ஆண்டின் தொடக்கத்திலேயே அறிவியல் உலகம் களைகட்டி இருக்கிறது. 2019-ல் உலக அளவில் பெரும் தாக்கம் செலுத்தவிருக்கும் அறிவியல் போக்கு குறித்த ஒரு பார்வை:
அறிந்த பகுதிக்கு அப்பால்…
நொடிக்கு 15 கி.மீ. வேகத்தில் விண்ணில் பயணித்துக்கொண்டிருக்கிறது நாசாவின் நியூ ஹொரைசன் விண்கலம். இது 2019 ஜனவரி 1 அன்று ‘2014 MU69’ என்ற விண்பாறையின் அருகே சென்றடைந்துள்ளது.
இந்த விண்பாறை சூரியனிலிருந்து சுமார் 640 கோடி கி.மீ. தொலைவில் நெப்டியூனுக்கு அப்பால் தொலைவில் உள்ள குய்பர் மண்டலத்தில் உள்ளது. இதன் மூலம் சூரியக் குடும்பத்திலிருந்து மிக அதிக தொலைவில் உள்ள பகுதிகளைக் குறித்த தகவல்களை நியூ ஹொரைசான் விண்கலம் திரட்டியுள்ளது.
இதே விண்கலம் ஜூலை 2015-ல் புளூட்டோ அருகே சென்று ஆராய்ந்து பனியைக் கக்கும் எரிமலைகள் உட்பட அதுவரை அறிந்திடாத பல்வேறு வியக்கத்தக்கத் தகவல்களைத் தந்திருக்கிறது.
2014-ல் ஹப்பிள் தொலைநோக்கி கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட (486958) 2014 MU69 என்ற விண்பாறைக்கு “அறிந்த பகுதிக்கு அப்பால் உள்ள பகுதி' என்ற பொருள் தரும் அல்டிமா தூலி (Ultima Thule) என்ற பெயரைச் சூட்டியுள்ளனர்.
ariviyaljpgமரியா, கார்ல் எங்கெல்ப்ரெக்ட்கோள்களுக்கு அப்பால் உள்ள ஒரு பகுதி ‘குய்பர்’ மண்டலம். கட்டுமானப் பணி முடிந்த பிறகு உடைந்த சிறு செங்கற்கள், காலியான பெயிண்ட் டப்பா, சிமெண்ட் போன்றவை அங்கும் இங்கும் சிதறிக் கிடக்குமில்லையா! அதுபோல் சூரியக் குடும்பம் உருவான பின்னர் எஞ்சிய எச்சமே குய்பர் மண்டலத்தில் உள்ள சிறு பொருட்கள் என்கின்றனர்.
புளூட்டோ, ஹௌமியா, மேக்மேக் போன்ற குறு கிரகங்கள் இந்த மண்டலத்தைச் சார்ந்தவையே. வெறும் 35 கி.மீ. x 15 கி.மீ. அளவே உள்ள இந்த விண்பாறை சற்றேறக் குறைய வட்டப் பாதையில் 298 ஆண்டுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றிச் சுழல்வதால் சூரியக் குடும்பம் உருவானபோது இருந்த அதே நிலையில் கலப்பு இல்லாமல் இருக்கிறது எனக் கருதப்படுகிறது. எனவே, இந்தப் பொருளை ஆராய்வதன் மூலம் சூரியக் குடும்பத்தின் கடந்த காலத்தைக் குறித்து மேலும் நுட்பமாக அறிந்துகொள்ள முடியும் எனக் கருதப்படுகிறது.
இதுவரை மனிதன் அனுப்பிய விண்கலங்களில் அதிக தொலைவில் உள்ள வான்பொருள் என்ற சிறப்பை இந்த விண்பாறை பெறுகிறது. இந்தத் திட்டத்தின் முக்கிய விஞ்ஞானி கார்ல் எஸ். எங்கெல்ப்ரெக்ட் (Carl S Engelbrecht), அவருடைய மனைவி மரியா இருவரும் கொடைக்கானலில் பிறந்தவர்கள். அங்கேயே பள்ளியில் படித்தவர்கள். இந்திய பத்திரிகையாளர்களைச் சமீபத்தில் சந்தித்த அவர் தமிழில் பேசி அசத்தியுள்ளார்.
தகிக்கும் ஆண்டு
எல் நினோவால் 2015-ல் தமிழகம், குறிப்பாக சென்னை சந்தித்த பெருவெள்ளத்தை யாராலும் எளிதில் மறக்க முடியாது. இரண்டிலிருந்து 7 வருடங்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக பெருவின் கடற்கரையோரம் வரும் சூடேறிய நீரோட்டமே சுருக்கமாக எல் நினோ எனப்படுகிறது.
எல் நினோவின் தாக்கம் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டலத்தில் கார்பன் மாசு கூடுவதன் காரணமாக ஏற்படும் புவிவெப்பமடைதல் போக்குடன் எல் நினோவும் சேர்ந்து கடந்த நூறு ஆண்டுகளில் மிகக் கூடுதல் சராசரி வெப்பம் கொண்ட ஆண்டாக 2019 ஆண்டை மாற்றும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
கருந்துளைக்குள் உற்றுப் பார்க்கலாம்!
இரண்டு புதிய ரேடியோ தொலைநோக்கிகள் இந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றன. இவற்றின் மூலம் புதிராக இருந்துவரும் கருந்துளைகள் குறித்து நுட்பமான ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும் என்று யேல் பல்கலைக்கழக வானவியல் அறிஞர் டாக்டர் ப்ரியம்வதா நடராஜன் கூறுகிறார்.
ஸ்டீபன் ஹாக்கிங் கோட்பாடு முன்னிறுத்தும் எசஸ் கதிர்கள், ரேடியோ கதிர்கள் போன்ற மின்காந்த அலைகளை ஆராய்ந்து பார்க்கும் ஆற்றல் கொண்ட இவென்ட் ஹொரைசான் தொலைநோக்கி இந்த ஆண்டு செயல்படத் தொடங்கும். அதேபோல சிலி நாட்டின் அடகாமா பாலைவனப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள மில்லிமீட்டர் மின்காந்த அலை ஆய்வு ரேடியோ தொலைநோக்கியும் இந்த ஆண்டு கருந்துளை ஆய்வுகளின் அடுத்தகட்டப் பாயச்சலுக்குக் கைகொடுக்கும்.
சூரியனின் கன்னத்தில் புள்ளி
புதன் கோள் சூரியனைச் சுற்றி வரும்போது சில நேரம் அரிதாகப் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நேர்கோட்டில் அமைந்துவிடும். அப்போது கன்னத்தில் ஏற்படும் சிறு கரும்புள்ளி போல் சூரியனை ஒரு புள்ளியாகப் புதன் கடந்துசெல்வது புலப்படும். இதுவே புதன் இடை மறிப்பு (Transit of Mercury). இந்த ஆண்டு நவம்பர் 11 அன்று இந்த அரிய நிகழ்வு ஏற்படும். இதற்கு அடுத்து 2032 நவம்பர் 13 -ல்தான் அடுத்த புதன் இடை மறிப்பு ஏற்படும். இந்தியாவில் இது தென்படாது.
கங்கன சூரிய கிரகணம்
நீள்வட்டப் பாதையில் நிலவு பூமியைச் சுற்றி வரும்போது, அருகில் உள்ள நிலையில் உருவம் பெரியதாகவும், தொலைவில் உள்ளபோது சற்றே சிறியதாகவும் தென்படும். அருகே உள்ளபோது நிலவின் அளவு பெரியதாக அமைவதால் முழுச் சூரிய கிரகணம் நீண்டு அமையும். தொலைவில் உள்ளபோது சிறியதாக அமைவதால் நிலவால் சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாது.
மையப் பகுதியை நிலவு மறைக்க சூரியனின் விளிம்பு வட்ட வடிவில் வளையல் போல் தென்படும். இதுவே கங்கன சூரிய கிரகணம். டிசம்பர் 26 அன்று கங்கன சூரிய கிரகணம் ஏற்படும். அன்று பிரமிப்பை ஏற்படுத்தும் இந்த கிரகணம் தென் இந்தியாவில் குறிப்பாக, வட தமிழகத்தில் பட்டுகோட்டை, திருச்சி, காரைக்குடி மதுரை, திண்டுக்கல், பழனி, கோவை, கரூர், ஊட்டி போன்ற பகுதிகளில் காலை ஒன்பது மணிக்கு கங்கன சூரிய கிரகணம் உச்ச கட்டத்தில் இருக்கும். இன்றே உங்களுடைய கையேட்டில் இதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
25 mins ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago