முதல் தலைமுறை ஆனந்தம் !

By வா.ரவிக்குமார்

அரசுப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வாகி நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் ஏழ்மை காரணமாக மேற்கொண்டு உயர்கல்வி மேற்கொள்ள முடியாத நூற்றுக்கணக்கான மாணவர்களை அவர் விரும்பும் படிப்பில் சேர்த்து அவர்களின் முகத்தில் நிலையான மகிழ்ச்சியை உருவாக்குகிறது ஆனந்தம் இளைஞர் நல அமைப்பு.

கல்வித் துறையில் தொழில்முனைவோர், பன்னாட்டு நிறுவனங்களில் பணிசெய்பவர்கள், சமூகத்துக்குத் தன்னாலான கல்விச் சேவையைச் செய்யும் முனைப்புகொண்டவர்கள் போன்றவர்களால் உண்டாக்கப்பட்டதே ‘ஆனந்தம்’. இதன் நிறுவனத் தலைவரான எஸ்.செல்வகுமார் ஏறக்குறைய இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் தனித் திறன்களை மேம்படுத்துதல், உயர் கல்விக்கு பின் அவர்களுக்கான பணிவாய்ப்புகளை ஏற்படுத்துதல் என்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறார்.

நான்கில் ஒருவருக்கு மட்டுமா!

அமெரிக்காவில் 18-23 வயது வரம்பைச் சேர்ந்தவர்களில் உயர்கல்வி படிப்பவர்கள் 85 சதவீதம். இந்தியாவில் அதே பிரிவைச் சேர்ந்தவர்களில் உயர்கல்வி படிப்பவர்கள் 25.2 சதவீதம். 4 பேரில் ஒருவர்தான் இந்தியாவில் உயர்கல்வி படிக்கிறார். தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தோராயமாக 8 லட்சம் பேர் தேர்வடைந்திருக்கின்றனர். இவர்களில் 2 லட்சம் பேர் ஏதோ காரணத்தால் உயர்கல்வி படிக்க முடியவில்லை. 1 லட்சம் பேர்வரை நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தும் உயர் கல்வி படிக்கவில்லை.

“சென்னை போன்ற பெருநகரங்களில் குடும்பத்தோடு ஒருநாள் இரவு விருந்துக்கு 2,000 ரூபாய் செலவு செய்வோம். ஒரு சட்டையை ஆயிரம் ரூபாய்க்கு எளிதாக வாங்குகிறோம். ஆனால், தமிழகத்தின் இன்னொரு மூலையில் 1100-க்கு மேல் மதிப்பெண்களை எடுத்துவிட்டு, 500 ரூபாய் கொடுத்து விண்ணப்பத்தைக்கூட வாங்க முடியாத நிலையிலிருக்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வை எங்களால் முடிந்தவரை நல்ல மனம் கொண்டவர்களின் ஒத்துழைப்போடு, உயர் கல்வியின் மூலமாக அவர்களின் வாழ்க்கைக்கான மதிப்பீடுகளை அளிப்பதற்கு உதவுகிறோம்”என்றார் செல்வகுமார்.

தேவையான தகுதி

மருத்துவர்கள், பொறியாளர்கள், உள்ளிட்ட பட்டதாரிகளை உருவாக்குவது மட்டும் ஆனந்தம் அமைப்பின் நோக்கம் அல்ல. வாழ்வின் சவால்களைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு, சமூக அக்கறையோடு சிறந்த மனிதர்களாக மாணவர்களை உருவாக்குவதே இந்த அமைப்பின் நோக்கம்.

“முதலில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூரில் இந்தத் திட்டத்தை ஆரம்பித்தோம். தற்போது இந்தத் திட்டத்தை விழுப்புரம், அரியலூருக்கும் விரிவாக்கியிருக்கிறோம். அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியரிடமிருந்து பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கியிருக்கும் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைக் குறித்த விவரங்களை பெற்று, விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அந்த மாணவர்களுக்கு கவுன்சலிங்கில் ஆரம்பித்து அவர்களைப் பணியமர்த்துவதுவரை 100 சதவீத உதவியை அளிக்கிறோம்” என்றார் செல்வகுமார்.

பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். தாய் தந்தையரை இழந்த மாணவர்கள், குடும்பத்தில் ஒருவர் மட்டுமே தினக்கூலியாக வருமானம் ஈட்டுபவர்கள், குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருப்பது. உயர்கல்வி பயில்வதற்கு ஏற்ற மதிப்பெண்களைப் பெற்றிருப்பது ஆகியவற்றை உதவி பெறும் மாணவர்களுக்கான தகுதிகளாக நிர்ணயித்துள்ளனர். அதன்படி தேர்ந்தெடுக்கப்படும் மாணவ - மாணவியரின் வீடுகளில் ஆனந்தம் அமைப்பின் தன்னார்வலர்கள் நேரடியாக ஆய்வு செய்கிறார்கள். அதன் பிறகு சென்னையில் நேர்காணல் நடத்தி உதவித்தொகை பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் இந்த அமைப்பின் உதவியால் 186 மாணவர்கள் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், செவிலியர், குடிமைப்பணி தேர்வுக்கு படிப்பது போன்ற பிரிவுகளில் உயர்கல்வி படிக்கின்றனர். உயர்கல்வியைப் படித்து முடித்த 30-க்கும் மேற்பட்ட ஆனந்தம் மாணவர்கள் இன்ஃபோசிஸ், ஐ.பி.எம்., அசென்ஷர், டி.சி.எஸ்., ஐ.டி.சி., சவுத் இந்தியன் வங்கி, கவின்கேர் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியிலிருப்பதும் அவர்களின் வருமானத்திலிருந்து கணிசமான தொகையையும் நேரத்தையும் மாணவர்களுக்குத் தரும் செய்தி ஆனந்தமல்ல பேரானந்தம்!

கல்வித் திட்டத்தின் சிறப்பம்சங்கள்

ஆனந்தம் கல்வி உதவித் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் படிப்பு தொடங்கியதிலிருந்து முடியும் வரையிலான முழு கல்விச் செலவையும் இந்த அமைப்பு ஏற்றுக்கொள்கிறது.

தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆனந்தம் அமைப்பின் தன்னார்வலர் ஒருவர் வழிகாட்டியாக (Mentor) செயல்படுவார்.

மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம், ஆளுமைத்திறன் மற்றும் உண்மையான அன்பு, விட்டுக்கொடுத்து வாழ்தல், பெற்றோர்களை பாதுகாத்தல் உறவுகளை மேம்படுத்துதல், சமூக அக்கறை உள்ளிட்ட நற்பண்புகளை மேம்படுத்துவதற்காக தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்குதல்.

படிப்பு முடியும் தறுவாயில் அவர்களின் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல்களை வழங்குதல்.

தொடர்புக்கு: www.anandham.org

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்