கிராமத்தில் ஆசிரியராக இருந்து கிராமக் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும் என்பது பார்வதியின் சிறுவயதுக் கனவு. அது அவரது 60 வயதில் சாத்தியமாகியிருக்கிறது. 25 ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்த அவர், இந்தியாவுக்குத் திரும்பியதும் தன் கனவைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்.
சேலம் அருகே ஜனப்பானூரில் நிலம் வாங்கி சிறு அறை எழுப்பி வாழத் தொடங்கியிருக்கிறார். அங்குள்ள மக்களின் கோரிக்கை காரணமாக அங்கேயே ஆங்கிலம் பயிற்றுவிக்கத் தொடங்க, பின்னர் அதுவே சூரியா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிக்கூடமானது.
நம்மால் பள்ளிக்கூடத்தில் எதைச் சாத்தியப்படுத்த முடிகிறதோ அதையே முக்கியமானதாகப் பார்க்கிறேன் என்கிறார் பார்வதி. பெற்றோர்களின் தேவை, அவர்களுடைய கல்வி பற்றிய புரிதல், அரசாங்க விதிமுறைகள் ஆகியவற்றை மிகப் பெரும் சக்தியாக உணர்ந்திருக்கிறார் அவர்.
கிராமத்துக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, குழந்தை ஆங்கிலப் பள்ளி யில் படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண் பெற வேண்டும், விவசாய வேலைக்கோ கூலி வேலைக்கோ செல்லும் நிலைமை வந்துவிடாமல் பெரிய வேலைக்கு போக வேண்டும் என்பதே விருப்பமாக இருந்திருக்கிறது. பள்ளிக் கட்டணமான 6,000 ரூபாயைக் கூட கட்ட முடியாத சூழலில் தான் பெற்றோர் இருக்கிறார்கள். இவ்வளவுக்கும் அவர்கள் கடுமையான உழைப்பாளிகள்.
கதையாக மாறும் பாடம்
குழந்தைகளுக்கு ஆங்கிலம், தமிழ் இரண்டையும் மாற்றி மாற்றிக் கற்றுத் தரும் உத்தியை இங்கே பயன்படுத்துகிறார்கள். சமச்சீர் கல்வியில் ஒரு பாடத்தை எடுத்துக்கொண்டு அப்பாடத்தைக் கதையாக மாற்றுகிறார்கள். ஒவ்வொரு பாடத் தொடக்கத்திலும் கதையிருக்கும். அக்கதை முடிந்ததும் உரையாடலாக மாறும். அதற்கடுத்து வாசிப்பு, எழுத்து, அவற்றைப் பற்றிய குறிப்பிட்ட செயலில் ஈடுபடுதல் என்று கற்றல் செயல்பாடு நீளும். குறிப்பாக, மொழிப் பாடங்களை இணைத்தே செயல்படுத்தும்படியாகக் கற்பித்தல் முறையை அமைத்திருக்கிறார்கள்.
ஆசிரியர் தமிழில் பேசினால் மாணவர்கள் அதற்கான ஆங்கிலப் பொருளைக் கூறவும் விளக்கவுமான புரிதலை உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம் என்று சொல்லும் பார்வதி, பாடங்கள் புரிதலுக்கும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியதற்குமானவை என்கிறார். அதைக் கொண்டு சேர்க்கும் வேலையில் கவனமாக இருப்பதாலும் தொடர்ச்சியாக வேலை செய்வதாலும் இது சாத்தியப்படுகிறது என்று கூறுகிறார்.
உணவு சம்பந்தமான பாடத்தைக் குழந்தையின் வளர்ச்சியுடனும் சுய ஆரோக்கியத்துடனும் சாப்பிடும் தினசரி உணவுடனும் தொடர்புபடுத்துதல் அவசியம். படித்த பாடம் வகுப்பறையுடன் முடிந்துவிடாமல் தான் என்ன சாப்பிடுகிறோம், எதைச் சாப்பிட வேண்டும் என்ற புரிதலைத் தரவும் இயல்பாகப் பின்பற்றக்கூடியதாக மாறவும் வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் இது மிகக் கடினமானதாக இருந்திருக்கிறது. அதேபோல் அன்றாட நிகழ்வுகளில் மறைந்துள்ள கல்வியின் குறிக்கோள்களையும் எடுத்துப் பேசுவதாகச் சொல்லும் பார்வதி, ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார்.
“ஒரு முறை ஒரு குழந்தை என்னிடம் வந்து கொய்யாப் பழம் பறிக்கவா என்று கேட்டான். பசிக்கிறதா? என்றேன். இல்லை. பழம் பழுத்துவிட்டது என்று பறித்தான். பறித்த கொய்யாவைத் துண்டு போட்டு எல்லோருக்கும் கொடுத்தான்.” இப்படி, வீடு அல்லது பள்ளியில் அவன் இயல்பாகக் கற்றுக்கொள்ளும் செயல்படுத்தும் விஷயங்களை முக்கியமான கற்றல் என்பதை அடையாளப்படுத்துகிறோம். என்கிறார் பார்வதி.
இந்திய வரைபடத்தைக் கற்பிக்க, ஒரு ஆட்டின், மரத்தின் படத்தை வரைந்து தொடங்குகிறார். பின்னர் வீட்டுக்கும் பள்ளிக்குமான வழி. ஆசிரியர் தன் வீட்டிலிருந்து பள்ளிக்கான வழியை வரைந்துகாட்டுகிறார். பள்ளியிலிருந்து பேருந்து நிலையம். அங்கிருந்து பக்கத்து ஊர்…. இடங்களைக் குறித்தல், பெயரை எழுதுதல் இப்படியாக மாவட்டத்துக்கு நகர்கிறார்.
குடும்ப வரைபடத்தில் தொடங்கி தெரு, ஊர் பஞ்சாயத்து என நகர்வதால் குழந்தைகளும் அவற்றை எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள். பாடங்களைப் புரிய வைப்பதை நாங்கள் எளிமையாக்கப் பார்க்கிறோம். சொந்தமாகக் கதை எழுதும்போது நம்பிக்கையோடு செயல்படும் மாணவர்கள் மதிப்பெண்ணுக்காகத் தேர்வு எழுதத் திணறுகிறார்கள். ஒரு சுதந்திரமான பள்ளியாக இருப்பதால், மாணவர்கள் தங்கள் கஷ்டத்தை ஆசிரியருடன் பகிர்கிறார்கள்.
ஆங்கிலக் கதையை நிறுத்தி தமிழில் சொல்லுங்கள் என்று அவர்களால் கேட்க முடிகிறது. அதேபோல் ஆசிரியருக்குமே கதையைக் கொண்டுசெல்வது,கதை மூலமாகக் கற்பித்தல் செயல்பாடுகளைக் கொண்டுசெல்வது ஆகியவை சுலபமாக உள்ளன. ஆங்கிலத்தில் சுதந்திரமாகக் கதை சொல்லல் நடைபெற இன்னும் அனுபவம் தேவைப்படுகிறது.
வீட்டிலும் தொடரும் பாடம்
பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் மாலை 7 மணி முதல் எட்டு மணிவரை டி வி பார்ப்பதில்லை. குழந்தைகளுக்காக எதையும் செய்ய அவர்களால் முடிகிறது. குழந்தைகள் வரைவதைப் பார்ப்பார்கள், முடிந்தால் உடன் வரைவார்கள்; படிக்கச் சொல்லி கேட்பார்கள், பள்ளியில் என்ன, எப்படி நடந்தது என ஆங்கிலத்தில் கூறச்சொல்லி கேட்பார்கள். அவர்கள் வேலையிடங்களில் நடந்ததைப் பற்றிப் பேசுகிறார்கள், படிக்கச் சொல்லி கேட்கிறார்கள், நோட்டைக் காட்டச் சொல்லி கேட்கிறார்கள். இதெல்லாம் பெற்றோருடன் பேசும்போது சாத்தியப்படுகிறது.
மிகச் சாதாரணம் என்று எண்ணுகிற விஷயங்கள் பற்றிய மதிப்பை எடுத்துக் கூறுகிறார்கள் ஆசிரியர்கள். பெற்றோர்களுக்கும் சரி மாணவர்களுக்கும் சரி புரிதலை ஏற்படுத்த நாம் ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டியுள்ளது என்று கூறும் தலைமையாசிரியர் சுகந்தி, நம் பேச்சைவிட வாழ்ந்துகாட்டுதல் பெரும் உதவியாக உள்ளது என்கிறார்.
பள்ளிக்கு உதவுவதற்கான சிந்தனைகள், செயல்பாடுகளை வெளியிடங்களிலிருந்து பெற்றபோதும், ஆசிரியர்களாக அப்பகுதியினரே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தகைய ஆசிரியர்களின் புரிதலையும் திறனையும் மேம்படுத்துவதையும், அவர்கள் மூலம் கல்வியை எடுத்துச்செல்வதையும் மாற்றத்துக்கான அம்சங்களாகப் பார்க்கிறேன் என்கிறார் பார்வதி.
தன் ஊர்ப் பிள்ளைகளுக்கு என்ன முடியும், என்ன வேண்டும், எப்படிப் புரியவைக்க முடியும் என்பதை அவர்களால் நம்மைவிட சுலபமாகச் செய்ய முடிகிறது என்கிறார் பார்வதி. பள்ளியில் 43 மாணவர்கள்தாம். ஆனால், பெற்றோர் - ஆசிரியர் உழைப்பு என்பது கூடிக்கொண்டே செல்கிறது என்பதையும் நினைவூட்டுகிறார்.
பார்வதியுடன் சுகந்தி, ரேணுகா, சங்கீதா, கலைவாணி ஆகியோரும் ஆசிரியர்களாகச் செயல்படுகிறார்கள்; மற்ற பொறுப்புகளையும் இவர்களே மேற்கொள்கிறார்கள். கல்வியியல் பட்டப்படிப்பு முடித்து அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் வேலை பார்த்த அனுபவங்கள் தங்களுக்கு இருந்தாலும், இப்பொழுதுதான் முழுமையான ஆசிரியராக இருக்கக் கற்றுக்கொண்டுள்ளோம் என்கிறார்கள் அவர்கள். எங்கள் ஆளுமையில் ஏற்பட்டுள்ள மாற்றம், குழந்தைகளின் கற்றலில் வெளிப்படுவதை உணர்வதாகச் சொல்லிப் பூரிப்படைகிறார்கள்.
வாரம் ஒரு முறை ஆசிரியர்களாகக் கூடி பாடத்திட்டத்தைத் தயாரிக்கிறார்கள், ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் உரையாடுகிறார்கள், மாணவர்களுக்குத் தேவைப்படும் திறனை அடையாளம் கண்டு அதை வளர்த்தெடுக்கும் உத்திகளைக் கண்டுபிடித்து எடுத்துச் செல்கிறார்கள். இப்படியான செயல்பாடுகள் வழியே ஒரு கூட்டுப்பணியாகக் கற்றலைத் தரும் பள்ளியாகச் செயல்படுகிறது சூர்யா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி.
பள்ளியைத் தொடர்புகொள்ள: 9789160611 | www.suryaschool.weebly.com
கட்டுரையாளர்: கல்வி செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago