அந்த நாள் 35: இட்லி தந்த இந்தோனேசியா

By ஆதி வள்ளியப்பன்

காலம்: பொ.ஆ. 1000, தஞ்சாவூர்

“சோழர்கள் காலத்துல தோன்றிய கோயில்கள், கலைகள் இன்னைக்கும் நம்மகிட்ட செழிப்பா இருக்கு. அவங்க காலத்தோட எச்சமா வேற என்னவெல்லாம் இப்பவும் இருக்கு, குழலி?”

“சொல்றேன். அதுக்கு முன்னாடி இந்தச் செழிப்புக்கு வேற என்ன காரணமா இருந்துச்சுங்கிறதையும் நாம தெரிஞ்சுக்கணும், இல்லையா. முற்காலச் சோழர் காலத்துல புகார்னு அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் துறைமுக நகராவும், ஏற்றுமதி-இறக்குமதிக்கும் புகழ்பெற்றிருந்திச்சு...”

“அதைத்தான் நாம பார்த்திட்டோமே...”

“ஆமா, அதைப் போலவே இடைக்காலச் சோழர் காலத்திலும் ஏற்றுமதி-இறக்குமதி புகழ்பெற்றிருந்துச்சு. அப்போ நாகப்பட்டினம் துறைமுகமா இருந்துச்சு.”

“அங்கேர்ந்து எந்த நாட்டுக்கெல்லாம் போனாங்க?”

“மலயா பகுதில இருந்த ஸ்ரீவிஜயனின் பேரரசு, சீனாவின் தாங் வம்சத்தினரோட சோழர்கள் வர்த்தகத் தொடர்பு வைச்சிருந்தாங்க. மேற்குல பெர்சியப் பேரரசு (இன்றைய ஈரான்), பாக்தாத்தின் அப்பாசித் சுல்தான்களுடனும் (இன்றைய ஈராக்) வர்த்தகத் தொடர்பு இருந்துச்சு.”

“கிழக்கு, மேற்குன்னு ரெண்டு பக்கமும் போனாங்களா. சரி, என்னவெல்லாம் ஏற்றுமதி பண்ணினாங்க?”

“விலை மதிப்புமிக்க மணிக் கற்கள், தந்தம், பவழம், வாசனைத் திரவியங்கள், அரிசி, பருப்பு, நறுமணப் பொருட்கள், கருங்காலி மரங்கள், மரப்பிசின் போன்ற பொருட்களையெல்லாம் தென்னிந்தியாவுலேர்ந்து சேகரிச்சு, ஏற்றுமதி செஞ்சாங்க. அதுக்குப் பதிலா அரேபியக் குதிரைகள், சீனப் பட்டு, பர்மிய யானைகள் இங்கே இறக்குமதி ஆச்சு”

“வெறுமன பொருட்களை மட்டும்தான் பரிமாறிக்கிட்டாங்களா?”

“அதெப்படி முடிஞ்சு போகும்? சோழ தேசத்தவங்களும் கிழக்கு நாட்டுக்காரங்களும் மாறிமாறிப் பயணம் செஞ்சப்ப, அவங்களோட ஒட்டிப் பிறந்த உணவு, பண்பாடு, மதத்தை எல்லாம் தூக்கிப்போட்டுட்டு வந்திட முடியுமா?”

“காலம்காலமா நடைபெறும் இதுபோன்ற பரிமாற்றங்கள் தானே புது வளங்களைக் கொண்டுவந்து சேர்க்குது.”

“உலகின் மிகப் பெரிய கோயில் வளாகமான கம்போடியால உள்ள அங்கோர்வாட் கோயில், இந்தோனேசியாவுல உள்ள போரோபுதூர் கோயில்கள் திராவிடக் கட்டிடக் கலையால உத்வேகம் பெற்றுக் கட்டப்பட்டவை. தாய்லாந்து, பாலி தீவுல நடைபெறும் நடனங்கள்ல இன்னைக்கும் ராமாயணக் கதை சொல்லப்படுது.”

“திராவிடக் கட்டிடக் கலை, கடல் தாண்டியும் போயிருக்கா?”

“அது மட்டுமில்ல, உடை அலங்காரத்துலயும் அந்தத் தாக்கம் இருந்திருக்கு. இந்தோனேசிய பத்திக் அச்சு, இந்திய அலங்காரத்தால உத்வேகம் பெற்றதுதான். ஆங்கில பாணிப் பூ அலங்காரமான சின்ட்ஸ், நம்முடைய சின்ட்டில் இருந்தும் பாய்ஸ்லே வடிவமைப்பு அம்பி எனப்பட்ட மங்காய் வடிவத்துல இருந்தும் உருவானவைதான்.”

“அருமை”

“அடுத்து உனக்குப் பிடிச்ச விஷயம் வருது”

“சாப்பாடு பத்தி சொல்லப் போறியா?”

“ஆமா, இந்தோனேசியர்களுடன் சோழ அரசர்கள் பரிமாற்றம் செய்ய ஆரம்பிச்ச பின்னாடி ஆவில வேக வைக்கிற இட்லி மாதிரியான உணவு வகைகள் அதிகமாச்சு. இடியாப்பம், புட்டு மாதிரி ஆவில வேக வைச்ச உணவு வகைகளும் அதுக்குப் பின்னாடிதான் வந்திருக்கணும்.”

“அப்ப இட்லி நம்ம உணவு இல்லையா?”

“இட்லி மாவு இருந்திருக்கலாம். ஆவில வேக வைக்கிற நுட்பம் கிழக்கு நாடுகள்ல இருந்து வந்ததுதான்.”

“அது மட்டுமில்ல, விருந்து முடிச்ச பின்னாடி வெத்தலை போடுறது நம்மளோட பாரம்பரியப் பழக்கம்னு நெனைச்சுக்கிட்டு இருக்கோம், இல்லையா?”

“ஆமா. இன்னைக்கும் தஞ்சை வட்டாரப் பகுதிகள்ல வெத்தலை போடுற பழக்கம் பரவலா இருக்கே.”

“ஆனா, இந்தப் பழக்கம் மலேசியாவிலிருந்து தமிழகத்துக்குப் பரவிச்சுன்னு சொல்றாங்க. கோயில் சடங்குகள்ல வெற்றிலையும் பாக்கும் நுழைஞ்சது, இந்தப் பழக்கம் வேகமாப் பரவ வழிவகுத்திருக்கு செழியன்.”

“நாம அவங்களுக்குக் கலைகளைக் கொடுத்திருக்கோம். அவங்க நமக்குச் சாப்பாட்டக் கொடுத்திருக்காங்க குழலி”

சோழ பரிசுப் பொருட்கள்

சீனாவின் சொங் அரச சபைக்குச் சோழத் தூதுக் குழு பொ.ஆ. 1015-ல் சென்றது. அப்போது சீன அரசருக்குச் சோழ அரசவை வழங்கிய பரிசுப் பொருட்கள்: கண்ணாடிப் பொருட்கள், அலங்காரத் துணிகள், முத்துக்கள், சூடம், யானைத் தந்தப் பொருட்கள், காண்டாமிருகக் கொம்புகள், நறுமணப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், பெருங்காயம், கிராம்பு உள்ளிட்டவை. இதற்குப் பதிலாக 81,800 செப்பு நாணயங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 7-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்

 

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்