ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு நினைவு: முக்கிய மனிதர்களும் எண்களும்

By கோபால்

இந்திய மக்களிடையே விடுதலைத் தாகம் தீவிரமடையவும் சுதந்திரத்துக்கான போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடையவும் காரணமாக அமைந்தது 1919 ஏப்ரல் 13 அன்று நிகழ்ந்த ஜாலியன்வாலா பாக் படுகொலை. பஞ்சாப் மாகாணத்தில் அமிர்தசரஸ் நகரில் இருந்த ஜாலியன்வாலா பாக் திடலில் குழுமியிருந்தவர்கள் மீது பிரிட்டிஷ் அரசுப் படைகள் துப்பாக்கியால் சுட்டதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்து நூறாண்டுகள் நிறைவடைந்துவிட்ட தருணத்தில் அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கியமான நபர்களையும் எண்களையும் தெரிந்துகொள்வோம்:

சிட்னி ரவுலட்: 1918-ல் முதல் உலகப் போர் நிறைவடைந்தபின் இந்தியாவில் தங்களது ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் வலுவடைந்துவருவதாக பிரிட்டிஷ் அரசு கருதியது. இதனால் அரசு எதிர்ப்பு சக்திகளைப் பற்றி ஆராய்வதற்காக சிட்னி ரவுலட் என்ற ஆங்கிலேய நீதிபதியின் தலைமையில் ஒரு குழுவை பிரிட்டிஷ் அரசு அமைத்தது.

ரவுலட் சட்டம்: ரவுலட் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசு 1919 மார்ச் 10 அன்று ரவுலட் சட்டத்தைப் பிறப்பித்தது. இந்தச் சட்டம் இந்தியர்களின் சிவில் உரிமைகளைப் பறித்தது. இதை எதிர்த்து நாடெங்கும் போராட்டங்கள் நடந்தன. பஞ்சாபில் ரவுலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன.

பாரிஸ்டர் சைபுதின் கிச்லு & டாக்டர் சத்யபால்: பாரிஸ்டர் சைபுதின் கிச்லு, சத்யபால் இருவரும் ரவுலட் சட்டத்துக்கு எதிரான அமைதிவழி சத்தியாகிரகப் போராட்டங்களைப் பெரும் எண்ணிக்கையில் மக்களைத் திரட்டி வெற்றிகரமாக நடத்தினர். ஏப்ரல் 11 அன்று இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட அதேநேரம், இவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை.

இவர்களது கைதை அடுத்து பஞ்சாப் மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இவர்கள் கைதுசெய்யப்பட்டதற்கு எதிராகத்தான் ஏப்ரல் 13 அன்று ஜாலியன்வாலா பாக்கில் அமைதிவழிப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

ஜெனரல் ரெஜினால்ட் டையர்:  ஜாலியன்வாலா பாக் படுகொலையை நிகழ்த்திய படைகளுக்குத் தலைமை வகித்தவர். ஆயுதம் ஏந்தாத அப்பாவி மக்கள்மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை நடத்த உத்தரவிட்டவர். முதலில் இவரது செய்கையை பிரிட்டிஷ் அரசு நியாயப்படுத்தியது; பாராட்டவும் செய்தது. பின்னர் அந்தப் படுபாதகச் செயல் நடந்தது இவர் ஒருவருடைய தவறான முடிவாகச் சுருக்கப்பட்டது. ஆனால், இவருக்குக் கொடுக்கப்பட்ட அதிகபட்ச தண்டனை பிரிட்டனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, பதவி விலக வைத்தது மட்டும்தான்.

மைக்கேல் ஓ ட்வையர்: ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்தபோது பஞ்சாப் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக இருந்தவர். அமிர்தசரஸ் நகரில் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முழு அதிகாரங்களை ஜெனரல் ரெஜினால்ட் டையருக்கு இவரே அளித்திருந்தார். படுகொலைச் சம்பவத்தை நியாயப்படுத்தினார். 1940-ல் லண்டனில் இந்தியப் புரட்சியாளர் உத்தம் சிங் இவரைச் சுட்டுக் கொன்றார்.

nootraandu---micheljpgமைக்கேல்

வில்லியம் ஹண்டர்: ஜாலியன்வாலா பாக் படுகொலையை எதிர்த்து இந்தியா முழுவதும் கண்டனப் போராட்டங்கள் வெடித்த நிலையில், அதைப் பற்றி விசாரிப்பதற்கான குழுவை 1919 அக்டோபர் 14 அன்று பிரிட்டிஷ் அரசு அமைத்தது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் நீதிபதியுமான வில்லியம் ஹண்டர் தலைமையிலான அக்குழு ‘ஹண்டர் குழு’ என்று அழைக்கப்பட்டது. இந்தக் குழு படுகொலையை நிகழ்த்திய டையருக்கு எந்தத் தண்டனையையும் பரிந்துரைக்காததால், இந்திய மக்களின் நம்பிக்கையை இழந்தது.

சில எண்கள்

# படுகொலை நடந்தபோது ஜாலியன்வாலா பாக் தோட்டத்தில் 10,000-20,000 பேர் இருந்திருக்கக்கூடும் என்று ஹண்டர் குழுவின் அறிக்கை தெரிவித்தது.

# 1650 துப்பாக்கிக் குண்டுகள் மக்களை நோக்கி சுடப்பட்டதாக ஹண்டர் குழுவிடம் ஜெனரல் டையர் தெரிவித்தார்.

# ஜாலியன்வாலா பாக் படுகொலையில் 379 பேர் இறந்ததாகவும் 1,100க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ‘சேவா சமிதி’ என்ற சமூக சேவை அமைப்பு வெளியிட்ட கணக்கை, ஹண்டர் குழு அதிகாரபூர்வமானதாக ஏற்றுக்கொண்டது.

# ஆனால், பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டங்களில் முன்னணியில் இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1,000 பேர் இறந்திருக்கக்கூடும் என்றும் 1,500 பேர் காயமடைந்திருக்கக்கூடும் என்றும் கூறியது. உண்மையில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற முழுமையான எண்ணிக்கை யாருக்குமே தெரியாது என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்