போராட்டக் குணத்தைக் கற்பிக்கும் சைனிக் பள்ளி!

By எம்.நாகராஜன்

இந்தியப் பாதுகாப்புப் படைகளான ராணுவம், கப்பற்படை, விமானப் படைகளில் உயர் நிலை அதிகாரிகளாய்த் தேர்ந்தெடுக்கப் படுவதற்காகச் சிறுபிராயத்தில் இருந்தே மாணவர்களைத் தயார்படுத்த மத்திய அரசாங்கத்தால்  1961-ல் சைனிக் பள்ளிகள் நிறுவப்பட்டன.  இந்தியா முழுவதும் 28 சைனிக் பள்ளிகள் உள்ளன. மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து நடத்தும் சைனிக் உண்டு உறைவிடப் பள்ளி திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் செயல்பட்டுவருகிறது.

மத்திய அரசின் பாடத் திட்டத்தின்படி இயங்கும் ஆங்கில வழிப் பள்ளி இது. இங்குப் பாடத்துடன் குதிரை ஏற்றம், நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், மலையேற்றம், விமானம், கப்பல் அமைப்புகள் குறித்துக் கற்றுத் தரப்படுகின்றன.

சி.பி.எஸ்.இ.யில் இணைக்கப்பட்ட இந்தப் பள்ளியில், பயிற்று மொழி ஆங்கிலமாக இருந்தாலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்ற மும்மொழி திட்டம் பின்பற்றப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இங்குப் பயிலலாம். பெற்றோரின் மாத வருமான அடிப்படையில், ரூ.50,000வரை மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகை வழங்கப்படும்.

ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 6-ம் வகுப்பில் சேர, 10-ல் இருந்து 11 வயதுக்குள் இருக்க வேண்டும். 9-ம் வகுப்பில் சேர 13- இருந்து 14 வயதுக்குள் இருக்க வேண்டும். அத்துடன், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8-ம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் 9-ம் வகுப்பில் சேரத் தகுதி உண்டு. இவற்றில் சேர்வதற்குத் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமின்றி  நேர்முகத் தேர்விலும் உடல் தகுதியிலும் வெற்றி பெற வேண்டும்.

எஸ்.சி. வகுப்பினருக்கு 15 சதவீதமும் எஸ்.டி. வகுப்பினருக்கு 7.5 சதவீதமும் படை வீரர்கள், ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படையினரின் குழந்தைகளுக்கு  25 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

அமராவதி சைனிக் பள்ளியின் முதல்வர் குரூப் கேப்டன் ஹர்ஜித் சிங் சிதானா, விஎஸ்எம்.  பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்தவர். 1992-ல் இந்திய விமானப் படையில் சேர்ந்தார். பாட்டியாலாவில் உள்ள தாபர் பல்கலைக்கழகத்தில் பிடெக்., எம்டெக்., பயின்ற இவர்  மனித வள மேம்பாட்டு துறையில் எம்.பி.ஏ., பாதுகாப்புத் துறையில் எம்.ஃபில். முடித்தவர். 2018 குடியரசு தினத்தன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் இவருக்கு விஷிஷ்த்  சேவா விருது வழங்கப்பட்டது

“1961, ஜூன் 23-ல் அன்றைய மத்தியப் பாதுகாப்பு அமைச்சரான வி.கே.கிருஷ்ண மேனனால் முதல் சைனிக் பள்ளி திறக்கப்பட்டது. கிராமப்புறங்களில் இருந்து பொது மக்களில் இருந்து  ஆயுதப்படை அதிகாரிகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஜவாஹர்லால் நேருவும் கிருஷ்ண மேனனும் உணர்ந்தபோது தற்காப்புக் குழுக்கள் அமைக்க  வேண்டும் என்று திட்டமிட்டனர். உயர்நிலைக் கல்வி, பொதுப் பள்ளிகளில் பாடத்திட்ட வளர்ச்சியை வழங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் தேவை என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

ஆகையால், நாட்டில் பள்ளிக் கல்வித் துறையுடன் ராணுவத்துக்குத் தேவையான அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்ற பார்வையில் பொதுப் பள்ளியாக இவற்றைத் தொடங்கினர்.  தேசியப் பாதுகாப்பு என்பதே இதன் இலக்கு.   இதர துறைகளுக்கும் செல்லத் தேவையான கல்வி அறிவும் இங்குப் புகட்டப்படுகிறது. அதே நேரத்தில் சைனிக் பள்ளிகளில் தரம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.” என்கிறார் ஹர்ஜித் சிங் சிதானா.

அமராவதி சைனிக் பள்ளியில் 600 மாணவர்கள் பயில்கின்றனர். தற்போதுவரை மாணவர்கள் மட்டுமே பயிலும் பள்ளிகளாக இவை உள்ளன. தேசியப் பாதுகாப்பு அகாடமி எப்போது மாணவிகளுக்கும் பயில வாய்ப்பளிக்கிறதோ அதே நாளில் சைனிக் பள்ளிகளிலும் மாணவிகள் சேர்க்கை தொடங்கும் என்கிறார் ஹர்ஜித் சிங் சிதானா.

இந்தியாவைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று உண்டு உறைவிடப் பள்ளிகள் குறித்து ஆய்வு நடத்தியது. நாட்டின் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதில் இடம்பெற்றன.

அதில் ஆசிரியர் நலன் மற்றும் வளர்ச்சி, போட்டியை எதிர்கொள்ளும் திறன், நிறுவனத்தின் நற்பெயர், விளையாட்டு கல்வி, வாழ்க்கைக் கல்வி மற்றும் நிர்வாகம், மாணவர்களின் தனிப்பட்ட நலன் பேணுதல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், கட்டமைப்பு, சமூகச் செயல்பாடுகள் எனப் பல்வேறு துறைகளில் பள்ளிகளின் பங்களிப்பு குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

அதில் அமராவதி சைனிக் பள்ளி மாநிலத்தில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 20-வது இடத்தையும் பெற்றுள்ளது. இந்தியாவின் சிறந்த உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஒன்றாக அமராவதி சைனிக் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

ஹர்ஜித்-சிங்-சிதானாjpgஹர்ஜித் சிங் சிதானா

“எத்தனை முறை வீழ்ந்தாலும் எழுந்து நின்று சமூகத்தில் நிலவும் சவால்களைத் துணிச்சலோடு எதிர்கொள்ளும் போராட்டக் குணத்தை சைனிக் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டுகிறது. சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, விசுவாசம் ஆகியவை இங்குத் துளிர்த்தெழும் இளமனங்களில் விதைக்கப்படுகின்றன.

சைனிக் பள்ளி களில் அவர்கள் கற்றுக்கொள்ளும் வாழ்க்கைத் திறன்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கும். என் மாணவர்களிடமிருக்கும் திறனை  வேறு எந்த மாணவரிடமும் ஒப்பிட முடியாது” என்று மிடுக்குடன் சொல்கிறார் ஹர்ஜித் சிங் சிதானா.

சைனிக் பள்ளியில் சேர்க்கைக்கு உரிய நுழைவுத் தேர்வு புத்தாண்டில் ஜனவரி 6 அன்று சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரியில் உள்ள வள்ளலார் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, உடுமலைப்பேட்டையில் உள்ள லூர்த்துமாதா எம்.எச்.எஸ்.எஸ்., அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளி ஆகிய இடங்களில் நடக்கவிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்