“பாரதத் தாயைப் போற்றிப் புகழும் தேசத்தில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின், ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலாவின் குரல்களுக்கு நீதி கிடைத்திருக்கிறதா?” என்ற கேள்வியைத் தற்கால இந்தியாவின் சமூக அரசியலைப் பெண்ணியப் பார்வையில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தும் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சி ஏட்டில் மாணவி திவ்ய பாரதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எழுப்பினார்.
“இத்தகைய அணுகுமுறை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்தியக் கல்வி நிறுவனங்களுக்குள் சாதியம் நிலவுவதாகவும் நீதித் துறையில் நீதி பரிபாலனம் செய்யும் முறையில் சிக்கல் இருப்பதாகவும் இந்த அத்தியாயத்தில் எழுதியது உண்மைக்குப் புறம்பானது. இது தேச நலனுக்கு எதிரானது” என்று தேர்வாளர் எச்சரிக்க அந்தப் பக்கங்களைத் தன்னுடைய ஆய்வேட்டில் இருந்தே நீக்கிவிட்டார் திவ்ய பாரதி.
தன் ஆய்வுப் பக்கங்களை திவ்ய பாரதி இழந்தது தேர்ந்தெடுத்த தலைப்பை அறிவியல்பூர்வமாகவும் ஆராய்ச்சி முறைப்படியும் ஆழமாகவும் நிறுவத் தவறியதால் அல்ல. தேசத்துக்கு எதிரானது என்ற பொத்தாம்பொதுவான அதே நேரத்தில் அச்சுறுத்தக்கூடிய விமர்சனத்தால் அது நடந்தேறியது. இப்படித் தன்னுடைய ஆய்வேட்டின் ஒவ்வொரு பக்கத்தையும் தயங்கித் தயங்கிப் பயந்து பயந்து எழுதிவரும் ஆராய்ச்சி மாணவர்கள் பலர் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இன்று இருக்கிறார்கள்.
முட்டுக்கட்டை போடும் முயற்சி!
அதிலும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேரள மத்திய பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் விடுத்த சுற்றறிக்கை ஆராய்ச்சியாளர்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ‘தேசத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் தலைப்புகளில் மட்டுமே இனி முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பொருத்தமற்ற தலைப்புகள் நிராகரிக்கப்பட வேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உடனடியாக அமல்படுத்துமாறு கேரள மத்திய பல்கலைக்கழகமும் தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அனைத்து ஆராய்ச்சித் துறைகளுக்கும் கட்டளையிட்டுள்ளது.
“ஆராய்ச்சியாளர்களின் சுதந்திரத் தைப் பறித்துக் கல்விப் புலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சி இது” என்று கேரள மத்திய பல்கலைக்கழகத்துப் பேராசிரியை மீனா பிள்ளை இந்த நடவடிக்கையைக் கண்டித்திருக்கிறார்.
இதை முன்னிட்டு ஆங்கில மற்றும் ஒப்பீட்டு இலக்கிய ஆய்வு வாரியத்தின் உறுப்பினர் பொறுப்பையும் அவர் ராஜினாமா செய்திருக்கிறார். உயரதிகாரிகளின், ஆட்சியாளர்களின் விருப்பத்துக்குச் செவி சாய்க்கும்வகையில் உயர்கல்வி மாற்றப்படுவது குறித்த கவலையையும் கண்டனத்தையும் கல்வியாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் வெளிப்படுத்திவருகிறார்கள்.
நிர்ப்பந்திக்கக் கூடாது!
“கல்வி ஆராய்ச்சிகள் தொடர்பாக அவ்வளவாக எதுவுமே தெரியாத அதிகாரிகள்தாம் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் வீற்றிருப்பவர்கள். அவர்கள் ஆய்வுத் தலைப்பு குறித்துப் பேசுவதே நகைப்புக்குரியதாகும். ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான தகுதிவாய்ந்த தலைப்பு எது என்பதைப் பரிந்துரைக்கும் அதிகாரம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ஒருபோதும் கிடையாது. அதை முடிவுசெய்ய வேண்டியவர்கள் ஆய்வாளரும் வழிகாட்டியும்தான்.
கல்விக் குழுவோடும் செனட்டோடும் கலந்துபேசி ஆராய்ச்சிப் புலம் குறித்த சில வழிகாட்டுதல்களைப் பல்கலைக்கழகம் முன்மொழியலாம். எதுவாக இருந்தாலும் யாரும் ஆராய்ச்சியாளர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது. முக்கியமாக, அரசியல்வாதிகளின், அதிகாரிகளின், ஆதாயம் தேடுபவர்களின் தலையீட்டில் இருந்து பல்கலைக்கழகங்களின் புனிதத்தன்மையை காக்க வேண்டும்” என்கிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரான அனந்த கிருஷ்ணன்.
திணிக்கப்படும் தலைப்புகள்
இத்தகைய தலையீடு அறிவியல் துறையில் தலையெடுத்தால் அறிவியல் வளர்ச்சியில் உலக நாடுகளோடு நாம் போட்டிபோடுவது என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும். இந்நிலை தொடர்ந்தால் நம் ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கும் ஆய்வுக் கட்டுரைகள் ஒருபோதும் சிறந்த ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட மாட்டாது.
மனிதவியல் துறையைப் பொறுத்தமட்டில் அறிவார்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பக்கமே தலைவைத்தும் படுக்க மாட்டார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் அனந்த கிருஷ்ணன். ஏற்கெனவே அந்தக் கட்டத்தை நோக்கித் தானும் தன்னைப் போன்ற பல ஆராய்ச்சியாளர்களும் தள்ளப்பட்டுவருவதாகச் சொல்கிறார் பெயர் சொல்லத் தயங்கும் ஓர் ஆராய்ச்சி மாணவி.
அவர் கூறுகையில், “மூன்றாண்டுகளுக்கு முன்னால் என்னுடைய முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு ஊக்கத்தொகை பெறும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகளின் பல அறிவிப்புகளைத் தேடிக்கொண்டிருந்தேன்.
அப்போது, ‘குஜராத் ஒரு வெற்றிகரமான முன்மாதிரி’, ‘சுவச் பாரத் அப்யான்’, ‘சர்தார் படேல் திட்டத்துக்கும் இந்திரா திட்டத்துக்கும் இடையிலான ஒப்பீட்டு ஆய்வு’ உள்ளிட்ட 82 தலைப்புகள் அடங்கிய ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டு அவற்றில் ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை உடனடியாக அளிக்கப்படும் என்ற செய்தியைக் கண்டேன். இது அதிர்ச்சி அளிக்கக் கூடுதல் விவரம் தேடியபோது இந்தத் தலைப்புகள் அனைத்தையும் குஜராத் அரசு அம்மாநிலப் பல்கலைக்கழகங்களில் உள்ள ஆராய்ச்சி மாணவர்கள் மேல் திணித்தது தெரியவந்தது.
இதனால் சோர்வடைந்து ஊக்கத்தொகை கோரும் முயற்சியையே கைவிட்டேன். இதைவிடவும் அச்சுறுத்தல் ஏற்படுத்திய செயல், தரம் குறைவாக, தவறான தகவல்களைக் கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டி 4,305 ஆய்விதழ்களைக் கடந்தாண்டு யூ.ஜி.சி. நிராகரித்ததே. அந்தப் பட்டியலில் என்னுடைய ஆய்வுக் கட்டுரை ஏற்கெனவே பிரசுரமான ஆய்விதழும் இடம்பெற்றிருந்ததால் நான் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து பிரசுரத்துக்காகப் பாடுபட வேண்டியதாயிற்று.
ஆனால், பணம் கொடுத்தால் கட்டுரைகளை வெளியிடும் பல ஆய்விதழ்கள் புதிய பட்டியலில் இடம்பெற்றிருந்தன. தரம் என்ற போர்வையில் நாட்டின் மிகச் சிறந்த ஆய்விதழ்களான ‘எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’, ‘தி லான்செட் பப்ளிக் ஹெல்த்’ உள்ளிட்டவை அரசியல் உள்நோக்கத்துடன் களையப்பட்டிருந்தன என்பது தெரியவந்தபோது நம்பிக்கை இழந்தேன்” என்கிறார்.
தொடர் தாக்குதல்
ஆராய்ச்சிக்கான அடித்தளமே சுதந்திரம்தான். அதில் யார் மூக்கை நுழைத்தாலும் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் முன்னாள் பேராசிரியர் P.K.போக்கர்.
araaichi-3jpgP.K.போக்கர்right“மனித வளத் துறை அனுப்பிய அறிக்கையை நான் வாசித்தேன். அதைக் கேரள மத்திய பல்கலைக்கழகமே நிராகரித்திருக்க வேண்டும். ஹிட்லர் ஆட்சியின்போது ஜெர்மனியில் இப்படித்தான் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. நாஜி கொள்கையைப் போற்றும் ஆய்வுகள் மட்டுமே ஊக்குவிக்கப்பட்டன.
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற முற்போக்கான நாட்டுக்கு மிகச் சிறந்த ஆளுமைகளை உருவாக்கித் தந்துகொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள் இன்று தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. அங்கு முதலில் குறிவைக்கப்படுபவர்கள் மெத்தப் படித்த பேராசிரியர்களும் ஆராய்ச்சி மாணவர்களுமே” என்று ஆதங்கப்படுகிறார் போக்கர்.
அதிகாரத்துக்கு அடிபணிந்து, சொன்னதைச் சொல்லும்-செய்யும் கிளிப்பிள்ளையாக ஆராய்ச்சி மாணவர்கள் மாற்றப்படுவதுதான் உண்மையிலேயே தேசத்தின் எதிர்காலத்தை அபாயத்துக்குள்ளாக்கும் செயலாகும் என்பதே கல்வியாளர்களின் ஆராய்ச்சியாளர்களின் குரலாக ஒலிக்கிறது. கல்விப் புலத்துக்கு அப்பாற்பட்டுச் சொல்வதானால் கருத்துச் சுதந்திரத்தை, கருத்து வேறுபாடு கொண்டிருப்பதற்கான உரிமையை, தேர்வுசெய்யும் உரிமையை முடக்குவது என்பது மனித உரிமை மீறலாகும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago