இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயக முறையை முன்மாதிரியாக வைத்து அந்தப் பள்ளியின் மாணவர் களுக்குப் பொறுப்புகள் வகுத்துத் தரப்படுகின்றன. உதாரணத்துக்கு, மதிய உணவு சார்ந்த பொறுப்புகளைத் திட்டமிடுதல், ஆலோசித்தல், கூடுதல் தேவைகளுக்கு ஆசிரியர் களிடம் கோரிக்கை வைத்தல் ஆகிய செயல்களில் உணவுக் குழுவைச் சேர்ந்த மாணவர்கள் ஈடுபடுகிறார்கள்.
உணவில் போதிய சத்துகள் உள்ளனவா, சுகாதாரம் கடைப்பிடிக்கப்படுகிறதா, உணவு வீணாகாமல் இருக்க, சுவையாக இருக்க என்ன தேவை உள்ளிட்டவை சார்ந்த வேலையில் அவர்கள் ஈடுபடுவார்கள்.
தோட்டக் குழு, வாரம் இரண்டு நாள் ஏதேனும் கீரை அல்லது காய்கறிகளை மதிய உணவுக் குழுவுக்குப் பள்ளி வளாகத் தோட்டத்தில் பயிரிட்டுத் தருகிறது. வகுப்புப் பாடத்தில் இயற்கை வேளாண்மை, மூலிகை தொடர்பான பாடங்கள் வரும்போது அது குறித்த விவாதம், கலந்துரையாடலில் இந்தக் குழுவினர் ஈடுபடுகிறார்கள்.
காலைக் கூட்டம் நடத்தும் குழுவின் வேலை காலைக் கூடுகையில் ஒவ்வொரு வகுப்புப் பிரதிநிதிகளின் பங்களிப்பைத் தொகுத்து ஒருங்கிணைத்துக் கொடுப்பது. ஒவ்வொரு குழுவுக்கும் தினம் தினம் வேலை இருக்கிறது. தோட்டக் குழு மாலையில், உணவுக் குழு மதியத்தில்… ஒவ்வொரு நாளும் ஆசிரியர்களின் பொறுப்புகளிலும் மாணவர்கள் சேர்ந்து செயல்படுகின்றனர்.
இவ்வாறு செயல்படுகிறது திண்டிவனம் ரோசனை பகுதியில் உள்ள தாய்த்தமிழ் நடுநிலைப் பள்ளி. ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வாழும் பகுதி இது. நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், பிற கூலித் தொழிலாளர்கள் வாழும் இப்பகுதி மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2000-ம் ஆண்டில் 21 மாணவர்களுடன் தொடங்கப்பட்டதுதான் இந்தப் பள்ளி.
தாங்கும் கரங்கள்
தாய்மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்வியை எடுத்துச்செல்லும்போது, கல்வியின் இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட பள்ளிகளில் இதுவும் ஒன்று. திண்டிவனம் நகர மற்றும் ஊரகக் கல்வி மேம்பாட்டுக் கழகம் என்ற அறக்கட்டளை மூலமாக இந்தப் பள்ளியை நடத்திவருகிறார் பூபாலன். எட்டாம் வகுப்புவரையுள்ள இந்தப் பள்ளியில் தற்போது 194 குழந்தைகள் படித்துவருகின்றனர்.
தமிழ்வழிக் கல்வியோடு மாறுபட்ட கற்பித்தல் முறைகளைப் பின்பற்றுதல், சமூக உணர்வை மாணவர்களுக்கு ஊட்டுதல், ஆங்கிலத்தில் பேச, வாசிக்கச் சிறப்புப் பயிற்சி அளித்தல் என இந்தப் பள்ளியின் செயல்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
“பள்ளி வகுப்பறையில் ஒரு காலைப் பொழுதில் பாடம் நடந்துகொண்டிருக்கும்போது திடீரென்று மாணவர் ஒருவர் மயங்கி விழுந்துவிட்டார். காலைச் சிற்றுண்டி சாப்பிடாததும் உடல் ஆரோக்கியமின்மையும்தான் காரணம். அன்று எங்கள் பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று விசாரித்தபோது கிட்டத்தட்ட பாதிப் பேர் சாப்பிடவில்லை என்பது தெரியவந்தது.
வீடுகளில் மாலை மட்டுமே சமைப்பதும் அதிகாலையில் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிடுவதையும் அறிந்து மதிய உணவு வழங்க ஆரம்பித்தோம். இதற்கெல்லாம் போதுமான நிதி எங்களிடம் இல்லை. ஆனாலும் இன்றுவரை தினசரி எங்களுடைய பள்ளிக் குழந்தைகளுக்கு மதியச் சாப்பாடு அளிக்க முடிகிறது என்றால் சமூக அக்கறை கொண்ட பலரின் உதவிதான் காரணம்.
பள்ளிக்கு உதவுபவர்களின் பட்டியல் நீளமாக இருந்தாலும் அகரம் அறக்கட்டளை, சக்தி தேவை அறக்கட்டளை, வேதவள்ளியம்மாள் அறக்கட்டளை உள்ளிட்ட பல அமைப்புகளும் தனி நபர்களும் எங்கள் பள்ளியைத் தாங்கும் கரங்கள்” என்கிறார் பள்ளியின் தாளாளர் மு. பூபாலன்.
நூலகத்தில் திளைக்கும் துளிர்கள்
இங்கு மாண்டிசோரி முறையில் 50 குழந்தைகள் ஆரம்ப வகுப்புகளில் பயின்றுவருகின்றனர். அவர்களுடைய வகுப்புக்குத் தேவையான கற்பித்தல் கருவிகளும் அதிநவீனக் கற்றல் கருவிகளும் நன்கொடை மூலமாக வாங்கியவை.
பாடம், பாடம் தொடர்புடைய செயல்பாடுகள், பயணங்கள், கதைகள், அனுபவங்கள்…இப்படிப் பாடத்திட்டம் பல பரிமாணங்களில் இங்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இலக்கிய மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம் என வாரம் ஒரு மன்றச் செயல்பாடு வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெறுகிறது. பாடத்திட்டத்தில் உள்ள பகுதிகளையும் மன்றங்கள் மூலம் அரங்கேற்றுகின்றனர்.
இலக்கிய மன்றத்தில் பாடல், கதைகள், உரைகள் நிகழ்த்துவது, புதிர் போடுவது என நீள்கிறது. அறிவியல் மன்றத்தில் கண்காட்சி, வாழ்க்கை முறையில் அறிவியல், செய்துகாட்டுதல், அறிவியல் அறிஞர்களைப் பற்றிப் பேசுதல், அறிவியல் மேஜிக் என இருக்கிறது.
“இரண்டாம் வகுப்புப் பாடமான நூலகம், ஆறாம் வகுப்புப் பாடமான நேருவின் கடிதம் பாடங்களைக் கற்பிக்கும்போது பள்ளி நூலகத்துக்கு மட்டுமின்றி பொது நூலகத்துக்கும் மாணவர்களை அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இப்படியாகத் திண்டிவனம் கிளை நூலகத்துக்கு மாணவர்களை அழைத்துச் சென்று 86 மாணவர்களை உறுப்பினராக்கினோம்.
அதோடு அரசாங்கத்தின் நூலகம் பள்ளி இணைப்புத் திட்டத்தின் மூலம் வாரம் ஒரு முறை 100 புத்தகங்களைத் திண்டிவனம் பொது நூலகத்திலிருந்து ஆசிரியர்கள் எடுத்துவருகின்றனர். இவையல்லாமல் பள்ளி நூலகமும் மாணவர்கள் வாசிப்பை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அவர்கள் படிக்கும் புத்தகங்கள் பற்றி இலக்கிய மன்றத்தில் பகிர்ந்துகொள்வதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
‘இயற்கை’, ‘மூலிகை’, ‘காடு எம் வீடு’, ‘எனக்கு றெக்கை முளைத்தால்’ போன்ற பாடங்களுக்காக மூலிகைத் தோட்டத்தைப் பார்வையிட ‘ஆரோவில்’ சென்று வந்ததோடு, எங்கள் தோட்டத்தில் மூலிகை வைத்தோம். மூலிகைப் பயன்பாட்டுக்காக மழை நேரத்தில் பள்ளியில் கஷாயம் வழங்குவோம். எங்கள் பள்ளியின் தண்ணீர், மூலிகை வேர்களைக் கொண்டு சுத்திகரிக்கப்படுகிறது. மாணவர்களை மரம் வளர்க்கும் செயல்பாட்டில் ஈடுபடுத்தியதோடு விழிப்புணர்வு ஊர்வலமும் சென்று வந்தோம்” என்கிறார் தலைமையாசிரியர் மரிய அந்தோனி.
மாதம் ஒரு முறை பள்ளியில் பெற்றோர்கள் சந்திப்பு நடக்கிறது. அதேபோல மாணவர்களின் வீடுகளுக்கு ஆசிரியர்கள் சென்று மாணவர்களையும் பெற்றோரையும் சந்திக்கும் நிகழ்வும் மாதம் ஒரு முறை நடைபெறுகிறது. இத்தகைய செயல்பாடுகளால் மாணவர்களைத் தனிப்பட்ட வகையில் புரிந்துகொள்ளவும் அவர்களுடைய குடும்பச் சூழல், நிகழ்வுகளை ஆசிரியர் அறிந்துகொள்ளவும் முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியர்-மாணவர் இடையிலான இடைவெளியைப் போக்குவதாகவும் உள்ளது.
பள்ளியைத் தொடர்புகொள்ள: 9894207407
கட்டுரையாளர்: கல்வி செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
ஓவியம்: கோ. ராமமூர்த்திமு. பூபாலன்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago