சேதி தெரியுமா? - புதிய தலைமை நீதிபதி

By கனி

மே 10: கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அபய் ஸ்ரீநிவாஸ் ஓகா பதவியேற்றுக்கொண்டார். கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தினேஷ் மகேஸ்வரி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அபய் ஸ்ரீநிவாஸ் ஓகா, கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார். அவருக்கு கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

30 லட்சம் வேலைவாய்ப்புகள்

மே 10: இந்தியத் தொழில்நுட்பத் துறையில் 2023-ம் ஆண்டுக்குள் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று இந்தியப் பணியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத் துறைகளான செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் உள்ளிட்டவற்றில் இந்தப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2023-ம் ஆண்டில் நாட்டின் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை 70 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தக அமைப்பு: அமைச்சர்கள் சந்திப்பு

மே 13: வளரும் நாடுகளின் உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் சந்திப்பு டெல்லி யில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தியா ஒருங்கிணைத்திருந்த இந்தச் சந்திப்பில், அர்ஜென்டினா, வங்கதேசம், பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட   22 நாடுகள் கலந்துகொண்டன. மின்-வர்த்தகத்தில், வளரும் நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பது, பலதரப்பட்ட வர்த்தக அமைப்புக்கான சாத்தியங்களை உருவாக்குவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்துப் பேசப்பட்டன.

பருவநிலை மாற்றம்: பொருளாதாரம் பாதிப்பு

மே 15: தீவிரமான பருவநிலை மாற்றத்தால், ஆசிய பசிஃபிக் பகுதிகள் 40 சதவீதப் பொருளாதாரத்தை இழக்க நேரிடும் என்று ஐ.நா.வின் பேரிடர் ஆபத்துக் குறைப்பு அலுவலகம் (UNDRR) வெளியிட்ட உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை தெரிவித்துள்ளது. 

ஜப்பான், சீனா, கொரியா, இந்தியா ஆகிய பெரிய பொருளாதார நாடுகள் பருவநிலை மாற்றத்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. பேரிடர் ஆபத்தைக் குறைக்க நாடுகள் தவறும்பட்சத்தில், ஆண்டுக்கு 4 சதவீத உள்நாட்டு உற்பத்தியை இழக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

ஈஃபிள் கோபுரத்தின் வயது 130

மே 15: பாரிஸ், ஈஃபிள் கோபுரத்தின் 130-வது ஆண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 1889-ம் ஆண்டு உலகக் கண்காட்சிக்காகக் கட்டப்பட்ட இந்தக் கோபுரம், 324 மீட்டர் உயரம், 7,300 டன் எடை கொண்டது. ஆண்டுதோறும்  70 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். 1930-ம் ஆண்டு, நியூயார்க்கில் கிரைஸ்லர் கட்டிடம் கட்டப்படும்வரை, உலகின் உயரமான கட்டுமான அமைப்பாக 41 ஆண்டுகளுக்கு ஈஃபிள் கோபுரம் இருந்தது.

சீனாவில் விக்கிபீடியாவுக்குத் தடை

மே 15: ஆன்லைன் கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவின் அனைத்து மொழிப் பதிப்புகளுக்கும் சீனாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ‘கிரேட் ஃபயர்வால்’ என்ற தணிக்கைச் சாதனத்தின் வழியாக இந்தத் தடை செயல்படுத்தப்பட்டுள்ளது. கூகுள், ஃபேஸ்புக், லிங்க்ட்இன் போன்ற தளங்களைத் தொடர்ந்து தற்போது விக்கிபீடியாவுக்கும் சீனாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

லோக்பால் இணையதளம் தொடக்கம்

மே 16: லோக்பால் இணையதளத்தை அந்த அமைப்பின் தலைவர் நீதிபதி பினாகி சந்திர கோஷ் தொடங்கிவைத்தார். லோக்பால் செயல்படும் விதத்தைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை இந்த இணையதளம் வழங்குகிறது. லோக்பால் இணையதள முகவரி: http://lokpal.gov.in./

6 பொறியியல் கல்லூரிகள்: 0% தேர்ச்சி

மே 15: அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் ஆறு பொறியியல் கல்லூரி களில், கடந்த 2018 நவம்பர்/டிசம்பர் செமஸ்டர் தேர்வுகளில் ஒரு மாணவர்கூடத் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த ஆறு கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான தேர்வுகளை 682 மாணவர்கள் எழுதி இருந்தார்கள். ஆனால், அதில் ஒருவர்கூடத் தேர்ச்சி பெறவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அத்துடன், 73 பொறியியல் கல்லூரிகள் 10 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சியைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் நிறைவு

மே 19: மக்களவை தேர்தலின் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு  8 மாநிலங்களைச் சேர்ந்த 59 தொகுதிகளில் 63.98 சதவீத வாக்குகள் பதிவாயின. தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. மக்களவைத் தேர்தல், நான்கு மாநிலங்களுக்கான (ஆந்திரம், ஒடிஷா, சிக்கிம், அருணாசல பிரதேசம்) சட்டப் பேரவைத் தேர்தல்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23 அன்று நடைபெறவிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE