திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க. ஸ்டாலின் ஒருமனதாக ஆகஸ்ட் 28 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன், அதிகாரபூர்வமாக ஸ்டாலினைத் தலைவராக அறிவித்தார். திமுக தலைவர் பொறுப்புக்கு ஸ்டாலின் மட்டுமே மனுத் தாக்கல் செய்ததாகவும், அந்த மனுவை 1,307 பேர் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
திமுகவின் பொருளாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 50 ஆண்டுகளாகத் திமுக தலைவராக இருந்த மு. கருணாநிதி ஆகஸ்ட் 7 அன்று மறைந்த சூழலில், அக்கட்சியின் தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
5.82 கோடி தமிழக வாக்காளர்கள்
தமிழ்நாட்டில் 5.82 கோடி வாக்காளர்கள் இருப்பதாக ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட்ட 2019-ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2018-ம் ஆண்டில் 5.86 கோடியாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது நான்கு லட்சம் குறைந்து 5.82 கோடி ஆகியிருக்கிறது. இதில் பெண்கள் 2.94 கோடியாகவும் ஆண்கள் 2.88 கோடியாகவும் இருக்கிறார்கள்.
மூன்றாம் பாலின வாக்காளர்கள் 5,184 பேர் இருக்கிறார்கள். இந்த ஆண்டு, 1.82 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும் மரணம், இடமாற்றம் காரணமாக 5.78 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 6.07 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் சென்னையின் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் குறைந்தபட்சமாக 1.64 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பண மதிப்பிழப்பு: வங்கிக்குத் திரும்பிய 99.3% பணம்
பிரதமர் நரேந்திர மோடி 2016 நவம்பர் 8 அன்று கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் 500, 1000 ரூபாய்த் தாள்கள் மதிப்பிழந்துவிட்டதாக அறிவித்தார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிக்குத் திரும்பிய 500, 1000 ரூபாய்த் தாள்களை எண்ணும்பணியைச் சமீபத்தில் முடித்த ரிசர்வ் வங்கி, தன் வருடாந்திர அறிக்கையை ஆகஸ்ட் 29 அன்று வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுப்பதற்குமுன் நாட்டில் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய்த் தாள்களின் மொத்த மதிப்பு ரூ. 15,417.93 லட்சம் கோடி.
இதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், ரூ. 15,310.73 லட்சம் கோடி (99.3 சதவீதம்) வங்கிக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிக் கணக்குக்குத் திரும்பி வராத பணத்தின் மதிப்பு ரூ.10,720 கோடி (0.7 சதவீதம்). பணமதிப்பிழப்பின் நடவடிக்கையின் விளைவான இந்த ரூ.10,000 கோடிக்காக 2.25 லட்சம் கோடி மதிப்புமிக்க உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றனர்.
வீட்டுக் காவலில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்
மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, அருண் ஃபெரைரா, வெர்னோன் கொன்ஸால்வஸ், கவிஞரும், மாவோயிசச் சிந்தனையாளருமான வரவர ராவ் ஆகியோர் புனே காவல்துறையால் ஆகஸ்ட் 28 அன்று கைதுசெய்யப்பட்டனர். கடந்த டிசம்பர் 31 அன்று நடைபெற்ற பீமா-கோரேகாவ் வன்முறை வழக்குத் தொடர்பாக இவர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இவர்கள் ஐவரையும் செப்டம்பர் 6 வரை வீட்டுக்காவலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அத்துடன், வன்முறை நடைபெற்று ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இவர்கள் ஐவரும் கைதுசெய்யப்பட்டிருப்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருக்கிறது. இந்த வழக்குத் தொடர்பாக மகாராஷ்ட்ர மாநில அரசையும் மத்திய அரசையும் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோ
மூன்று மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ‘ககண்யான்’ திட்டம் இன்னும் நாற்பது மாதங்களில் நிறைவேற்றப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் ஆகஸ்ட் 28 அன்று தெரிவித்தார். நாட்டின் 75-வது சுதந்திர தினத்துக்கு முன்னர் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்தத் திட்டத்துக்காக இஸ்ரோ 2004-ம் ஆண்டிலிருந்து பணியாற்றிவருகிறது.
இந்தத் திட்டத்துக்குத் தேவைப்படும் சில தொழில்நுட்பங்களை வெற்றிகரமாகப் பரிசோதித்திருப்பதாகவும் இஸ்ரோ தெரிவிக்கிறது. ‘ககண்யான்’ திட்டத்தை இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.-III ஏவுகணையில் விண்ணில் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்கள் 5-7 நாட்கள் விண்ணில் தங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அருணாசல பிரதேசம்: 3 புதிய மாவட்டங்கள்
அருணாசலப் பிரதேசத்தில் பக்கே-கேசாங், லேபா ரடா, ஷி யோமி என்ற மூன்று புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு அம்மாநில சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 29 அன்று மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பின்மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
அம்மாநிலத்தின் துணை முதல்வர் சவுனா மேய்ன், நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காகப் புதிதாக மூன்று மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மூன்று மாவட்டங்களால் அருணாசலப் பிரதேச மாவட்டங்களின் எண்ணிக்கை 22-லிருந்து 25-ஆக உயர்ந்திருக்கிறது.
ஆண்களின் திருமண வயது 18?
நாட்டில் ஆண்களின் திருமண வயது 18-ஆகக் குறைக்கப்பட வேண்டும் என்று ஆகஸ்ட் 31 அன்று சட்ட ஆணையம் வெளியிட்ட தனி நபர் சட்டங்களுக்கான (Personal Laws) சீர்திருத்த ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மதங்களிலும் ஆண், பெண் இருவருக்குமான திருமணச் சட்ட வயது 18-ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.
பதினெட்டு வயதில் அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்படுவதுபோல வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று சட்ட ஆணையம் கருத்து தெரிவித்திருக்கிறது. தற்போது, ஆண்களின் திருமண வயது 21- ஆகவும் பெண்ணின் திருமண வயது 18-ஆகவும் நிர்ணயம்செய்யப்பட்டிருக்கிறது. இது தேவையற்ற பாலின வயது வித்தியாசத்தைத் திருமணத்தில் ஏற்படுத்துவதாகச் சட்ட ஆணையம் தெரிவித்திருக்கிறது.
பிற்படுத்தப்பட்டோர் தகவல்கள் சேகரிப்பு
2021-ம் ஆண்டு வெளியாகவிருக்கும் இந்தியாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் முதன்முறையாகப் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய தரவுகள் சேகரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஆகஸ்ட் 31 அன்று தெரிவித்தது. 2006-ம் ஆண்டு சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, நாட்டின் மக்கள்தொகையில் 41 சதவீதம் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதாக தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (NSSO) தெரிவிக்கிறது. இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எடுப்பதற்காக 25 லட்சம் பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago