நாடு விடுதலை பெற்ற பிறகு ஜவாஹர்லால் நேரு நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார். நேரு தலைமையில் சட்ட அமைச்சராக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், துணைப் பிரதமராக சர்தார் வல்லபபாய் படேல் 15 அமைச்சர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.
1951-52-ல் முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. 1951 அக்டோபர் 25 முதல் 1952 பிப்ரவரிவரை பல கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. நேரு மீண்டும் பிரதமரானார்.
தொகுதிகளும் பெரும்பான்மையும்
இதுவரை 16 மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இந்தியா முழுவதும் உள்ள மக்களவைத் தொகுதிகளில் நடக்கும் தேர்தல்களில் வெல்பவர்களும் ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சேர்ந்த 2 நியமன எம்.பி.க்களும் இணைந்து மக்களவை உறுப்பினர்கள் ஆகிறார்கள். முதல் தேர்தல் 489 தொகுதிகளுக்கு நடந்தது. இது படிப்படியாக உயர்ந்து 1996 தேர்தலில் 543 தொகுதிகள் ஆனது. இந்த எண்ணிக்கை தற்போதுவரை நீடிக்கிறது.
மக்களவைத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையில் பாதியைவிட ஒரு தொகுதி அதிகமாகப் பெறும் கட்சி அல்லது கூட்டணி, ஆட்சி அமைப்பதற்கான.பெரும்பான்மையைப் பெறுகிறது. தேர்தலில் எந்தக் கட்சிக்கும்/கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இருப்பதிலேயே அதிக தொகுதிகளை வென்ற தனிப்பெரும் கட்சி ஆட்சியமைக்க உரிமைகோரலாம்.
ஆனால், அப்படி ஆட்சி அமைக்கும் கட்சி குறிப்பிட்ட காலத்துக்குள் மக்களவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும். தேர்தலுக்குப் பின் மற்ற கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவுடன் இதைச் செய்யலாம். அரசுக்கு ஆதரவளிக்கும் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் தங்களது ஆதரவை விலக்கிக்கொண்டு அரசு பெரும்பான்மை இழந்தால், மீண்டும் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
தவறும்பட்சத்தில் ஆட்சி கவிழ்ந்து மறுதேர்தல் நடத்தப்படும்.ஆட்சி அமைக்கும் கட்சிக்குப் பெரும்பான்மை இருந்தால் மட்டுமே, அது பெரும்பான்மை ஆட்சி
என்று அழைக்கப்படும். அந்த வகையில் 2014 நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 282 தொகுதிகளில் வென்று பெரும்பான்மை
பெற்றது. அதற்குமுன் 1984-ல்தான் பெரும்பான்மை ஆட்சி அமைந்திருந்தது.
இடையில் கவிழ்ந்த ஆட்சிகள்
மத்திய அரசின் ஒரு ஆட்சிக்கான முழுப் பதவிக் காலம் ஐந்தாண்டுகள் என்றாலும் அனைத்து அரசுகளும் ஐந்தாண்டு ஆட்சியை நிறைவு செய்திடவில்லை. 1975-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிறப்பித்தார். 1977-ல் நெருக்கடி நிலை அகற்றப்பட்ட பிறகு நடைபெற்ற தேர்தலில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் முதல்முறையாக இழந்தது. வலதுசாரி-இடதுசாரிச் சிந்தனை கொண்ட பல்வேறு ஆளுமைகளின் கூட்டமைப்பான ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது.
மொரார்ஜி தேசாய் பிரதமரானார். ஆனால், இந்த ஆட்சி பெரும்பான்மையை இழந்ததால் 1980-லேயே மீண்டும் மக்களவைத் தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி மீண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. 1984-ல் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதால் அதே ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சி 404 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்தது.
1989-ல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பறிகொடுத்தது. ஜனதா தளம் தலைமையிலான தேசிய முன்னணி என்ற கூட்டணி ஆட்சி அமைத்தது. வி.பி.சிங் பிரதமரானார். ஆனால், அந்தக் கூட்டணியும் பெரும்பான்மையை இழந்ததால் 1991-ல் மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. நரசிம்மராவ் பிரதமராகி ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தை நிறைவு செய்தார்.
1996 தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக வென்று அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 13 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது. காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஜனதா தளத்தின் தேவ கவுடா பிரதமரானார்.
ஆனால், அவருக்கான ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெற்றதால் அடுத்த ஆண்டே ஐ.கே.குஜ்ரால் பிரதமரானார். 1998-ல் அவருக்கான ஆதரவையும் காங்கிரஸ் திரும்பப்பெற்றதால் மீண்டும் தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டது. அந்தத் தேர்தலுக்குப் பின் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. வாஜ்பாய் இரண்டாவது முறை பிரதமரானார்.
1999-ல் அதிமுக தனது ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டது. இதையடுத்து வாஜ்பாய் அரசு மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால், 1999-ல் மீண்டும் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மீண்டும் தே.ஜ.கூ. ஆட்சி அமைந்தது. மூன்றாவது முறை பிரதமராகி ஆட்சி அமைத்த வாஜ்பாய் அந்த முறை முழுப் பதவிக் காலத்தை நிறைவுசெய்தார். அதற்குப் பிறகு மத்திய அரசுகள் பெரும்பான்மையை இழக்கும் சூழல் ஏற்படவில்லை.
தேர்தல் துளிகள்
# மிகத் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் - 1989 மக்களவைத் தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.ராமகிருஷ்ணாவும் 1998 தேர்தலில் பிஹாரின் ராஜ்மகால் தொகுதியில் பா.ஜ.க.வின் பாபுலால் மராண்டியும் 9 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றனர்
# மிக அதிக வாக்கு விகிதத்தில் வென்றவர் - 2014 மக்களவைத் தேர்தலில் சூரத் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், அத்தொகுதியில் பதிவான 75.8% வாக்குகளைப் பெற்றார். இரண்டாம் இடம்பெற்ற வேட்பாளரைவிட 56.2% வாக்குகளை அவர் அதிகம் பெற்றார்.
# 1996 மக்களவைத் தேர்தலுக்குப்பின் கவன ஈர்ப்புக்காக போட்டியிடுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டது. அதற்கு முன் டெபாசிட் தொகை ரூ.500 ஆக இருந்தது.
# 2014 மக்களவைத் தேர்தலின்போது இந்திய வாக்காளர்களில் பெண்களின் விகிதம் 47.6%. தற்போது அது 48%. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், மேகாலயம், அருணாசலப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களிலும் மத்திய ஆட்சிப் பகுதியான புதுச்சேரியிலும் ஆண் வாக்காளர்களைவிடப் பெண் வாக்காளர்கள் அதிகம்.
# 2014 மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக வெளிநாட்டில் வாழும் என்.ஆர்.ஐ. இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago