அந்த நாள் 05: சிந்துவெளியில் ஆமைக்கறி சாப்பிட்டாங்களா? 

By ஆதி வள்ளியப்பன்

அன்புள்ள செழியா,

உன்னிடமிருந்து பதில் கடிதம் எதுவும் வரலை. வேலையில் மூழ்கியிருப்பாய் என்று நினைக்கிறேன். ஆனா, நான் உனக்கு வாக்கு கொடுத்தபடி சிந்துவெளி பற்றிச் சொல்லாம இருந்திடக் கூடாது, இல்லையா.

போன வாரம் சிந்துவெளிக் கட்டிடங்களைப் பத்திச் சொன்னது உனக்கு சுவாரசியமா இருந்திருக்குமான்னு தெரியலை. ஆனா, சிந்துவெளி நாகரிகத்தின் சாதனைகளான நகரமைப்புக்கும் கட்டிடங்களுக்கும் தேவையான பொறியியல் அறிவு, மிகச் சிறப்பா இருந்திருக்கு என்பதில் சந்தேகமில்லை. இந்த முறை நான் சொல்லப் போற விஷயம் நிச்சயமா உனக்குப் பிடிக்கும். ஏன்னா நான் பேசப் போறது உணவு, உடை பத்திதான்.

சிந்துவெளி செழித்திருந்த பகுதி இன்றைக்குப் பாலைவனமாகவும் ஒட்டகங்கள் உலவும் இடமாகவும் இருக்கு. ஆனால், அன்றைக்கு அந்தப் பகுதி அடர்ந்த காடா இருந்திருக்கு. சிங்கம், வேங்கைப் புலி, சிறுத்தை, குரங்கு, மான், குழிமுயல், மயில், ஏன் காண்டாமிருகங்கள்கூட இருந்துள்ளன.

இந்த உயிரினங்கள் அப்போ இருந்ததற்கு ஆதாரமா, பொம்மைகளும் சிந்துவெளியின் முக்கிய ஆதாரங்களான சதுர வடிவ, சிறு கல் முத்திரைகளும் கிடைத்துள்ளன. அத்துடன் எருது, எருமை, பன்றி, யானை, ஒட்டகம் போன்றவற்றைப் பழக்கி மக்கள் வளர்த்திருக்காங்க.

காடு மட்டுமில்லாம, நாடும் அப்போ செழிப்பா இருந்திருக்கு. சிந்து, அதன் துணையாறுகளில் வெள்ளம் வருவது வழக்கமாக இருந்திருக்கு. அதனால நிலப்பகுதிகளில் வண்டல் படிந்து, மண் வளமா இருந்திருக்கு. கோதுமை, பார்லி, அரிசி, கொண்டைக்கடலை, பட்டாணி, பூண்டு, தேங்காய், வாழை, மாதுளை, பேரீச்சை, வெள்ளரி வகைத் தாவரங்கள், பெர்ரி வகைச் சிறுபழங்கள் உள்ளிட்ட காய்கறிகள், பழங்களை அந்த மக்கள் சாப்பிட்டு இருக்கிறார்கள். இன்றைக்கும் காபூல் மாதுளை, காபூலி சென்னா (வெள்ளைக் கொண்டைக் கடலை) என்று விளம்பரப் படுத்துகிறார்களே, அதற்கான வேர் சிந்துவெளி காலத்திலேயே இருந்திருக்கு.

கடுகு எண்ணெய், நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தி இருக்காங்க. ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன், ஆமை போன்றவற்றின் இறைச்சியைச் சாப்பிட்டிருக்காங்க. ‘ஆமைக் கறியா?' என்று ஆச்சரியமா கேட்காதே செழியா. முதலைக் கறியும் சாப்பிட்டிருக்காங்க. அதோட திராட்சை பயிரிட்டிருக்காங்க என்பதால், நிச்சயமாக அதிலிருந்து மதுவும் தயாரிச்சிருப்பாங்கன்னு நம்பலாம்.

சாப்பாடு மட்டுமில்லாம, துணியும் வயலில் இருந்துதானே வந்தாகணும். அந்த வகையில் உலக நாகரிகங்களில் சாதனை படைச்சது சிந்துவெளிதான். உலகில் முதன்முதலில் பருத்தி விளைவிக்கப்பட்டது அங்கேதான். பருத்தித் துணியாக நெய்யப்பட்டதும் இங்கேதான். பிரகாசமான நிறங்களில் அவற்றுக்கு சாயம் ஏற்றியிருக்காங்க. அந்த வகையில் உலகின் முதல் ஆடை, அலங்காரம் இந்தியத் துணைக்கண்டத்தில்தான் தோன்றியது என்று பெருமையா சொல்லிக்கலாம்.

ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உடைகளையே அணிஞ்சிருக்காங்க. ஒரு பெரும் துணியை இடுப்புக்குக் கீழே சுத்திக்கிட்டு, இடையில் கச்சைக் கயிறுபோல ஒன்றைக் கட்டிக்கிட்டாங்க. இதுதான் அந்தக் கால கீழாடை. இன்னொரு துணியை மேலே தோள்ல போர்த்திக்கிட்டாங்க. கிட்டத்தட்ட இன்றைய சேலையைப் போலிருந்த அதுதான் மேலாடை.

எலும்புகளால் உருவாக்கப்பட்ட ஊசியெல்லாம் கிடைச்சிருக்கிறதால, அன்றைக்குத் துணிகளைத் தைக்கும் நுட்பமும் அவர்களுக்குத் தெரிஞ்சிருக்கணும்னு ஊகிக்கலாம். யானைத் தந்தத்தால் ஆன சீப்பு, பளபளப்பு ஏற்றப்பட்ட வெண்கலக் கண்ணாடி, சவரக்கத்தி போன்றவையும் கிடைச்சிருக்கு.

அந்தக் காலச் சிலைகளைப் பார்க்கும்போது, ஆடை அலங்காரத்தில் அவங்க நிறைய ஆர்வம் செலுத்தியிருப்பதைப் புரிஞ்சுக்கலாம். ஆண்கள், பெண்கள்னு ரெண்டு பேருமே கூந்தல் வளர்த்திருக்காங்க. அதிலும் பெண்கள் கூந்தலை முடிவதில் பல்வேறு பின்னல் முறைகளைப் பின்பற்றி இருக்காங்க. காதுகளைச் சுற்றிப் பெரிய வட்டப் பின்னல், தலைக்கு மேல் பெரிய பின்னல், நீளமான பின்னல்னு நிறைய முறைகளைப் பின்பற்றியிருக்காங்க.

அலங்காரத்துக்குக் கழுத்தணி, வளையல், தோடு போன்றவற்றுடன் தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட தலைப்பட்டைகளில் நீலக்கல், பசுநீலக் கல் போன்ற அரிய மணிக் கற்கள் பதிக்கப்பட்டிருப்பதைத் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிஞ்சிருக்காங்க. கண் மை, மருதாணி, சிவப்பு கிளிஞ்சல் பொடி போன்றவற்றைக் கல் ஜாடிகளில் வைத்து முகத்தை அலங்கரிக்கப் பயன்படுத்தியிருக்காங்க.

இதையெல்லாம் கேட்டுட்டு, பெண்கள் அந்தக் காலத்துலயே வேலை பார்க்காம, அலங்காரம் செய்யுறதுலதான் ஆர்வமா இருந்திருக்காங்கன்னு ஏதாவது பழைய கண்டுபிடிப்பைத் திரும்பவும் சொல்லிடாத. எல்லாக் காலத்துலயும் ஆண்களைவிடப் பெண்கள் அதிகமா உழைச்சுக்கிட்டுதான் இருந்திருக்காங்க. அந்த நாகரிகமும் பண்பாடும் எந்த அளவுக்கு வளர்ந்திருக்குன்னு புரிஞ்சுக்கத்தான் இதையெல்லாம் சொன்னேன்.

அன்புடன்,

குழலி

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்