நான் 12வது வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். தாவரவியல் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. எனது வகுப்புத் தோழி பிரீத்தி செம்பருத்தி பூ வரைந்து கொண்டு வந்திருந்தாள். அதன் பூவின் காம்பில் இருந்த சின்னஞ்சிறு நெளிவுகளைக் கூடத் தத்ரூபமாக வரைந்திருந்தாள். அது இன்னும் என் கண் முன் அப்படியே இருக்கிறது.
உயிரோடு செம்பருத்தி
32 மாணவர்களும் அதே செம்பருத்திப் பூவைத்தான் வரைந்திருந்தோம். ஆனால் எங்களுடையது எல்லாம் வெறும் காகிதப் பூக்களாக மட்டுமே இருந்தன. அவள் வரைந்ததோ கருப்பு, வெள்ளையாக இருந்தாலும் இன்று காலை பூத்த அழகிய செம்பருத்தியாகவே மலர்ந்து நின்றது. அவளுடைய செம்பருத்திப் பூவை நான் மிகவும் ரசித்தேன். ஆனாலும் எது என் நோட்டிலிருக்கும் பூவையும் அவளுடையதையும் வேறுபடுத்துகிறது என எனக்குப் புரியவில்லை.
எங்கள் ஆசிரியர் நிச்சயம் அவளுக்கு எக்ஸலண்ட் போட்டு அவர் பாணியில் 5 குட்டி நட்சத்திரங்கள் போடுவார் என்ற எண்ணம் என் மனதில் ஓடியது. எல்லாரும் ரெக்கார்ட் நோட்டுகளைச் சமர்ப்பித்தோம்.
காகிதப் பூ போதும்
எல்லோருடைய நோட்டுகளையும் ஆசிரியர் பார்த்தார். ஒவ்வொருவராக அழைத்துத் தன் கருத்தைச் சொல்லி ரெக்கார்ட் நோட்டுகளைக் கொடுத்தார். கடைசியாகப் பிரீத்தியின் செம்பருத்தி வரைந்த பக்கத்தைத் திறந்து வைத்துக் கொண்டு “பிரீத்தி…. இங்கே வா” என்றார். நானும் பிரீத்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம். பெருமிதத்தோடு பிரீத்தி அருகில் சென்றாள். “நீ வரைந்த படம் தவறு. ஆங்காங்கே தவறு குறி போட்டிருக்கிறேன். புத்தகத்தைப் பார்த்து அவற்றை எல்லாம் சரி செய்து மீண்டும் வரைந்து கொண்டு வா” எனக் கோபமாகச் சொல்லி நோட்டைக் கையில் திணித்தார்.
அப்பொழுதுதான் நாங்கள் வரைந்த செம்பருத்திக்கும் பிரீத்தியின் செம்பருத்திக்கும் இடையே உள்ள வித்தியாசம் எனக்குப் புரிந்தது. நாங்களோ புத்தகத்திலுள்ள மலரை அச்சு வார்த்தாற் போல வரைந்திருந்தோம். அவளோ தன் வீட்டுத் தோட்டத்தில் பூத்திருந்த செம்பருத்தியைப் பார்த்து, பார்த்து ரசித்துத் தன் பென்சிலால் ஷேடிங் எல்லாம் கொடுத்துத் தத்ரூபமாக வரைந்திருந்தாள்.
அதைக் கண்ட ஆசிரியர் பூரித்துப் போய் அவளைப் பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் அவருடைய ஒரு வட்டத்துக்குள் மட்டும் சிந்திக்கும் மனசால் பிரீத்தியின் தனித்துவத்தை அங்கீகரிக்க முடியவில்லை. அவளுடைய அபாரத் திறமையை அடையாளம் கண்டு ஊக்குவிக்கவில்லை. அந்த ஆசிரியர்க்குத் தன்னுடைய கற்பிதங்களுக்கு அப்பால் பரந்து விரிந்த முறையில் காணும் பார்வை இல்லை.
எது புத்திசாலித்தனம்?
இப்படித்தான் பொதுவான அளவுகோல்களால்தான் புத்திசாலித்தனம் வரையறை செய்யப்படுகின்றது. புத்திசாலித்தனம் என்பது கற்றுக்கொண்டதை ஞாபகத்தில் வைத்து ஒரு எழுத்து பிசகாமல் பரீட்சையில் எழுதுவது, மனப்பாடம் செய்து ஒப்பிப்பது, பாடப்புத்தகக் கணக்கை நன்கு போடுவது, ஆங்கிலத்தில் பேசுவது என ஒரு சில அளவுகோல்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது.
ஆனால் இவை மட்டும்தான் புத்திசாலித்தனமா? சொல்லப் போனால் மனப்பாடத் திறனுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்கிறார் ஹாவர்ட் கார்னர் என்னும் உளவியல் நிபுணர். புத்திசாலித்தனம் என்ற ஒன்று தனித்துத் தோன்றுவதோ, இயங்குவதோ கிடையாது. அது ஒருவிதமான திறன். சிக்கல்களைச் சரி செய்யும் (problem solving) ஆற்றல், புதியவற்றை உருவாக்கும் படைப்பாற்றல், இவைதான் அந்தத் திறன் என 1983- ல் பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபித்தார் ஹாவர்ட் கார்னர். அவர் எழுதிய மனதின் சட்டகங்கள் (Frames of Mind) என்னும் புத்தகம் வழக்கமான கல்வித் திட்டங்களின் ஆன்மாவை உலுக்கும் வல்லமை படைத்தது. ஒருவருக்குக் கல்வி பல விஷயங்களைக் கற்றுத்தருவதை விடக் கற்பனைத் திறனை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலுவாகப் பேசுகிறார் இவர்.
பன்முகப் புத்திக்கூர்மை
மனித மூளையின் செயல்பாட்டின் பல நுணுக்கங்களைத் தன் ஆய்வில் கண்டறிந்தார் ஹாவர்ட். அவற்றுள் நம் அனைவரையும் அசரவைக்கும், மகிழ்விக்கும் ஒரு கண்டுபிடிப்பு உள்ளது. மனிதர்கள் எல்லோருக்கும் ஒன்றல்ல, இரண்டல்ல, பன்முகப் புத்திக்கூர்மை (Multiple Intelligence) நிச்சயமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதரிடத்திலும் எட்டு விதமான புத்திக் கூர்மைகள் காணப்படுகின்றன. நபருக்கு நபர் இதன் சதவீதம் வேண்டுமானால் மாறுபடும் என்றார் அவர். ஆனால் சந்தேகத்துக்கே இடமில்லாமல் அனைவரிடமும் பன்முகப் புத்திக்கூர்மைகள் இருக்கின்றன.
பன்முகப் புத்திக்கூர்மை தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கலாம். அந்தத் திறன்களை வளர்த்தெடுத்துப் பலப்படுத்தவும் முடியும் அல்லது கவனிப்பார் இல்லாமல் நீர்த்துப்போகச் செய்யவும் முடியும். படித்தவற்றை மனதில் நிறுத்தி அதை அப்படியே எழுதுவதோ, ஒப்பிப்பதோ ஒரு வகை அறிவுத் திறன் மட்டுமே. அதைத் தவிர மேலும் பல விதமான அறிவுத் திறன்களும் இருக்கவே செய்கின்றன.
நீங்கள் எப்படிப்பட்ட புத்திசாலி?
மொழித் திறன் (Verbal-Linguistic Intelligence), கணிதம் மற்றும் தர்க்கம் பற்றிய திறன்(Mathematical-Logical Intelligence), இசைத் திறன் (Musical Intelligence), காட்சி மற்றும் வெளித் திறன்(Visual-Spatial Intelligence), உடல்கூறு மற்றும் விளையாட்டுத் திறன் (Bodily-Kinesthetic Intelligence), மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் திறன் (Interpersonal Intelligence), சிந்தனைத் திறன் (Intrapersonal Intelligence), இயற்கை சார்ந்த திறன் (Naturalistic Intelligence) என எட்டு விதமான புத்திக்கூர்மைகளைப் பற்றி அவர் பேசுகிறார்.
இவை அனைத்தும் நம் மூளையில் குடிகொண்டுதான் இருக்கின்றன. ஒருவருக்குச் சில திறன்கள் பிரகாசமாக இருக்கும். மற்றொருவருக்கு வேறு சில திறன்கள் ஜொலிக்கும். இவற்றில் எது நம் பலம் என்பதை நாம் கண்டுபிடிக்கலாம். வரும் வாரங்களில் உங்கள் திறனைக் கண்டுபிடிப்போம் வாருங்கள்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago