ஆங்கிலம் அறிவோமே 228: ‘சும்மா அதிருதில்லே’ சங்கதியல்ல

By ஜி.எஸ்.எஸ்

கேட்டாரே ஒரு கேள்வி

“தாறுமாறாகக் கிறுக்குவதை ஆங்கிலத்தில் எந்தச் சொல்லில் வெளிப்படுத்துவார்கள்?”

தாறுமாறாகக் கிறுக்குவதை Doodling என்று குறிப்பிடுவார்கள்.  எதையோ யோசித்துக்கொண்டு தாளில் எதையோ கிறுக்குவது. சிலருக்கு doodling செய்தால்தான் புதிய ஐடியாக்கள் பிறக்கும்.

*************

Mane – Main – Mien – Mein

Mane என்றால் பிடரி (ஆண் சிங்கத்தின் கழுத்து, தலைப் பகுதியில் உள்ள தலைமுடிப் பகுதி).

Main என்றால் முக்கியமான. Main என்ற சொல்லின் பொருளுக்குச் சமமான சொற்களாக வேறு பல ஆங்கிலச் சொற்களைக் கூறலாம்.  அப்படி அரை டஜன் சொற்களை யோசியுங்கள் பார்க்கலாம்.

Mien என்றால் ஒருவரது தோற்றம் அல்லது நடத்தை.  இது அவரது status அல்லது ‘மூடை’ நினைவுபடுத்துவதாக இருக்கும்.  With your noble mien, you will be definitely selected by the Company. The angry mien faded from him and confusion set in.

இனப்படுகொலைக்குப் பெயர்போன ஹிட்லர் எழுதிய நூல் ‘Mein Kampf’. ஜெர்மானிய மொழியில் இதற்குப் பொருள் ‘எனது போராட்டம்’.

*************

Caravan என்பது மனிதர்களைக் குறிக்கிறதா அல்லது வாகனத்தைக் குறிக்கிறதா?

Caravan என்பது ஒருவகை வண்டி (பலவகை வண்டிகள் என்றுகூடச் சொல்லலாம்!).  ஜட்கா வண்டிகூட caravan-தான்.  பல்லக்கு கூட caravan-தான்.  தேர்தலின்போது எல்லா வசதிகளும் அடங்கிய ஒரு வாகனத் தில் ஏறியபடி வி.வி.ஐ.பி.க்கள் பல ஊர்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்வார்களே அந்த வாகனமும் caravanதான்.

‘மனிதர்களை’ என்ற சொல்லை வாசகர் பயன்படுத்தியதற்கும் ஒரு நியாயம் உண்டு.  ஊர்வலமாகவோ கூட்டமாகவோ செல்லும் பயணிகளையும் caravan என்பார்கள்.

இந்த இடத்தில் pageant என்பதற்கும், parade என்பதற்கும் உள்ள வேறுபாட்டைக்கூட அறிந்துகொள்ளலாமே.  Pageant என்றால் வண்ணமயமான ஊர்வலம். அதில் ஆடம்பரமும் உற்சாகமும் இருக்கும். The rich man’s party was a pageant of wealth. இளம் பெண்களுக்கான அழகிப் போட்டியையும் pageant என்பதுண்டு.

Parade என்பதும் ஊர்வலம்தான். அதில் கட்டுப்பாடு இருக்கும். அது சீராக இருக்கும். Military Parade என்பதுபோல.

englishjpg100 

“பூமியின் வடிவம் வட்டம் இல்லையாமே,  அது oval வடிவம் கொண்டதாமே!? Oval என்பதற்குச் சரியான பொருள் என்ன?”

வட்டம் என்பது இரு பரிமாணங்களைக் கொண்டது.  எனவே, உலகம் உருண்டையானது அல்லது கோளம் போன்றது எனலாம். ஆனால், பல வருடங்களுக்கு முன்பே உலகம் முழுமையாக உருண்டையானது அல்ல என்பதைக் கண்டறிந்தார்கள்.  அந்த வடிவத்தை ellipsoidal என்பார்கள்.  அதாவது ஆரஞ்சுப் பழம்போல மேற்புறமும், கீழ்ப்புறமும் கொஞ்சம் அமுங்கி இருக்கும்.

ஆனால், பூமியை ஓவல் என்று கூற முடியாது.  ஓவல் என்பது முட்டையின் வடிவம் – அதாவது ஒரு முனை கொஞ்சம் நீளமாக இருக்கும். ஒருவருக்கு oval face என்றால் அவர் முகம் வட்டமாகவும், முகவாய்ப் பகுதி மட்டும் கொஞ்சம் அதிக அளவு நீட்டிக் கொண்டிருக்கும் என்று பொருள்.

கிரிக்கெட் மைதானம் வட்ட வடிவமாகவே பொதுவாகக் காணப்படுகின்றன. என்றாலும் லண்டனிலும், இங்கிலாந்திலும் உள்ள பல கிரிக்கெட் மைதானங்கள் ஓவல் வடிவில் உள்ளன.

*************

Main என்பதற்குச் சமமான சொற்களை யோசித்து விட்டீர்களா?  எனக்குத் தோன்றிய சில சொற்கள் இவை.

Principal, key, chief, leading, head, fundamental, major, essential, dominant, crucial.

இப்போது கீழே உள்ள சொற்களுக்கு முன்பாக மேலே உள்ள வற்றில் எந்த சொற்(கள்) பொருந்தும் என்பதையும் யோசிக்கலாமே.

Operation

Issue

Person

Right

Subject

Conversation

Factor

Strategy

சம வார்த்தைகள் (synonyms) என்றால் அவற்றை எப்போதுமே ஒன்றுக்கு பதிலாக இன்னொன்றைப் பயன்படுத்தி விடமுடியாது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.   Major அல்லது crucial operation என்று பயன்படுத்துவதுபோல் head operation என்பதைப் பயன்படுத்துவதில்லை (அப்போது முக்கிய அறுவைசிகிச்சை என்பதை அது குறிப்பதில்லை.  தலையில் செய்யப்படும் அறுவைசிகிச்சை என்றாகிவிடுகிறது). 

சொல்லப்போனால் operation என்பதை செயல்பாடு என்ற பொருளில் பயன்படுத்தும்போது அதன் முன்னொட்டான adjective மாறுபட வாய்ப்பு உண்டு. பொருத்தும்போது நீங்கள் இந்தக் கோணங்களிலும் சிந்திக்கலாம்.

*************

“இடம், பொருள், ஏவல் அறிந்து’’ என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் கூறுவது?      

ஆங்கிலத்தில் இதை ‘In the right situation’ என்றோ  ‘at the right time’ என்றோ ‘depending on the sensitivity’ என்றோ குறிப்பிடலாம்.

வீட்டில் தனியாக இருக்கும்போது குடும்ப உறுப்பினர்கள் பேசிக் கொள்ளும் குடும்ப விஷயங்களைப் பணியாட்கள் இருக்கும்போது பகிர்ந்துகொள்வது புத்திசாலித்தனமா?

தவிர  ஒரு சூழலில் நாம் விரும்பும் ஒன்று வேறொரு சூழலில் நாம் விரும்பாததாக இருக்கக் கூடும்,  கார்ட்டூனில் இருப்பது போல.

*************

“Vibe என்பது vibration என்பதன் சுருக்கம்தானே?”

Vibe என்பது ‘சும்மா அதிருதில்லே’ சங்கதியல்ல.  ஒரு இடம், சூழல் அல்லது இசை ஏற்படுத்தும் உணர்வைத்தான் (mood) vibe என்கிறார்கள்.  His music has a soothing vibe என்றால் அந்த இசை மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது என்று பொருள்.  Do not go there – that place has bad vibes என்றால் அந்த இடம் அமைதியைக் கெடுக்கக்கூடியது என்று பொருள்.

போட்டியில் கேட்டுவிட்டால்?

His ___________ is not liked by others.

obedience

obesity

obduracy

accuracy

ஒருவனின் குறிப்பிட்ட தன்மையைப் பிறர் விரும்பவில்லை என்பது அந்த வாக்கியத்தின் பொருளாகிறது.

எந்தத்தன்மை பிறரால் விரும்பப்படாது போகும்?

Obedience என்றால் கீழ்ப்படிதல்.

Obduracy என்றால் பிறர் என்ன கூறினாலும் தன்னை மாற்றிக் கொள்ளாமல் பிடிவாதமாக இருத்தல்.

Accuracy என்றால் துல்லியம்.

ஒருவர் obedience கொண்டவராக இருப்பதும், accuracy-யோடு தன் பணிகளைச் செய்வதும் பிறருக்குப் பிடிக்கும்.

Obesity என்றால் உடல் பருமன்.  இது சிலருக்குப் பிடிக்கலாம்.  சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்.

மேற்படி கோணங்களை ஆராயும்போது obduracy என்பதுதான் பலராலும் விரும்பப்படாத ஒரு தன்மையாக இருக்க வாய்ப்பு உண்டு. எனவே, His obduracy is not liked by others என்பதுதான் சரி.

சிப்ஸ்

# Work out என்றால் என்ன?

உடற்பயிற்சி செய்வது. Work out every day to keep healthy.

# Adding fuel to the fire என்றாலும், adding insult to injury என்றாலும் ஒரே பொருளா?

ஆம். எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது.

# Mango என்ற சொல் எந்த மொழியிலிருந்து வந்தது?

நம்ம மொழிதான்.  மாங்கா.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்