வரலாறு தந்த வார்த்தை 35: எல்லாம் மேல இருக்கிறவர் பார்த்துப்பார்..!

By ந.வினோத் குமார்

‘சபரிமலையில் பெண்கள்!’ – இதுதான் கடந்த சில வாரங்களாக சூடான செய்தி. கோடிக்கணக்கான சூடங்களை ஒன்றாகச் சேர்த்துக் கொளுத்தினால் ஏற்படும் சூட்டைவிட, இந்த விவகாரம் அதிகமான வெப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பெண்களைத் தெய்வமாக வழிபடும் சமூகம், இந்தியச் சமூகம். பெண்கள் மட்டுமே வழிபடுகிற கோயில்கள்கூட உண்டு. அப்படியான நாட்டில், ‘சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் வரக் கூடாது’ என்ற கட்டுப்பாடு, சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் நீக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும், தீர்ப்பை மதிக்காமல் ‘சபரிமலைக்குப் பெண்களை அனுமதிக்க முடியாது’ என்று பலர் வன்முறையில் இறங்கியிருக்கிறார்கள். கோயிலை மூடக்கூடத் தயாராக இருக்கிறார்கள்.

அவர் கையில்!

இந்நிலையில், நீங்கள் ‘இனி என்னவாகும்?’ என்று கேள்வி கேட்டால், ‘எல்லாம் மேல இருக்கிறவர் பார்த்துப்பார்’ என்பதே பதிலாக இருக்கும்.

நிற்க, இப்போது சொன்ன, ‘எல்லாம் மேல இருக்கிறவர் பார்த்துப்பார்’ என்ற வாக்கியத்துக்கு நிகராக, ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. அது, இது: ‘In the lap of the gods’. அதாவது, ‘எல்லாம் அவர் கையில்!’ என்று பொருள்.

நீங்கள் ஒரு செயலைச் செய்கிறீர்கள். அந்தச் செயலின் விளைவு வெற்றியாகவோ தோல்வியாகவோ நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாம். அந்தச் செயலின் விளைவுகள், உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. உங்களால் முடிந்த அளவுக்கு ஒரு விஷயத்தைச் செய்துவிடுவீர்கள். அதற்கான பலனை, உங்களுக்கும் மேலான ஒரு சக்தியிடம் விட்டுவிடுவீர்கள்.

அந்த ஒரு சக்தி, கடவுளாகவும் இருக்கலாம் அல்லது உங்கள் மேலதிகாரியாகவோ உங்கள் வீட்டம்மாவாகவோ உங்கள் குடும்ப மருத்துவராகவோ கூட இருக்கலாம். சில நேரம், இந்த மூவருமே, கடவுளாகவே மாறிவிடும் அபத்தம் அல்லது அற்புதம் நிகழ்ந்துவிடும் சாத்தியங்கள் நம் வாழ்க்கையில் நிறைந்திருக்கின்றன, இல்லையா..?

வரலாற்றில் முதன்முறையாக, இந்தச் சொற்றொடரை கிரேக்கக் கவிஞர் ஹோமர், ‘தி இலியட்’ எனும் படைப்பில் பயன்படுத்தியிருந்தார். மனிதர்களுக்குத் துன்பம் வந்தால் கடவுளிடம் போகலாம். கடவுளுக்கே துன்பம் வந்தால், அவர் யாரைப் பார்த்து, இந்தக் கட்டுரையின் டைட்டிலைச் சொல்வார்..?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE