் உள்ளன. கொற்கை, பூம்புகார் போன்ற சங்க கால நகரங்கள், துறைமுகங்களின் பெயர்களைக் கொண்ட ஊர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளன. ஆப்கானிஸ்தானில் உள்ள ஆறுகளுக்கு காவ்ரி (காவிரி), பொருண்ஸ் (பொருணை), பாகிஸ்தானில் உள்ள ஆறுகளான காவிரிவாலா (காவிரி), பொருணை ஆகிய பெயர்கள் தமிழ்ச் சொற்களை அப்படியே பிரதிபலிக்கின்றன.”
“இவ்வளவு நேரடியான ஒற்றுமைகளா, என்னால ஆச்சரியத்தைக் கட்டுப்படுத்தவே முடியலை”
“இது தொடர்பான அவருடைய ஆராய்ச்சியை ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்ற தமிழ் நூலில் விரிவா வாசிக்கலாம்.”
“குழலி, உன் ஆராய்ச்சிகளையும் வாசிப்பையும் நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு. அப்புறம் என்னோட விடுமுறை முடியுற நேரம் வந்தாச்சு, லண்டன் புறப்படுறதுக்கான நாள் நெருங்கிடுச்சு”
“அதனால என்ன செழியன், இன்னைக்கு இருக்குற தொழில்நுட்ப வசதிகளுக்கு எங்க இருந்தாலும் ஒவ்வொரு விநாடியும்கூட நாம பேசிக்கொள்ள முடியுமே!”
“நிச்சயமா. ஆனா நீ நல்லா எழுதுவேன்னு தெரியும். பள்ளிக்கூட காலத்திலேயே 'பொன்னியின் செல்வ’னைக் கையில் வைச்சுக்கிட்டு சுத்துன ஆளாச்சே. உன்னோட பேச்சு மாதிரியே எழுத்தையும் வாசிக்கக் காத்திருக்கேன். பார்ப்போம்”
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago