காலம்: பொ.ஆ. 100-200, முசிறி
“பழந்தமிழர்கள் இயற்கையோடும் தாவரங்களோடும் எவ்வளவு நெருக்கமா இருந்தாங்கங்கிறத வஞ்சி நகரத்துக்குப் போய் வந்ததன் மூலமா புரிஞ்சுக்க முடிஞ்சது. ரொம்ப நன்றி குழலி”
“நமது மலையாள தேசப் பயணம் இன்னும் முடியல செழியன்”
“வஞ்சி பண்டைய சேரர்களின் தலைநகரம்னா, மற்றொரு புகழ்பெற்ற சேரர் நகரம்-துறைமுகம் முசிறிஸ். அதை நினைவுகூரும் விதமாகத்தான் இப்போ ‘கொச்சி-முசிறிஸ் பியானெல்' எனப்படும் கலைத் திருவிழா கேரளத்தில் கடந்த ஒரு மாசமா கோலாகலமா நடைபெற்று வருது.”
“கலை, இலக்கியத்தைத் தூக்கி வெச்சு கொண்டாடுறதுல நம்ம சேட்டன்களை அடிச்சுக்க முடியாது”
“நீ சொல்றது உண்மைதான். இந்த முசிறிஸ் வேறொண்ணும் இல்ல, சங்க இலக்கியங்கள் சொல்லும் முசிறிதான். பொ.ஆ.மு. 100 தொடங்கி இந்தத் துறைமுகம் உலகப் புகழ்பெற்றதாக இருந்திருக்கு. இந்த ஊருக்கு முசுறி, முயிரிக்கோடு என்னும் பெயர்களும் இருந்திருக்கு. வால்மீகி ராமாயணம், முரசிபட்டணம்னு இந்த ஊரைச் சொல்லுது. சங்க காலத்துக்குப் பிறகு மாகோதைப்பட்டினம்கிற பேரும் இருந்திருக்கு”
“பட்டினம்னா துறைமுகப் பகுதி, கடற்கரை ஊர்களின் பெயரா இருக் கணும். பட்டணம்னா அது நகரத்தை, பெரிய ஊரைக் குறிக்கும். அப்ப இந்த ஊர் துறைமுகமாகவும் நகரமாகவும் ஒரே நேரத்துல இருந்திருக்கு இல்லையா, நம்ம சென்னை மாதிரி?”
“ஆமா செழியன், சுள்ளி அல்லது பேரி எனப்பட்ட ஆறு கடலில் கலக்கும் இடத்தில், இந்த முசிறி இருந்திருக்கு.”
“போன முறை நாம பார்த்த கொங்குப் பகுதி கரூர் மாதிரியே, திருச்சிக்குப் பக்கத்துலேயும் முசிறிங்கிற ஒரு ஊர் இருக்கே.”
“அதுக்கான காரணத்தைத்தான் போன முறையே நாம பேசிட்டோமே”
“அதே மாதிரி இன்னொரு ஒற்றுமை, ஆறுகள் கடலில் கலக்கும் இடங்கள்லதான் அந்தக் காலத் துறைமுகங்கள் இருந்திருக்கின்றன”
“அப்போ முசிறி இருந்த இடத்தின் தற்போதைய பேரு கொடுங்கல்லூர் (கொடுங்கோளூர்). இதுக்கான காரணத்தைக் கடைசில சொல்றேன். மலபார் கடற்கரைப் பகுதியில பெரியாறு கடலில் கலக்கும் இடத்துல இந்தக் கொடுங்கல்லூர் இருக்கு. அன்றைய பேரி ஆறு, பெரியாறுன்னு மருவிடுச்சு”
“சரி, முசிறிஸ் எப்படிப் பிரபலமாச்சு?”
“யவனர்கள் எனப்பட்ட கிரேக்க-ரோமப் பயணிகள் இந்தத் துறைமுகத்துக்கு வந்து பெருமளவில் வணிகம் செஞ்சாங்க. அவங்கதான் முசிறிஸ்னு இந்த ஊரை அழைச்சாங்க. கேரளத்தின் உலகப் புகழ்பெற்ற நறுமணப் பொருளான மிளகை, தங்கத்தைக் கொடுத்து அவங்க வாங்கிட்டுப் போயிருக்காங்க.”
“கேரளத்தின் நறுமணப்பாதை வணிகம் உலகப் புகழ்பெற்றதாச்சே”
“யவனர்கள் மிளகு வாங்கினது தொடர்பா எருக்காட்டூர் தாயங்கண்ணனார் அகநானூற்றின் 149-ம் பாடல்ல சொல்லியிருக்கார். முசிறித் துறைமுகம் ஆழமற்றது. அதனால பெரிய கப்பல்களால கரைக்கு வர முடியாது. தோணிகள்ல மிளகை ஏத்திட்டுப் போய் கப்பல்ல இறக்கிட்டு, தங்கத்தைப் பண்டமாற்றாக வாங்கி வந்திருக்காங்கன்னு புறநானூற்றுப் பாடல்ல பரணரும் விளக்கியிருக்கார். யவனர்கள் பெரும் விருப்பத்தோடு மிளகை வாங்கிட்டு போனதால, அதற்கு யவனப்பிரியான்னு இன்னொரு பேரும் இருந்திச்சாம். எத்தனை இனிமையான பெயர்.”
“சரி, யவனர்கள் கேரளத்தோடு இத்தனை பெரிய வணிகத் தொடர்பு வைச்சிருந்ததற்கு, தொல்லியல் ஆதாரம் எதுவும் கிடைக்கலையா?”
“அது பற்றி ஆராய்ச்சி நடக்குது. முசிறியிலேயே யவனர்கள் தங்கி இருந்ததாகவும் அங்கு அகஸ்டஸுக்குக் கோயில் இருந்ததாகவும் சில குறிப்புகள் சொல்லுகின்றன. அதேநேரம் ‘முசிறி -அலெக்சாண்ட்ரியா வணிக உடன்படிக்கை' யவனர்கள் வணிகம் செய்ததை உறுதிப்படுத்துது. பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டில் இந்த உடன்படிக்கை ஏற்பட்டிருக்கு. இந்த சரக்குப் பரிமாற்றத்தின் மதிப்பு 68,000 ரோமானிய, எகிப்து தங்கக் காசுகளுக்குச் சமமாம்.”
“நம்முடைய நறுமணப் பொருட்கள் உலகை ஆட்சி செய்திருக்கின்றன.”
“உண்மைதான். ஆனா, சோழ தேசத்தின் புகார் துறைமுகத்தைப் போலவே முசிறித் துறைமுகமும் கடல்கோளால் பாதிக்கப்பட்டது. இது பொ.ஆ. 79-ல் ஆகஸ்ட் மாதம் நடந்தது என உலகப் பயணி பிளினி குறிப்பிட்டிருக்கார். அது ஆழிப்பேரலை போன்ற இயற்கைச் சீற்றமாக இருந்திருக்கலாம். அதனாலதான், அந்த ஊருக்கு கொடுங்கோளூர்ங்கிற தற்போதைய பேரு வந்துச்சு. பொ.ஆ. 14-ம் நூற்றாண்டில் பெருவெள்ளத்தால் இந்த ஊர் முழுமையாக அழிஞ்சிருச்சு.”
யாருக்கு உதவும்?
போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 6-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago