‘எல்லோருக்கும் கல்வி’ என்ற கனவு இன்னமும் நினைவாகாத நிலையில் மாணவர்களின் சேர்க்கைக் குறைவையும் நிதிப் பற்றாக்குறையையும் காரணம் காட்டி 3,000 தொடக்கப் பள்ளிகளை மூட முடிவெடுத்துள்ளது மாநில அரசு.
1980-களில் பள்ளிகளைத் தொடங்குவதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. புதிய பள்ளியைத் தொடங்க அங்கு ஏற்கெனவே இருக்கும் பிற பள்ளிகளிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். இதன் காரணமாக ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் மாணவர் களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அன்று பள்ளிகளின் எண்ணிக்கை இருந்தது.
தனியார் பள்ளிகள் இன்று காளான்களைப் போல முளைத்துள்ளன. அரசுப் பள்ளிகள் அந்தக் காளான் கூட்டத்தில் தொலைந்து விடுகின்றன என்பது அச்சுறுத்தும் நிதர்சனம். குறைகள் பல இருந்தாலும் பள்ளிக் கட்டணம் கழுத்தை நெரித்தாலும் மக்களின் விருப்பத்தேர்வாகத் தனியார் பள்ளிகளே இன்று உள்ளன. அரசுப் பள்ளிகளில் குறைகளைக் களையாமல், மாணவர்கள் சேர்க்கைக் குறைவு என்ற காரணத்தால் அரசும் தனது பள்ளிகளை மூட யத்தனிக்கிறது.
பள்ளிகளின் நிலை
தமிழகத்தில் மொத்தம் 58,333 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 37,211 அரசுப் பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் பள்ளிகள். அந்தப் பள்ளிகளில் முறையே 55 லட்சம், 27 லட்சம், 49 லட்சம் என மொத்தம் ஒரு கோடியே 32 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
சராசரியாக ஓர் அரசுப் பள்ளியில் 148 மாணவர்களும் ஒரு தனியார் பள்ளியில் சராசரியாக 395 மாணவர்களும் படிக்கின்றனர். அதாவது தனியார் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அரசுப் பள்ளியைவிட இரு மடங்குக்கும் அதிகமாக உள்ளது. நிதி இல்லை என்றோ மாணவர்கள் சேர்க்கைக் குறைவு என்றோ எந்த ஒரு தனியார் பள்ளியும் மூடப்பட்டதாகத் தெரியவில்லை.
பள்ளிகள் ஏன் மூடப்படுகின்றன?
1991-ல் பிரதமரான நரசிம்மராவ் ஆட்சியில் இந்தியாவின் எல்லைக் கதவுகள் உலகமயமாக்கத்துக்குத் திறந்துவிடப்பட்டன. அதன் வழியாகப் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைந்தன. அந்த நிறுவனங்களுக்கு அறிவும் திறனும் வாய்ந்த மனித வளம் மிகுதியாகத் தேவைப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இருந்த மனித வளத் திறனும் தொழில் அறிவும் அவற்றுக்குப் போதுமானதாக இல்லை. கல்வியின் தரத்தையும் தொழில் அறிவையும் உயர்த்த வேண்டியது முக்கியத் தேவையாக இருந்தது.
தொடக்கக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் 1993-ல் மாவட்ட ஆரம்பக் கல்வித் திட்டத்தை’ (டி.பி.இ.பி.) நரசிம்மராவ் தொடங்கினார். அந்தத் திட்டத்தின் கீழ் அரசுத் தொடக்கப் பள்ளிகளின் கட்டமைப்பையும் கற்பித்தலையும் மேம்படுத்துவதற்காக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கியது. அந்தத் திட்டம் எதிர்பார்த்த பலனை அளித்தது. நம் நாட்டின் குறிப்பாக, தமிழ்நாட்டுப் பட்டதாரிகள் வெளிநாடுகளில் இருக்கும் ஐ.டி. நிறுவனங்களில் பணிவாய்ப்புப் பெற்றனர்.
2001-ல் அந்தத் திட்டத்துக்கு வாஜ்பாயின் ஆட்சியில் ‘சர்வ சிக்ஷ அபியான்’ என்ற புது வடிவம் கொடுக்கப்பட்டது. 2010-ல் மன்மோகன் சிங் ஆட்சியில் ‘ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷ அபியான்’ எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தொடக்கப் பள்ளிகள் மட்டுமல்லாமல்; மேல்நிலைப் பள்ளிகளும் மத்திய அரசிடமிருந்து நிதி உதவி பெற்றன.
கடந்த ஜனவரியில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அந்த இரண்டு திட்டங்களையும் ஒன்றிணைத்து ‘சம்கர சிக்ஷ அபியான்’ திட்டத்தை ஏற்படுத்தியது. பள்ளிகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கு அது கூடுதல் நிபந்தனையை விதித்தது. 15 மாணவர்களுக்குக் குறைவாக இருக்கும் தொடக்கப் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்க முடியாது என்று அறிவித்தது.
1990-கள்வரை மத்திய அரசின் நிதி உதவியின்றிப் பள்ளிகளை நடத்திய மாநில அரசு, இன்று நிதி உதவி கிடைக்காததைக் காரணம் காட்டி 3,000 பள்ளிகளை மூட முடிவு செய்துள்ளது. மூடப்படும் அந்தப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவோ மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவோ முயலாமல் அவற்றை மூடுவதை எளிதான வேலையாக அரசு கருதுகிறது. அவ்வாறு மூடுவதை அவமானமாக அது கருதவில்லை.
இது முடிவின் தொடக்கமா?
அரசு இயந்திரம் தனது பள்ளிகளைச் சரியாக நிர்வகிக்கவில்லை என்ற மட்டில் இதை நாம் கடந்து சென்று விட முடியாது. தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் கற்பித்தலில் தேர்ந்தவர்கள், அனுபவஸ்தர்கள். அவர்களுடன் தனியார் பள்ளி ஆசிரியர்களை ஒப்பிடவே முடியாது.
மேலும் அரசுப் பள்ளிகளில் கல்வியும் இலவசமாக வழங்கப்படுகின்றது. இதை எல்லாம் மீறி, தனியார் பள்ளிகள் வெற்றிகரமாகச் செயல்படுவதும் அரசுப் பள்ளிகள் சரிவைச் சந்தித்து இழுத்து மூடப்படுவதும், தனது பள்ளிகளைத் திறன்பட நிர்வகிக்க அரசுக்கு விருப்பமில்லையோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. ஒருவேளை இந்த ஐயம் உண்மையாக இருக்குமேயானால், அதுவே அரசுப் பள்ளிகளின் முடிவுக்கான தொடக்கப்புள்ளி.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago